பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, July 19, 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி VII

"லக்ஷ்மி ராமாயணம்" 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)


அம்பரீஷன் செய்திகள்

‘மேதம்’ யாகம் தொடங்கின னாம்  
அயோத்தி யாண்ட அம்ப ரீஷன்!
புருடவதை’ க்கு ‘நரன்’ வேண்டி               (புருஷவதை, நரபலி)
தேடியலைந் தனனாம் காடு களில்             222

நறுமண மலர்சூழ் சோலை யொன்றில்
நற்றவ ரசீகன் வாழுந் திருந்தான்.
கோமகன் அவரிடம் தேவையைக் கோரினான் – அவர்தம்
குமரர்கள் மூவரும் முன்வந்தார் வருவதாய்.   223

முன்னவனை முனியும், இளவலைத் தாயும்
தன்னவ னென் றுரிமைக் கொண்டாட,
பெற்றவன் துன்பந்தீர்ந்திட பொருள்தரச் சொல்லி,
கொற்றவனோடு சென்றனன் நடுமகன் ‘சுனச்சேபன்’  224

அவ்வழி சென்றவர் உச்சிப் போதினில்
நாட்கடன் செய்திட தனியே பிரிந்தனர்.
அவ்விடம் மாமனாம் கௌசிகனைக் கண்டு,
துயர்பட வணங் கினன் சுனச்சேபன்.          225

‘வருத்தத்தின் காரணம் யாதெ’ன்றான் முனி,
‘அறமுணர் மேலோய்! எந்தாயும், தந்தையும்,
பொருள்பல பெற்றுவ் வேந்தனுக்கு – எமை
விற்றே யுதவி புரிந்தனர்’. என்ன             226

தமக்கை பதியுடன் செய்ததை யறிந்தவன்,
‘உமக்கினி துயரிலை! நின்னுயிர் தடுப்பேன்’ சொல்லி,
‘வேந்தொடு உங்களில் எவர் போவீர்?’ என
கோரினன் புதல்வரை, மறுத்தகன்றனர் அனைவருமே. 227

கண்க ளிரண்டும் சிவப் பேற,
நெஞ்சம் புழுங்கிய கௌ சிகனும்,
நற்செயல் மறுத்து, சொல்தட்டும் புதல்வரை
உறுதுய ரடையும் வேடராய் சபித்திட்டார்.       228

கௌசிக புதல்வர்கள் நூற்று வருள்
வசிட்டனின் எரிவிழி மடிகலா நால்வரும்,
வேடராய்மாறி காட்டிடை சென்றதும், மருமகனுக்கு
மந்திர மிரண்டை உபதேசித் தார்முனி – பின்     229

அரசனோடு போவாய் ‘மருமகனே!  – இம்
மறையோது உனை யூபத்தில் பிணைக்கையில்,                       விண்ணவர் வந்திடுவர்; யாகமும் நிறைவெய்தும்;
நின்னுயிர்க் கூறுண்டாகாது!’ என்ன, தொழுதனன் மாமனை. 230                                                                                 *யூபத்தில் பிணை யுண்ட சுனச்சேபன் *(யூபம் – வேள்விக்கு பலியிடுபவரை கட்டும் தறி) 
மறைமுனி யுரைத்த மந்திரம் செபிக்க,
கருடன், அன்னம், ரிடபம் மீதில்
திருமால், பிரும்மன், உரித்திரன் வந்தனர்.        231

வெள்ளானை, ஆட்டுக்கிடா, எருமைக்கடா மேல்
இந்திரன், அக்கினி, யமனும் வந்தனர்.
யாகத் துடனிவனு யிரும் காத்தனர் – பின்
கௌசிகன் தவஞ்செய்ய வடதிசை யடைந்தான்.   232

நாசிதனில் விரல்வைத்து, பல்பரு வங்கள்
ஓங்காரம் தியானித்தான் கௌசிக முனிவன்.
மூலக்கனல் தாக்கியதால் கொழுபுகை சூழ
நிலைகுலைந்தன மூவுலகும் உச்சி பிளவுண்டு!    233

இருள் ஒருங்கி உலகெங்கும் பரவினபடியால்
சூரியக்கிரணம் உட்புகவே சிரமப் பட்டதாம்
திரிவ, நிற்ப எல்லாமும் அஞ்சிநடுங்கிற்றாம்.
தேவர்மாரும் செய்வதறியா திகைத்து விட்டாராம். 234

   தேவர்கள் கௌசிகன் முன் தோன்றி வரமளித்தல்

கமலமலர் வீற்றிருக்கும் நான்முகன் பிரம்மனும்,
கருடவாகனன், துளசியணிந்த திரு மாலும்,
கங்கையுடன், பிறைமதிதரித்த இடபவாகன சிவனும்,
வச்சிரா யுதம் கொண்ட இந்திரனும்,               235

தேவர் களுடன்வந்து, கௌசிகன் நோக்கி,
‘வேதம் கரைகண்ட வித்தகர், நின் அல்லால்
வேறில்லை’ என்றதும், இருகரம் கூப்பி,
நற்றெண்ணம் கைகூடிற்றென்று மகிழ்ந்தனன் கௌசிகன்.  236

அரும் பாடுபட்டு தான்பெற்ற தவப்பலன்களை
அரை நொடி உணர்ச்சியால் செலவழித்தான்.
ஒவ்வொரு திசைசென்றும், பல் லாண்டு
பெருந்தவம் பலசெய்த மாதவத் தோன்!            237

‘முன்னம் நிகழ்ந் தவை ஈதானென்றும்,
வித்தகன் தன்னருள் பெற்ற தல்லால்
யாதுள அறம் இனி பெறுக! வென
ஈறிலா சதானந்தன் கூறினான் குமரரிடம்          238

மாதவன் வரலாறு அறிந்து கொண்டு
வியந்தனர் வீரர்கள் இரு வருமே!
வீழ்ந்து வணங்கினர் சதா நந்தனை
விடை பெற் றவர் விலகினராம்!                   239

        இராமபிரான் சீதையை நினைத்திரங்கல்

முனியுடன், தம்பியும் பள்ளி யெய்தபின்,
கனிந்த இருள்போல் நிறமுடை ராமனும்,
இருளும், நிலவும் உடனிருக் கையிலே,
தையலும், தானுமாய், தனித்திருக் கலானான்.       240

விண்ணிருந்து நீங்கிய மின்னற் கொடி,
பெண்வடிவம் கொண்டு வந்தாற் போல்,
கண்ணுள்ளும், கருத்துள்ளும் காண லுற்றான்.
எண்ணத்தில் வேறொன்றும் இலாதா னான்.         241

உள்ளக் கமலத்துள் உறைந்த தினால் – அவள்
என்றும் கமல முறையும் திருமகளோ?
வெள்ளைப்பாற் கடலென கண் ணுடையாள்
கருவிழிதான் எந்தன் பாம் பணையோ?             242

பார்க்கும் பொருளெல்லாம் அப்பெண்ணாய் தோன்ற
தோற்றம் தழுவுதற் ககப்படா விடினும்,
மீண்டும் அவளுரு காணும் தருணம்
கிட்டுமோ வென ஏங்க லுற்றான்.                  243

கரும்புவில் லெடுத்த மன் மதனும்
மலரம்பு மழை தொடுத்த தினால் – என்
மனவலி மையும் அழிந்ததுவோ? – அம்
மங்கை நினைவை அகற்று தற்கு!                  244

நிலவொளி விடமாகி, அவர்மனம் அரித்திட
வெள்ளை நிறமுடை விடமு முண்டோ! – என்றும்,
நல்வழி யல்வழி யென்மனம் செல்லாதே!
இவ்விதம் நேரஅக் கன்னியேகாரண மையமிலை!   245

 சந் திரமண்டலம் மறைந்த வளவிலே
சூரியோ தயத்தால் கமலங்கள் மலர்ந்ததாம்.
கதிரவன் வருடிட கண்ணயர்ந் தவன் - பின்
கம்பீரமா யெழுந்து யாகசாலை யடைந்தான்.        246
                    
             குலமுறை கிளத்துப் படலம்

இராமனின் குலப் பெருமை பற்றிய
வரலாறு இயம்பிடும் இப் படலம்
குலமுறை கிளத்திய படலம் எனும்
குலமுறை கிளத்துப் படல மாம்.                   247

முடிச்சனகன் பெருவேள்வி முடித் திட்டார்.
இடிக்குரலில் முரசெங்கும் ஒலித் ததுவாம்.
சந்திரன்தோய் மனையடுத்த மணி மண்டபத்தில்,
இந்திரன்போல் வீற்றிருந்தார் சனக முனி.           248

முனிவரோடு ராமனையும், அவன் தம்பியையும்,
உபசரித்துத் தனதருகில் அமர்த்திக் கொண்டார்.
உயர்குலத்து மைந்தர்களின் முகவடிவு முகந்து,
‘இவர் யாவர்?’ உரைத்திடுமின் எனக் கேட்டார்.      249

பெருதகைமை தசரதனின் புதல்வ ரிவர்.
விருந்தினராய் நும்வேள்வி காண வந்தார்.
அரிதான உன்வில்லும் காண உள்ளார்.
அவர் குலம்பற்றி கூறிடுவேன்! கேள்நீயென்றார்.     250

சூரிய வம்சத்து முதல்புதல்வன் மனு!
மனு முதலாய் தசரதன் ஈறாய் பதினெழுவர்.
‘பிருது’ வென்பான் மனுவடுத்த ஓரரசன்.
வரிசிலையால் நிலமடந்தை முலைசுரந்தோன்.      251

பிருது பெயரால் பூமித்தாய் பெற்றதுதான்
‘பிருத்வி’ எனச் சொல்கிறது வரலாறு!
பின்னர் பிறந்த முன்னோராம் இட்சுவாகு.- இவன்
தன்பெயரால் குலம்வழங்கும் சிறப்பு பெற்றோன்.    252                                 
பிரமன் தந்த வரமொன்றால் அரங்கனையே
விமானத் துடன் பிரதிஷ்ட்டித்தான் அயோத்தியிலே!
பின்னாளில் விபீடனுக்கு இராமன் அளித்த
அப்பெருமான் திருவரங்கில் தாபிதமாயி னனாம்.    253

தேவர்க்கும், தானவர்க்கும் போர்மூண்ட முன்னாளில்,
ஆற்றானான் இந்திரனும் திருமாலின் தாள்பணிந்தான்.
‘புரஞ்சயனாய்’ ரவிகுலத்தில் பிறந்திடு வோம்.!
துணைகொள்க! துயர் கொல்க! என்ன               254

புரஞ்சயனைப் புரந்தன ராம் விண்ணவர்கள்.
‘இந்திரனே வாகனமாய் வருவதா கில்
புரிந்திடுவேன் போர்!’ என்றவன் கூற,
எருதானான் இந்திரன்! எதிரிகளும் மாய்ந்தனர்!      255


இந்திர வாகனன், காகு த்தன்
என்றா னான் புரஞ் சயன்!
இவன்வம்ச வழி பிறந்த ராமனுமே
‘காகுத்தன்’ என்றானான் என்னாளுமே!              256

‘நிமி’ யென்று சிலஏடு குறிக்கின்ற
இவன் குலத்து முன்னோர் ஒருவன்,
பாற்கடல் கடைந் தமுதம் யெடுத்து,
மரணத்தை இந்திரனு மெய்தாமல் செய்தானாம்     257

பகை மறந்த புலியும், மானும்,
ஒருதுறையில் நீருண் ணும் வண்ணம்
அரசாண்ட ஒர் மன்னன் ‘மாந்தாதா!’ – அடுத்து,
அசுரர் வென் றம ராவதிகாத்தவன் ‘முசுகுந்தன்’      258

மென் புறாவின் மண்ணுயிர்க் கீடாய்த்
தன்னுயி ரீந்தான் ‘சிபி’ சக்ரவர்த்தி,
சிவனின் சடை யிருந்து, நதிகங்கையை
புவிக்குக் கொணர்ந் தவன் ‘பகீரதன்’                 259

குலப் பெருமை மிகப்பெற்றோர் பலருண்டு!
சிலர்பற்றி கூறுதலே சிலாக்கிய மாகும்.
கடல்சூழ் உலகை கைநெல்லிக் கனியாக்கி,
பெருவேள்விதனை குறைவின்றி முடித்தவர்,         260

சந்திரனை வென்றவர்; உருத்திரனை சாய்த்தவர்;
இந்திரனை ஜெயித்தவரென எத்தனையோ மன்னருண்டு   
மற்போரின் வடிவினன் தான் அஜனென்பான்!
புயவலிமை கொண்டவனின் புத்திரனே தசரதனாம்.   261

அயன்புதல்வன் தசரதனை, அறியாதார் எவருமில்லை,
அவர் பெற்றார் தவப்புதல்வர் நால்வரையும்.
அவர் பெருமை நயந்துரைத்தல் - அந்
நான் முகற்கே எளிதின்றி அரிதா கும்.               262

அறிந்தபடி உரைக்கின்றே’ னென்றார்.
தருமத்தின் கவசமா யிருந்த தசரதன்,
மகவின்றி வருத்தப்பட, கலைக்கோட்டு முனியருளால்
புத்திரகாமேட்டி யாகஞ் செயலானான்.               263

மறை நான்கு அனையர்க ளாய்
மகன் நான்கு பெற்றி ட்டான். – இவர்க்கு
உபன முடித்து, மறைகலை பயிற்று,
ஆக்குவித்தவர் ஞானபிதா வசிட்ட முனி.             264

எம்வேள்விக் கிடையூறாம் அரக்கர் தம்மை
அழித்த கற்ற அழைத்துவந்தேன் யென்னுடனே!
தக வனத்தில் புகும் முன்னம் எம்மெதிரே,
தலைப் பட்டாள் ஒர் அரக்கி ‘தாடகை’யும்.            265

இவன் தொடுத்த ஓரம்பு உலைக்களத்தின்
செந்தீயாய், அவள் உரமுருவி, மண்ணுருவி,
மலைச்சிகரமாய் தலைக் குவிக்க – என்
வினைமுடித்து, இவ்விட மழைத்து வந்தேன்.         266

அரிதிற்பெற்ற படைக்கலன்கள் பலவீந்தேன் – என்
தவப்பயனால் நானிவர்க்குக் குற்றேவல் புரிகின்றேன்.
திருவவதாரச் செயலாக அகலிகையை உயிர்ப்பித்தான் – ஈதிவனின்
வரலாறும், புயம் வலியும்’ என்றுரைத்தார்.            267

(மேலும் வளரும்)


No comments:

Post a Comment

You can give your comments here