பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, July 15, 2017

கயிலைக் காட்சி கண்ட அப்பர்

       கயிலைக் காட்சி கண்ட அப்பர் பெருமானின் மனநிலையின் வெளிப்பாடு!
திருநாவுக்கரசர் தன் வாழ்நாளின் முதிய வயதில் தன் பூதவுடலோடு கைலாயம் செல்ல விரும்பி தெலுங்கு, கன்னடம், மாளுவம், இலாடதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளைக் கடந்து காசியை அடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு பகலாய் காடு மேடு, மலை, மணல் பகுதிகளைக் கடந்து நடந்து செல்கிறார். அப்படி நடந்ததால் அவருடைய திருவடிகள் தேய்ந்து போயின. கால்கள் நடக்கும் சக்தியை இழந்தன. குழந்தைகள் போல கால்கள், கைகளைத் தரையில் ஊன்றி தவழ்ந்து செல்லலாயினர். அதனால் அவரது கைகளும் தேய்ந்தன. எலும்புகள் தேய்ந்தன. எதுநேர்ந்தாலும் பின்வாங்காமல் கைலை நாதனை தரிசிக்காமல் திரும்புவதில்லை எனும் மனவுறுதியோடு இருந்தும் உடல் ஒத்துழைக்க மறுத்து ஓய்ந்து சரிந்தது.

       அப்பர் பெருமான் மேலும் சிலகாலம் பூவுலகில் வாழ்ந்து தீந்தமிழ்ப் பாமாலைகள் பாடவேண்டுமென்று திருவுளம் கொண்ட கயிலை வாசியான சிவபெருமான் ஒரு முனிவர் வேடம் தாங்கி, அருகேயோர் தடாகத்தினை உருவாக்கி அப்பர் முன்னால் வந்து நின்றார்.

       இறைவன் அப்பரை நோக்கி, “அங்கங்கள் சிதைய இக்கொடுங்கானகத்தில் தாங்கள் வந்தது எதைக் கருதி?” என்று வினவினார்.

       “இறைவனைத் திருகயிலையில் கண்டு தரிசித்து இன்புறவே” என்றார் அப்பர் பெருமான்.
       “திருக்கயிலை மானுடர் சென்றடைதற்கு எளிதோ? இயலாத செயலை முயன்று பார்த்தல் சரியல்ல, திரும்பிச் செல்லுங்கள், அதுவே தக்கது” என்றார் முனிவராக வந்திருக்கும் சிவபெருமான்.

       முனிவர் சொற்களால் வருத்தமுற்ற அண்ணல் திருநாவுக்கரசர் சொல்கிறார்; “எனை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என்று உறுதிபட கூறுகிறார்.

       அந்தக் கணம் முனிவர் வடிவில் வந்த ஈசன் அங்கிருந்து மறைந்து அசரீரியாய் அப்பரைப் பார்த்துச் சொல்கிறார். “நாவினுக்கரசனே! எழுந்திரு!” என்று ஈசன் சொன்ன மாத்திரத்தில் அப்பர் உடல்நலம் கைவரப்பெற்று எழுந்து பணிவோடு வேண்டுகிறார். “ஐயனே! கயிலையில் நின் திருக்கோலம் நண்ணி நான் தொழுதிட நயந்து அருள்புரி!” என்று.

       அசரீரியாய் ஐயன் சொல்கிறார், “நாவுக்கரசரே! இந்தத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து யாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்பாயாக!” என்று.

       அவ்வாறே அப்பர் அந்தத் தடாகத்தில் மூழ்கித் திருவைந்தெழுத்தை ஓதியபடி கண் திறந்தபோது, தான் திருவையாற்றிலுள்ள பொய்கையில் இருப்பதை உணர்ந்து எழுகிறார். அங்கு எழுந்து ஆனந்தக் கண்ணீர் சொரிய ஐயாறப்பனை வணங்கும் போது அங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் சக்தியும் சிவமுமாய் காட்சியளிக்கின்றன. ஐயாறன் ஆலயம் கயிலை மலையாய்க் காட்சி தருகிறது. ரிடப வாகனமேறி ஐயனும் அம்மையுமாய்க் காட்சி அளித்தபோது அப்பர் ஆனந்தக் கூத்தாடி தரிசனம் செய்கிறார். ஐயனைப் பாடினார், மகிழ்ந்தார், வணங்கினார்.

       ஐயன் தானிருந்த கயிலைக் காட்சியை அப்பருக்கு மறைத்தருள, அடியார் திகைத்து இதுவும் உந்தன் திருவருளே எனத் தெளிந்து ஒரு பதிகம் பாடத் தொடங்குகிறார். அதுதான் “மாதர்ப் பிறைக் கண்ணியானை” எனத் தொடங்கும் அற்புதமான தேவாரம்.

                             அப்பர் பாடல். பண் காந்தாரம்.

“மாதர்ப் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்” எனும் பாடலைப் பாடி இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்ட போதே சிவனும் சக்தியுமாகத்தான் எல்லா உயிர்களையும் படைத்தான் எனும் உண்மையைக் கண்டு மகிழ்ந்து பாடுகிறார்.

“கங்கையையும், பிறையும் அணிந்த பெம்மான் மலைமகளாம் பார்வதி அம்மையோடு இருக்குமிடம் தேடி மலர்களும் மங்கல நீராட குடங்களில் நீரும் சுமந்து செல்வார் பின்னால் அடியேனும் காலடி மண்ணில் எங்கும் படாமல் ஐயாற்றுத் தலத்தை யான் அடைகின்ற பொதில் ஆண் யானை தன் பெண் துணையுடன் வரும் காட்சியைக் கண்டேன். இந்தக் காட்சியில் ஐயன் திருப்பாதம் தரிசனம் செய்தேன், இதுநாள் வரை கண்டறியாதவற்றைக் கண்டேன்.

ஐயனையும் அம்மையையும் பாடிப் பரவிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நான் உலக நாயகன் உறையும் ஐயாற்றை அடைகின்றபோது கோழி தன் துணையோடு கூடிக் களித்து வருவதைக் கண்டேன், அங்கே ஐயனின் திருப்பாதம் கண்டேன்.

முகம் மலர பாடிப் பரவி ஏந்திழையாளொடும் எரிப்பிறைக் கண்ணியினானைத் தரிசித்து மகிழ்ந்து தெளிந்த நீரோடையோடு கூடிய ஐயாற்றை அடைகின்றபோது வரிக்குயில் தன் பேடையோடு ஆடி வருவதைக் கண்டேன். அங்கே ஐயனின் திருப்பாதம் கண்டேன், இதுநாள் வரை கண்டு அறியாதன கண்டேன்.

பிறையணிந்த பெம்மானும் இறைவியுமாய் காட்சியளிக்கும்போது பல்மலர் தூவி மனம் குளிர தொழுவேன், பூத்துக் குலுங்கும் ஐயாற்றின் சோலைகளூடே நான் செல்லும்போது சேவல் தன் இளம் பேடையோடு ஆடி வருவதைக் கண்டேன், ஈசனின் திருவடிகளைக் கண்டேன், அங்கு கண்டறியாதன வெல்லாம் கண்டேன்.

ஏடுமதிக் கண்ணியானை ஏந்திழையாளொடும் கூடியிருக்கும் காட்சியக் காண காடு மலைகளைத் தாண்டு கைகளைத் தொழுதுகொண்டு ஆடிக்கொண்டு நான் ஆடலரசன் ஆளும் திருவையாற்றை அடைகின்றபோது மயில் தன் பேடையுடன் கூடிப் பிணைந்து அசைந்து வருவது கண்டேன். ஆங்கே இறைவனது திருப்பாதம் கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

குளிர்ந்த பார்வை கொண்ட ஈசன் தையல் நல்லாளுடன் இருக்கும் காட்சியைப் பார்த்து மனம் உருகி பாடிக் கொண்டு அண்ணல் உறைகின்ற ஐயாற்றை அடைகின்றபோது வண்ணப் பறவையாம அன்றில் தன் இணையோடு சேர்ந்து வருவதைக் கண்டேன், ஈசனின் இணையடி தரிசனம் கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

பரமேஸ்வரனை மலைமகளோடும் இணைந்து பாடி மகிழ்ந்து வாய் நிறைய புகழ்பாடிக்கொண்டு கழலணிந்த ஈசன் உறையும் ஐயாற்றினை நான் அடைகின்றபோது இடிகுரலில் உறுமிக் கொண்டு வரும் காட்டுப் பன்றி தன் இணையுடன் இணைந்து வருவதைக் கண்டேன். கண்டறியாதனவைகள் எல்லாம் கண்டேன்.

ஐயனையும் அம்மையையும் பாடிப் பரவுதற்கு பொழுது புலருமுன் எழுந்து மலர்களைக் கொய்துகொண்டு பொன்னும் மணியும் நிறைந்து கிடைக்கும் ஐயாற்றை அடைகின்றபோது கருங்குரங்கு தன் பேடையோடு ஆடிக்கொண்டு இணைந்து வருவதைக் கண்டேன், ஈசன் திருப்பாதம் கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

முற்பிறைக் கண்ணியினானும் மொய்குழலாளொடும் இருக்கும் காட்சி காண பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நான் ஐயாற்றை அடைகின்றபோது நாரை தன் துணையோடு இணந்து வருவது கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

குளிர்ந்த கண்களுடைய ஈசன் தன் தேவி தேமொழியாளொடும் இருக்கும் காட்சியைப் பாடிக்கொண்டு என்று நினது திருவருள் கிட்டும் என்று நான் திருவையாற்றை அடைகின்றபோது பைங்கிளி தன் பேடையோடு ஆடிப் பறந்து வருவது கண்டேன், கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

வளர்மதிக் கண்ணான் தன் வார்குழலாளொடும் இருக்கும் காட்சியை என் கடைக் கண்களால் பார்க்க முடியாதா என்று ஏங்கி அளவற்ற அன்போடு நான் திருவையாற்றை அடையும்போது காளை தன் இணையோடு மகிழ்ந்து வருவது கண்டேன், கண்டறியாதன வெல்லாம் கண்டேன்.


திருஞானசம்பந்தர் திருப்பழனத்திலிருந்து புறப்பட்டு காவிரியின் வடகரையோடு திருவையாற்றை வந்தடைகிறார்கள். ஞானக்குழந்தை வரும் செய்தியறிந்து ஊரார் தெருவை அலங்கரித்து தோரணங்கள் கட்டி வாயிலில் நீர் தெளித்துக் கோலமிட்டு மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். நந்தியம்பெருமான் அருள்பெற்ற திருநகராம் திருவையாற்றை வணங்கிப் போற்றிப் பாடிய பனுவல் இது.

No comments: