பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 17, 2017

ஸ்ரீமத் ராமானுஜர்

                                                            
            (தஞ்சாவூர் தியாகபிரம்ம சபாவின் சார்பில் மாதந்தோறும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு மகான் அல்லது கடந்த கால இசை மேதைகளின் வரலாற்றை நினைவுகூர்ந்த பின் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அந்த வழியில் சென்னை திரு வீரராகவன் அவர்களின் இசை நிகழ்ச்சி ராமானுஜர் நினைவாக நடத்தப்பட்டது. அப்போது ராமானுஜரை நினைவுகூர்ந்து நான் நிகழ்த்திய உரையின் சுருக்கம் இது.)

நமது பாரத தேசத்தில் எத்தனையோ மகானுபாவர்கள் தோன்றி, செயற்கரிய சாதனைகளைப் புரிந்து மனிதகுல வரலாற்றில் அழியாத இடம் பெற்றுச் சென்றிருக் கின்றனர். மனித சமுதாயம் மேம்படவும், ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டு நமது புராதன வேத வேதாந்தங்களுக்குப் புத்துயிர் ஊட்டி புதுமை கண்ட ஆன்மீகப் பெரியோர்கள் பலர் அத்தகைய மகான்களாக இந்த பூமியில் அவதரித்திருக்கின்றனர். நமது பாரத சமுதாயத்தில் சமூக நியதி என்பதும் ஆன்மீக நியதி என்பதும் ஒன்றொக்கொன்று எதிரெதிர் திசைகளில் பயணிக்கக் கூடியவை. அப்படி ஆன்மீகப் புரட்சி செய்த முப்பெரும் ஆச்சார்யார்களை நாம் வணங்கி புனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சங்கரர், ராமானுஜர், மாத்வாச்சாரியார் ஆகியோர். வேதாந்த விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர் ராமானுஜர். இவர் பிறந்த ஆண்டில் வரலாற்றறிஞர்கள் சில வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.  இவர் பிறந்த ஆண்டு1017 என்று தெரிகிறது. ஆனால் அதற்கும் பின்னால் 20 முதல் 60 ஆண்டுகள் கழித்து இவர் பிறந்திருக்க வேண்டுமென்கிற கருத்தும் உண்டு.

            இவர்களில் இராமானுஜர் பிறந்து ஆயிரமாவது ஆண்டினை இப்போது நாம் உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக அவர் தோன்றிய இந்த புண்ணிய பூமியான தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அவருடைய சித்தாந்தத்தின் சாரத்தை விரிவாகத் தெரிந்து கொள்ள பல வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன, எனினும் அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், அவர் வாழ்க்கையின் நோக்கத்தையும் அதில் அவர் பெற்ற வெற்றி தோல்விகள் பற்றியும் ஒரு சிறிது இந்த ஆயிரமாவது ஆண்டில் தெரிந்து கொள்வது வைணவத்தின் அரிச்சுவடியைப் படித்துத் தெரிந்து கொள்வது போலத்தான். எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டும், அப்படி இராமானுஜரைத் தெரிந்து கொள்ள ஒரு தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.

            இனி ஸ்ரீராமானுஜர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பார்க்கலாம். அவர் வாழ்க்கை வரலாறு நீண்ட நெடிய வரலாறு என்பதால் இங்கு அதன் முக்கியமான சில பகுதிகளை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சென்னை காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் எனும் திவ்ய க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு 1017 ஆம் வருஷத்துக்குச் சரியான பிங்கள வருஷம் சித்திரை மாதம் சுக்ல பஞ்சமி திதி, வியாழன் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆசூரி கேசவ சோமயாஜி என்பவருக்கும் காந்திமதி எனும் அம்மையாருக்கும் மகவாகப் பிறந்தவர் ஸ்ரீராமானுஜர்.

            ஸ்ரீபெரும்புதூரில் வளர்ந்து வந்த ராமானுஜர் முதலில் தம் தந்தையாரிடம் வேத வேதாந்தங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அவருடைய அசாத்தியமான அறிவுக் கூர்மையாலும், மனத்திட்பத்தினாலும் தனது 15ஆம் வயதிற்குள் வேத, வேதாந்தங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். அப்போதைய வழக்கப்படி அவருக்கு பதினாறு வயதிலேயே தஞ்சமாம்பாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள். இளம் வயதிலேயே ராமானுஜர் தன் தந்தையை இழந்தார்.

            தந்தையை இழந்ததால் ஒரு குருவை நாடினார். காஞ்சிக்கு அருகில் இருந்த திருப்புட்குழி எனும் ஊரில் யாதவப் பிரகாசர் எனும் சந்நியாசி இருப்பதாக அறிந்து அவரிடம் சென்றார். சாஸ்திர ஞானம் அதிகம் படைத்திருந்த யாதவப் பிரகாசருக்கும் சீடராகச் சேர்ந்த ராமானுஜருக்கும் தொடக்கத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. “ஸத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம” எனும் உபநிஷத் வாக்கியத்துக்குப் பொருள் சொல்வதில் குருவுக்கும் சீடனுக்கும் கடுமையான மோதல் நிகழ்ந்தது. அதையொட்டி ராமானுஜரை குருவான யாதவப் பிரகாசர் விரட்டி விட்டார். விரட்டியதோடு அவரைத் தீர்த்துக் கட்டவும் திட்டமிட்டார். அதற்காக காசி யாத்திரை செல்ல ஏற்பாடுகள் நடந்தன. காசி யாத்திரையின் போது ராமானுஜர் உயிருக்கு ஆபத்து என்பதை உடன் இருந்த மாணவர் சொல்ல அவர் அங்கிருது தப்பித்து காஞ்சிமாநகர் சென்றுவிடுகிறார்.

            அங்கு தாயின் ஆணையின்படி திருக்கச்சி நம்பியைச் சந்தித்து அவரிடம் சீடனாகச் சேர அனுமதி கேட்கிறார். அவரிடம் இருந்து கொண்டு வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன கைங்கர்யம் செய்யும் பணியில் ஈடுபடலானார். அங்கு ஒரு நாள் எதேச்சையாக குருநாதர் யாதவப் பிரகாசரைக் காண நேர்ந்தது.  அவர் அழைப்பின் பேரில் மீண்டும் அவரிடம் சேர்ந்தார். இதற்கிடையே திருவரங்கத்தில் இருந்த ஸ்ரீஆளவந்தார் எனும் மகா ஞானி ராமானுஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண காஞ்சிபுரம் வந்தார். அங்கு அவர் திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். அங்குதான் ஆளவந்தார் முதன் முதலில் ராமானுஜரைப் பார்த்து, அவர் பெருமைகளை மானசீகமாக உணர்ந்து கொண்டார். வைணவ சம்பிரதாயத்தை வளர்க்க ஒரு அடியார் இவர்தான் என்று ஆளவந்தாருக்கு ராமானுஜரைப் பார்த்த உடனே மனதில் தோன்றிவிட்டது.

            சந்தர்ப்ப வசத்தால் யாதவப் பிரகாசர் ராமானுஜரை வெறுத்து அவரைத் தன் சீடர்கள் கூட்டத்திலிருந்து துரத்தி விட்டார். பின்னர் தாயின் ஆணைப்படி மறுபடியும் காஞ்சி திருக்கச்சி நம்பியிடம் திருமஞ்சனப் பணிக்குச் சேர்ந்தார்.

            இதற்கிடையில் திருவரங்கத்தில் ஆளவந்தாரின் உடல் நிலை மோசமடைந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு ராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து ஓடோடி வந்து அவரைப் பார்த்தார். ஆனால் அவர் வந்து பார்க்கும்போது யமுனாச்சார்யார் எனும் ஆளவந்தாரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரைக் காண வந்தவர் ஆளவந்தாரின் இறந்து போல உடலின் கையில் மூன்று விரல்கள் மட்டும் மடியாமல் நீண்டே இருந்ததைக் கண்டார். அதற்கு என்ன காரணம் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அந்த நிலையில் ராமானுஜர் மூன்று பிரமாணங்களை எடுத்துச் சொல்ல, ஆளவந்தாரின் கை விரல்கள் மடிந்து கொண்டன. அவர் என்ன பிரமாணங்களைச் சொன்னார், அவற்றின் பொருள் என்ன என்பதையெல்லாம் சொல்லி விளங்க வைக்க ஆன்றோர் பெருமக்கள்தான் வரவேண்டும். அதற்கான விளக்கங்களை அவர்கள் நாள் கணக்கிலும் சொல்ல நேரிடலாம் எனினும் இங்கு அதன் பெயர்களை மட்டும் சொல்லி ஆறுதல் கொள்வோம். அவை:--
1.      பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை வலியுறுத்தி ஒரு உரை எழுதுவது.
2.      விஷ்ணு புராணம் எழுதிய பராசர முனிவரின் பெயரையும், பாகவதம் இயற்றிய வேத வியாசர் ஆகிய பெரியோர்களின் புகழை உலகுக்கு விளக்குவது.

3.      வேதம் அழகுத் தமிழில் பாசுரமாக ஆக்கிய நம்மாழ்வாரின் பெயரை உலகெங்கும் போற்றிப் பரப்புவது. ஆகிய மூன்றும்தான்.

     இந்த மூன்று அம்சங்களையும் ராமானுஜர் அன்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஞ யின் படி தன் வாழ்நாளில் செய்து முடித்தார்.  

யமுனாச்சாரியாரின் வைணவ தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக அல்லவோ அவர் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் ஓடி வந்தார். அதற்காக அவர் பல காலம் தவமிருந்தார். குருநாதரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம் “எட்டெழுத்து மந்திரம்” எனச் சொல்லப்படும் “ஓம் நமோ நாராயணா” என்பதை எவரிடமும் வெளியிடுவதில்லை என்று பிரமாணம் செய்த பின் உபதேசம் பெற்றுக் கொண்டார். அப்படி உபதேசம் பெற்றுக் கொண்ட மந்திரத்தை அவர் மட்டுமே உச்சரித்துப் புண்ணியம் அடையவேண்டுமென்பதை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் என்ன செய்தார் தெரியுமா? அந்த மந்திரோபதேசம் ஆன கையோடு நேராக திருக்கோஷ்டியூர் ஆலய கோபுரத்தின் மீதேறி மக்கள் அனைவரும் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து கரையேற வேண்டுமென்பதற்காக உரக்க எல்லோருக்கும் அதனை உபதேசம் செய்தார்.

            இந்த செயலால் மிகுந்த கோபம் அடைந்த திருக்கோஷ்டியூர் நம்பி அந்த ரகசியமான மந்திரத்தை இப்படி எல்லோருக்கும் உபதேசம் செய்வதென்பது குருத் துரோகம் என்றும், அதன் விளைவால், அவர் நரகத்துக்குச் செல்ல நேரும் என்பதை எடுத்துச் சொன்னார். அதற்கு ராமானுஜர் மக்கள் அனைவரும் முக்தியடைவதானால் தான் மட்டும் நரகம் புகுவதில் தப்பில்லை என்று வாதிட்டார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி வருந்தினாரெனினும் குருவின் பக்தியைக் காட்டிலும் சீடனின் பக்தி விஞ்சியிருப்பது கண்டு மகிழ்ந்து அவரை “எம்பெருமானார்” என்று சொல்லி ஆலிங்கனம் செய்து கொண்டார்.

            இராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமல்ல நல்ல நிர்வாகியும் கூட. ஸ்ரீரங்கத்தில் ஆலய நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. அவர் ஸ்ரீரங்க ஆலயத்தின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதனை மிக செம்மப்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய பூஜா விதிமுறைகளை ஒழுங்கு படுத்தி அனைத்தையும் சீர்செய்தார். இப்படி ஒழுங்கும், கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப் படுமானால் எதிர்ப்புகள் வருவதென்பது எதிர்பார்க்கக் கூடியது அல்லவா? அதன் படியே அவருக்கு எதிர்ப்புகளும் வந்தன. பெரும் செல்வம் புரளும் ஆலயத்தின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது அங்கு தேட்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் சும்மா இருப்பார்களா? இவரைக் கொல்லுவதற்குக் கூட முயற்சிகள் நடந்தன. ஸ்ரீவைணவ சம்பிரதாய நடைமுறைகளை உருவாக்கி, அவற்றை உரிய முறையில் பழக்கங்களையும் அவற்றின் பலன்களையும் அனைவரும் உணரும் வண்ணம் உயிர் கொடுத்து உருவாக்கியவர் இராமானுஜர். இதுபோன்ற பழமைகளை மாற்றி புதுமையான, சீரான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வரும் போது அவரைப் போலவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அப்படி ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் என்ன செய்ய முடியும், அதிகமான வேலை பளுவைத் தானே ஏற்றுக் கொள்ள நேரிடும். அப்படித்தான் நேர்ந்தது அவருக்கு. ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் தவிர ஸ்ரீவைணவ மடத்தின் நிர்வாகமும் இவருடைய நேரடிப் பார்வையில் நடைபெற வேண்டியிருந்தது. ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாதப் பெருமாளின் உடைமைகள் ஏராளம். அவைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கேட்பாரற்றும், மதிப்பாரற்றும் மறைந்தும், ஒளிந்தும் இருந்தவற்றை அவர் மீட்டெடுத்து ஒழுங்கு படுத்திச் சிறப்பாக நிர்வாகம் செய்தமையால் இவரை “உடையவர்” என்று அழைத்தனர். இப்போதும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் சந்நிதியில் உடையவர் சந்நிதி என்றிருப்பதைக் காணலாம்.

            பெருமை மிகு பாரத தேசம் முழுவதும் தல யாத்திரை செய்து அங்கெல்லாம் இவர் வைணவத்தைப் பரப்பினார். அவர் வாழ்ந்த காலம் சமயப் பிரிவுகளிடையே வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்று வந்த காலம். சைவ, வைணவ மோதல்களும் ஆங்காங்கே  நிகழ்ந்தன. இவர் போகுமிடங்களில் எல்லாம் வாதங்களும் எதிர்வாதங்களும் நடைபெற்றன.  போகுமிடங்களில் எல்லாம் ஆங்காங்கே வைணவ மடங்களை இவர் நிறுவினார்.

            ஆன்மீக மடங்களைப் பெரும்பாலும் துறவிகளே நிர்வகித்துக் கொண்டிருந்த காலத்தில் இவர் தான் தொடங்கிய ஆன்மீக மடங்களின் தலைமைப் பொறுப்பை இல்லறத்தில் இருந்தவர்களையும் தலைவர்களாக நியமித்தார். மடங்களின் அதிபதிகளாக வருபவர்களுக்கான தகுதிகளை முறைப்படுத்தினார். எல்லா குலத்தாரையும் ஏற்றத் தாழ்வின்றி அனைவரையும் சமமாகக் கருதினார். தாழ்த்தப்பட்ட இனத்து மக்களிடம் இரக்கம், கருணை, பரிவு ஆகிய குணங்களை வெளிப்படுத்தி அவர்களை “திருக்குலத்தார்” என்ற பெயர் சொல்லி அழைத்து மரியாதையாக நடத்தினார். இவர் திருக்குலம் என்ற பெயரை அளித்ததன் அடிப்படையில்தான் மகாத்மா காந்தியடிகளும் இவர்களை திருமாலின் மக்கள் எனும் பொருளில் “ஹரிஜன்” என்ற பெயர் சூட்டினார்.

            வைணவன் என்பான் யார்? எனும் கேள்விக்கு இவர் அருமையான பதிலைக் கொடுத்தார். தமிழில் இறை வணக்கங்களுக்கு உரித்தான பிரபந்தங்களைப் பாடி துதிப்பது, வைணவச் சின்னங்களை நெற்றியிலும், உடலிலும் தரிப்பது இப்படி வைணவ சித்தாந்தங்களில் நம்பிக்கையும் புற ஒழுக்கங்களில் வழிமுறைகளைப் பின்பற்றியும் இருப்பவர் யாரோ அவர்களே வைணவர்கள். அவர்கள் எந்தச் சாதியைச் சார்ந்தவராயினும் இந்த குணங்களை, பழக்கங்களைக் கைக்கொள்பவர் எவரும் வைணவர்களே என்று இவர் பிரகடனப் படுத்தினார்.

            சம்ஸ்கிருத மொழியில் இராமானுஜர் இயற்றியுள்ள ஸ்ரீபாஷ்யம் என்பது அவருடைய தலைசிறந்த போற்றுதலுக்குரிய படைப்பு. தத்துவார்த்தங்களில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல். காலங்காலத்துக்கும் அந்த வழி நிலைத்திருக்க வழிகாட்டிய நூல். இதுவே ராமானுஜரை மக்கள் மனங்களில் ஆசனமிட்டு அமரக் காரணமாக இருந்தது.

            ஸ்ரீபாஷ்யம் தவிர, உபநிஷத் தத்துவங்களை விளக்கும் “வேதாந்த சங்கிரகம்” எனும் நூலும், “பிரம்ம சூத்திரத்தின்” சுருக்கங்களான “வேதாந்த சாரம்”, “வேதாந்த தீபம்” ஆகியவைகளும் இவர் அளித்துள்ள சமயம் சார்ந்த கொள்கைக் கொடை.

            இவை தவிர விசிஷ்டாத்வைதத்துக்கு “கீதா பாஷ்யம்” எனும் கீதைக்கான உரை, மக்களின் அன்றாட தேவைகளுக்கான, சடங்குகளுக்கான “நித்ய கிர்ந்தங்கள்”.  கத்யம் எனும் தலைப்பில் பல்வேறு நூல்களையும் இவர் இயற்றியிருக்கிறார். இவர் தமிழில் உரையாற்றி வந்திருக்கிறார் ஆனால் நூல்களைத் தமிழில் செய்திருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள். ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் காட்டிய பக்திச் சுவை எழிலொழுக இவருடைய உரைகளில் காணப்படுகின்றன.

            இராமானுஜர் காலத்தில் சோழநாட்டை ஆண்ட குலோத்துங்க மன்னன் தீவிர சைவன். அவனுடைய கோபத்திலுருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி, இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா எனுமிடத்திலுள்ள மேல்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்துக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பியதாக வரலாறு சொல்கிறது.

            இவர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலம் 120 ஆண்டுகள். தனது 120ஆம் வயதில் 1137இல் அதாவது பிங்கள வருஷம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் சனிக்கிழமை நண்பகலில் ஜீயர் மடத்தில் இவர் பூதவுடல் நீத்து அமரர் ஆனார்.

            இராமானுஜரின் திருமேனிகள் மைசூர், மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்திலும், ஸ்ரீபெரும்புதூரிலும், திருவரங்கத்திலும்  இருக்கின்றன. திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி” என்றும். ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” என்றும், ஸ்ரீரங்கத்தில் “தானான திருமேனி” என்றும் அவற்றைச் சொல்கிறார்கள்.

மேல்கோட்டையில் இருப்பது தமர் உகந்த திருமேனி: அப்படியென்றால் என்ன பொருள்?
தாழ்த்தப்பட்டவர்களைக் (பஞ்சமர்களைக்) கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்தது திருநாராயணபுரம் எனும் இத்திருத்தலத்தில்தான். இராமானுசர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற இராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச்செய்தார். பின்பு சக்தியூட்டிய சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார். இந்தச்சிலை தமர் உகந்த திருமேனி என்றழைக்கப்படுகிறது. இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” இராமானுரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
பின்பு இராமானுர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை உருவாக்கினார்கள். இராமானுர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது.
தானான திருமேனி மூன்றாவது திருமேனி (இராமனுர் பூதஉடல்) இராமானுர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.
இராமானுர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே:
தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.
நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும்,  சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.
இதன் பின்பு இராமானுரின் திருமேனி ஒரு திவ்ய விமானத்தில் அமர்த்தப்பட்டு அவருடைய முக்கிய சீடர்களும் பக்தர்கள் புடை சூழ இராமானுர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.
ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்கள். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தது:
எனவே இராமனுரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.
பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர். இராமானுஜர் அங்கு எழுந்தருளியுள்ளபடி இன்றும் தன்னை தரிசிக்கும் அன்பர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
            இந்த அளவில் ஸ்ரீ ராமானுஜரின் மங்களமான வாழ்க்கை பற்றி உரையாற்ற சந்தப்பம் கிடைத்தமைக்கு நன்றி சொல்லி, நிறைவு செய்கிறேன்.

           
           

            

No comments:

Post a Comment

You can give your comments here