பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 17, 2017

லட்சுமி. - A Short story.

                 (I dedicate this short story to my cousin Mr.V.Natarajan, now in Chennai)    

                                                                         

               
ந்தி மாலைப் பொழுது. தெருவில் பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் தெருவையே அலற வைத்துக் கொண்டிருந்தது. வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சாய்வு மேஜையில் கிராம கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. அவர் அந்த கிராமத்துக் கணக்குப் பிள்ளை. இன்றைக்கு அல்ல அறுபது ஆண்டுகளுக்கு முன்பு. இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் தேர்தல் 1952இல் நடந்ததல்லவா அது நடந்து ஓரிரு ஆண்டுகள் கழிந்திருக்கும்.

அப்பா வாசல் திண்ணையில் இருந்தால் நாங்கள் வீட்டின் பின்பிறம் இரண்டாம் கட்டில் கொல்லை வாசலில் விளையாடிக் கொண்டிருப்போம். அருகில் மாட்டுத் தொழுவம். வீட்டில் எப்போதும் ஐந்தாறு பசுமாடுகள், இரண்டு எருமை மாடுகள் இவை தவிர வில்வண்டி இழுக்க மொட்டை மாடுகள் இரண்டு என்று எப்போதும் தொழுவம் நிரம்பியே இருக்கும்.

“மேய்ச்சலுக்குப் போன மாடெல்லாம் வந்தாச்சா?” அப்பவின் குரல்.

“வந்தாச்சு, ராமன் பிடிச்சு எல்லாத்தையும் தொழுவத்தில் கட்டிண்டுருக்கான்” என்று அம்மா சமையல் உள்ளேயிருந்து பதில் சொன்னாள். ராமன் என்பவன் அப்பாவின் பண்ணை நிலங்களையும், வீட்டில் மாடு கன்றுகளையும் கவனித்துக் கொள்ளும் பணியாள். பணியாள் என்ற பெயர்தானே தவிர வீட்டின் செல்லப்பிள்ளையைப் போல அவன்தான் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள் முதல் மாடு கன்றுகளுக்குத் தேவையானது, வயலுக்கு உரம் வாங்குவது, விவசாய வேலைகளை மேற்பார்வை இடுவது என்று எப்போதும் ‘பிசி’யாக இருக்கும் ஒரே ஆள். இவ்வளவுக்குமிடையில் சிறுவர்களுடன் சிறிது விளையாடவும் செய்வான்

“பருத்திக் கொட்டை, புண்ணாக்கு எடுத்து ஊறப்போடச் சொல். மாட்டுக்கெல்லாம் தண்ணி காட்டி வைக்கோல் எடுத்துப் போடச் சொல்லு” என்றார் அப்பா.

இந்த வேலைகளையெல்லாம் ராமன் நேரம் தவறாமல் செய்வது வழக்கம்தான் என்றாலும், அப்பாவுக்கு ஒரு முறை சொன்னால்தான் திருப்தி ஏற்படும்.

“எல்லாம் செஞ்சு ஆயாச்சு, இவர் வேறே ஒவ்வொரு தடவையும் இவர் சொல்லித்தான் எல்லாம் நடக்கறதா எண்ணம்” என்று முணுமுணுத்தாள் அம்மா.

அப்பா வாயிற்புறம் இருந்தால் கொல்லையிலும், கொல்லைப்புறம் வந்து விட்டல் வாயில் தெருவிலும் விளையாடுவது எங்கள் வழக்கம். நாங்கள் என்றால், ஐந்து பேர். என் உடன்பிறந்தார் மூவர், அத்தையின் மக்கள் இருவர், அதில் இருவர் பெண்கள்.

ராமன் கைநிறைய வைக்கோலோடு மாட்டுத் தொழுவத்தினுள் நுழையவும், அங்கிருந்த பசுக்கள் எல்லாம் இவனை பசித்திருக்கும் பிள்ளைகளுக்கு அம்மா சோறு பறிமார எடுத்துவரும்போது ஆவலுடன் பார்ப்பது போல பார்த்தன. ஒவ்வொரு மாட்டுக்கும் ராமன் பெயர் வைத்து அழைப்பான். அது என்னவோ அந்தப் பெயர்கள் அந்த மாடுகளுக்குப் புரிந்தது போல அவன் “லட்சுமி” என்றால் லட்சுமி என்று அழைக்கப்பட்ட அந்த மாடு மட்டும் இவனைத் திரும்பிப் பார்க்கும். மாடுகள் என்று நாம் நினைக்கிறோம், அவைகளுக்குத்தான் தங்களை வளர்ப்பவர்கள் மீதும், வேளா வேளைக்கு அவைகளுக்கு உணவளிப்பவர்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பதிலிருந்து அவைகளும் மனிதர்களுக்கு நிகரனாவைகள் என்பதைப் புரிந்து கொண்டிருந்தோம்.

கொல்லைப் புறத்தில் பெரிய சுட்டமண்ணால் ஆன தொட்டி, அது உடையாமல் இருக்க அதனைச் சுற்றி செங்கற்களால் கட்டப்பட்ட பாதுகாப்பான சுவர்கள். அதில் கழுநீர், காய்கறி நறுக்கிய தோல்கள், இவற்றுடன் பருத்திக்கொட்டை அரைத்த பால், ஊறிய பிண்ணாக்கை அரைத்துச் சேர்த்த கலவை இவற்றைக் குடிக்க அந்த பசுக்களைக் கொண்டு வந்து நிறுத்தியதும், அவை மூக்கை உள்ளே நுழைத்து நன்கு சப்புக்கொட்டி அந்த நீரை அருந்துவதைக் காணும் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.

அத்தனை பசுக்களிடையே நிறைய கன்றுக் குட்டிகள். பட்டணத்துக் கன்றுகுட்டி போல இறந்த கன்றின் தோலினுள் வைக்கோலை அடைத்து நான்கு குச்சிகளைக் கால்கள் போல் வைத்து பசுவின் அருகில் வைத்து பால் கரக்கும் அரக்கத்தனம் இல்லாமல், அந்தத் துள்ளித் திரியும் பசுங்கன்றுகள் முட்டி முட்டி பாலை ஊட்டியதும், மடியில் பால் சுரக்க அவை நம் வீட்டுப் பாத்திரங்கள் நிரம்ப நுரை தள்ளிய பாலைச் சுரந்து தருவதைப் பார்ப்பது ஒரு வேடிக்கை எங்களுக்கு.

அந்த பசுக்களில் ‘லட்சுமி” என்று அழைத்த அந்தப் பசு, உடலின் பெரும்பகுதி வெள்ளையாகவும், முதுகிலும் பக்கவாட்டிலும் மஞ்சள் கலந்து இளம் சிவப்பு நிறத்திலுமாக இருக்கும். நான் சிறு வயதாக இருக்கும்போதிலிருந்து வீட்டில் பால் கொடுத்து வரும் பசு அது. அதன் பாலில்தான் என் உடல் வளர்ந்தது என்பது என் எண்ணம். அதன் மீது எனக்கும் பாசம், ஒரு தாய்க்கும் மகனுக்குமுள்ள பாசம். அதுவும் நான் கொல்லைப்புறமாக வரும்போதெல்லாம், என்னைப் பார்த்து ‘அம்மா’ என்று பாசத்தோடு குரல் கொடுக்கும். நான் ஓடிப்போய் அதன் முகத்தையும் கழுத்தையும் தடவிக் கொடுத்தால் அழகாகத் தலையைத் தூக்கி சுகமாகக் காட்டிக் கொண்டிருக்கும். அப்படியும் உண்டா? மனிதர் அல்லாத ஒரு மாட்டிடம் தாய்ப்பாசத்தைக் காண முடியுமா? அந்தப் பசுவுக்கும் நம் மீது அப்படிப்பட்ட ஆத்மார்த்தமான அன்பு இருக்க முடியுமா?
ஒரு முறை வழக்கம்போல் அப்பா வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கிராம விவகாரம் ஏதோ வேறு சிலருடன் விவாதம் செய்து கொண்டிருந்த சமயம், நாங்கள் சிறுவர்கள் கொல்லைப்புறம் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மறைந்து கொள்வதற்கு ஒரு பெரிய வேப்ப மரத்தின் அடிக்கிளையில் ஏறி தழைகளுக்கு மத்தியில் மறைந்து கொண்டேன். தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய என் அத்தை மகள் என்னைக் கண்டுபிடித்துவிட்டாள். அவள் போட்ட கூச்சலில் நான் கீழே இறங்க முயற்சி செய்யும்போது கைப்பிடி நழுவி கீழே விழுந்துவிட்டேன்.

கூட விளையாடிக் கொண்டிருந்த மற்றவர்கள் ‘ஐயோ’ என்ற ஒலி எழுப்பிய அதே சமயம் ‘லட்சுமி” அம்மா என்று குரல் கொடுத்ததைக் கவனிக்க முடிந்தது. அந்த பசுவுக்கு, எனக்கு என்ன ஆயிற்று என்ற கவலை, அதன் அருகில் சென்றேன், அது என்னை ஆதரவாகத் தன் நாக்கால் நக்கிக் கொடுத்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

ஊரில் அப்போதெல்லாம் ஐந்தாவது மட்டும்தான் படிக்க முடியும். ஆறு முதல் அருகிலுள்ள மாயவரத்துக்குத்தான் போக வேண்டும். ரயிலேறி இரண்டு நிலையங்கள் தாண்டி மாயவரம் ஜங்ஷனுக்குப் போய் அங்கிருந்து கூறைநாடு எனும் இடத்திலுள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தோம். காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு ரயிலைப் பிடித்து மாயவரம் சென்று பள்ளியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பும்போது ஆறரை மணி ஆகிவிடும். வீட்டினுள் நுழைந்து புத்தகப் பைகளைப் போட்டுவிட்டு உடனே கொல்லைப்புறம் மாட்டுத் தொழுவத்துக்குச் சென்று ‘லட்சுமி’யையும் இதர பசுக்களையும், அவற்றின் கன்றுகளையும் கொஞ்சிவிட்டு, முகத்தைத் தடவிக் கொடுத்து என் அன்பினை அவற்றுக்கு அளித்துவிட்டுத்தான் வீட்டினுள் நுழைவது வழக்கம்.

காலம் வேகமாக உருண்டோடி விட்டது. மாயவரத்தில் கூறைநாடு உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்தபின் சென்னையில் கல்லூரிப் படிப்பு. அங்கு விடுதியில் தங்கிப் படிக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் வாராவாரம் சென்னையிலிருந்து கிராமத்துக்கு வரமுடியாத நிலை. மாதம் ஒரு முறையாவது வருவதுதான் வழக்கம். அப்படி ஊருக்கு வரும்போதெல்லாம் மாடுகளைப் போய்ப்பார்த்து அவைகளிடம் நலம் விசாரித்துவிட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

வீட்டில் வளர்ந்த பல மாடுகள் மாறிக் கொண்டே யிருக்கும். ஆனால் ‘லட்சுமி’ மட்டும் வீட்டுக்கு லட்சுமியாக முதன்முதல் வந்த பசு என்பதால் அது மறத்துப் போய் கன்று போட முடியாத வயது ஆனபின்பும் வீட்டிலேயே இருந்து வந்தது. எல்லோரும் கூட சொன்னார்கள் மறத்துப் போன மாட்டை வீட்டில் வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள். பேசாமல் கடைமாட்டுக்கு விற்று விடுங்கள் என்று. ஆனால் என் அம்மாவும் சரி, நாங்களும் சரி அதற்குச் சம்மதிக்கவில்லை. கடைமாடு என்றால் கசாப்புக் கடைக்குக் கொண்டு சென்று அதை வெட்டி அதன் மாமிசத்தை உண்பதற்காக விலை பேசி விற்குமிடம். அப்படி நாம் நம் தாயை இத்தனை நாள் அவள் ரத்தத்தை பாலாக ஆக்கி நமக்குக் கொடுத்து நம்மை வளர்த்த அந்தத் தாயை அறுத்து அவள் சதையை உணவாக்கி சாப்பிடுவதா? கேனிபல்ஸ் என்கிறார்களே மனிதனை மனிதன் உணவாகச் சாப்பிடும் காட்டுமிரண்டிகள் அவர்களைப் போலவா நாம் ஆகிவிட்டோம்? என்ற ஐயம் மனதைக் குடைந்து கொண்டிருக்கும்.

வீட்டில் ஒருவர் முதியவர் ஆகிவிட்டால் அவர் இனி நமக்குப் பயன்பட மாட்டார் என்றா அவரை கசாப்பு கடைக்கு அனுப்பிவிடுகிறோம்? இல்லையே வீட்டில் ஒரு அம்மாவைப் போல நம்மிடம் அன்பு காட்டி நமக்கு ஒரு துன்பம் என்றால் வாய் பேசமுடியாவிட்டாலும் ‘அம்மா’ என்று குரல் கொடுத்துத் தனது அன்பை, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் பசுவையா விற்றுவிடுவது? முடியாது. அது உயிரோடு இருக்கும் வரை நம் வீட்டுக் கொட்டிலில் நாம் கொடுக்கும் வைக்கோல் புல், புண்ணாக்கு முதலியவைகளைக் கொடுத்து வளர்த்து வரவேண்டுமென்று நாங்கள் சொன்னதை அப்பாவும் ஏற்றுக் கொண்டார், லட்சுமி வீட்டுக் கொட்டிலில் வாழ்ந்து கொண்டிருந்தது. நாங்கள் எப்போதெல்லாம் ஊருக்கு வருகிறோமோ அப்போதெல்லாம் எங்களை முகர்ந்து பார்த்து, நாக்கால் தடவிக் கொடுத்து, முகத்தை எங்கள் மேல் உரசிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தும் அந்த பசு ஒரு மிருகமா அல்லது நம்மைப் போல உணர்ச்சிகள் உள்ள ஒரு பசு உருவிலான மனித உயிரா?

ஒரு முறை விடுமுறை நாளில் எல்லா பசுக்களையும் கொண்டு போய் மேற்கே பிள்ளையார் கோயில் குளத்தில் இறக்கி குளிப்பாட்டினோம். தண்ணீரில் இறக்கி நிற்க வைத்துவிட்டு, வைக்கோலால் அவற்றின் முதுகைத் தேய்த்தால் வலிக்குமோ என்று கிழிந்த வேட்டியால் அதன் முதுகை அழுந்தத் தேய்த்துக் குளிப்பாட்டி, கையில் கொண்டு போயிருந்த குங்குமப் பொட்டலத்திலிருந்து குங்குமத்தை எடுத்து அவைகளின் நெற்றியிலிட்டு அவற்றை தெருவோடு அழைத்து வரும்போது அவை நடந்து வரவில்லை, நடனமாடிக் கொண்டு வருவதாக எங்களுக்குத் தோன்றியது.

காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. எங்கள் கல்லூரிக் கல்வி முடிந்து இருவர் வெளிநாட்டுக்கு பிழைப்பு தேடிச் சென்று விட்டனர். இரு தங்கைகள் திருமணம் முடிந்து அவரவர் புக்ககம் சென்று விட்டனர். அம்மா முதுமையில் வீட்டோடு முடிந்த காரியங்களைச் செய்து கொண்டு அப்பாவைக் கவனித்துக் கொண்டு இருந்து விட்டார். நான் மட்டும் மதுரை நகரத்தில் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். திருமணம் ஆகி மனைவி ஒரு மகன் ஆகியோருடன் மதுரையில் வசித்து வந்தாலும், தஞ்சை மாவட்டத்தின் கிழக்குக் கோடியில் மாயவரத்தை அடுத்திருந்த எங்கள் கிராமத்தை மறக்காமல் மாதம் ஒரு முறையாவது சென்று அப்பா அம்மாவைப் பார்த்து வந்தேன். அப்பா அம்மாவை மட்டுமா, இல்லை இல்லை கொல்லையில் இருந்த மாட்டுத் தொழுவத்தில், அப்போது இருந்த ஒரேயொரு பசு, அதுதான் என்னுடைய இன்னொரு தாயார் “லட்சுமி”, அதையும் சேர்த்தே பார்த்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

அந்த வருஷம் எனக்கு வேலைப் பளு அதிகமாக இருந்ததால் விடுமுறை எடுத்துக் கொண்டு கிராமத்துக்குப் போக முடியவில்லை. அம்மா மட்டும் அடிக்கடி தொடர்பு கொண்டு ஒரு முறை ஊருக்கு வந்துவிட்டுப் போ, எங்கள் இருவருக்கும் வயதாகி விட்டது. இனியும் இங்கே தனியாக இருந்து என்ன செய்யப்போகிறோம். வீட்டையும் விற்றுவிட்டு உன்னோடு மதுரைக்கே வந்து விடுகிறோம் என்று சொன்னாள். எனக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. சரி அப்படியே செய்து விடலாம். மதுரையில் அலுவலகத்தில் கடன் வாங்கி ஒரு தனி வீடு சுற்றிலும் தோட்டத்துடன் இருந்தது. அங்கே ஒரு கொட்டகை போட்டு ‘லட்சுமி’யையும் அங்கே கட்டி வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் எனக்கு. ‘லட்சுமி’ அவள் பெயருக்கேற்ப அவர் குடும்பத்தை வாழ்விக்க வந்த லட்சுமியாகத்தான் எனக்குத் தெரிந்தாள். வயது முதிர்ந்த பசுமாடு என்பதோ, அது விலைக்கு விற்கக்கூடிய ஒரு பொருள் என்றொ நான் நினைத்ததே இல்லை. குடும்பத்து உறுப்பினர்களில் அப்பா, அம்மா, லட்சுமி என்றுதான் கணக்குப் போட்டிருந்தேன்.

அம்மாவுக்கு தகவல் கொடுத்துவிட்டேன். வீட்டை யாருக்காவது வாடகைக்கு விட்டுவிட்டு, நீங்கள் அனைவரும் தயாராக இருங்கள், ஒரு நாள் வந்து உங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்து விடுவோம். இங்கு வீடு பெரிதாக இருப்பதால் எல்லோரும் சேர்ந்து இருப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை என்று சொல்லியிருந்தேன்.


ஒரு நாள், அலுவலகம் முடிந்து மாலை நேரம் பெரியார் பேருந்து நிலையம் வழியாக என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். சாலையில் நல்ல கூட்டம். நின்று நின்று வரவேண்டிய சூழ்நிலை. சர்வோதயா புத்தகப் பண்ணை வாசலில் நெருக்கடியான சூழலில் நான் வண்டியை ஓரமாக நிறுத்தி கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்த நேரம், திடீரென்று ‘அம்மா” என்ற பழக்கப்பட்ட ஒரு குரல் என்னை சுண்டி இழுத்தது. அந்த ‘அம்மா” எனும் ஒலி ஆதங்கத்துடனோ அல்லது கோபத்துடனோ ஆங்காரமாக ஒலிப்பது போலத் தோன்றியது. கூட்டத்தினுள் கூர்ந்து கவனித்தேன். அப்போது எதிர்ப்புறமாக வந்த ஒரு திறந்த லாரியில் கூட்டமாக அடைக்கப்பட்டிருந்த பசுமாட்டுக் கூட்டத்தின் நட்வில் கட்டப்பட்டிருந்த என்னுடைய ‘லட்சுமி’யின் குரல் அது என்பதைக் கண்டேன். என் உடல் நடுங்கியது. உடலெங்கும் வியர்த்தது. என் அம்மா, என் ‘லட்சுமி’ பசுத் தாய், அந்த அடிமாட்டுக் கூட்டத்தில் ஒருத்தியாகப் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் என்னை ஷாக் அடித்தது போல உணர வைத்தது. கண்களில் கண்ணீர் திரைபோட பார்த்தேன், அந்த லாரி நகர்ந்து கொண்டிருந்தது. அதில் என் ‘லட்சுமி’ என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே அந்த லாரியில் சென்று கொண்டிருந்தாள். என் கையறு நிலைமையை எண்ணி அழுதேன், அழுதேன், அழுவது நடுத்தெருவில் என்பதால் என்னை நானே அடக்கிக் கொண்டேன். ஆனால் அந்த அழுகை வீடு வந்தபின்னும் நிற்கவேயில்லை.

No comments: