பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, July 15, 2017

திருஞானசம்பந்தர் திருவையாற்றை அடைந்த போது அவர் கண்ட காட்சிகள்

                                          











                                    

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி 
அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் 
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட 
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி 
முகில்பார்க்குந் திருவையாறே.

மனிதனை வழிநடத்தும் ஐம்பொறிகள் தத்தமது செயல்மாறி குழப்பமடைந்து, அறிவு செயல்படாமல் வழியறியாமல் தவித்திடும் போதில் நேரில் தோன்றி “அஞ்சேல்” என்று அபயம் அளித்திடும் ஐயன் ஐயாறப்பன் வதியும் கோயில். அதனை வலம் வந்து வணங்கிடும் பெண்கள் இறைவனுக்கு நாட்டியமாடி வணங்குகின்ற போதில் நாட்டியத்துக்குப் பக்க வாத்தியமாக முழவு முழங்குகிறது, அந்த முழவொலியைக் கேட்டுக் காவிரிக் கரை சோலைகளில் வாழும் குரங்குகள் மழை வருவதற்கான அறிகுறியாக இடி இடிக்கிறதோ என்று மனம் மயங்கி சோலை மரத்தின் மீதேறி வானத்தில் மேகக்கூட்டம் இருக்கிறதா என்று பார்க்கும் வளமுடைய திருவையாறு.

விடலேறு படநாகம் அரைக்கசைத்து 
வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர் 
பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி 
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் 

கீன்றலைக்குந் திருவையாறே.

நாகத்தைத் தன் இடையில் கட்டிக்கொண்டு மலையரசன் மகளான தேவியோடும் ரிஷப வாகனத்தின் மேதேறி அமர்ந்து அருள்பாலிக்கும் இறைவன் கோயில். கடலில் பொங்கி வரும் அலைகள் கரை மோதி காவிரி நீரில் கலந்து இரவோடிரவாக உட்புகுந்து வந்து முத்தமிடும் திருவையாறு.

கங்காளர் கயிலாய மலையாளர் 
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் 
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் 
இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் 

இரைதேருந் திருவையாறே.


கங்காளர், கயிலாய மலையுடைய ஈசனார், கானப்பேராளர், மங்கையைத் தன் உடலின் ஓர் பாகமாகக் கொண்டவர், திரிசூலத்தைக் கையில் ஏந்தியவர், ரிஷப வாகனமுடையார் வாழும் கோயில். வெள்ளை நிறத்து நாரைகள் பொழிலதனில் உள்நுழைந்து தன் சிறகினை நன்கு கோதிவிட்டுக் கொண்டு வெயிலில் உலர்த்தி குளிர் நீங்கி இரை தேடும் திருவையாறு.

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் 
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் 
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி 
மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல 

மொட்டலருந் திருவையாறே.

கபாலத்தைக் கையில் ஏந்திக்கொண்டு ஊர்தோறும் சென்று இரந்துண்ணும் தழலுருவம் கொண்ட ரிஷப வாகனத்தில் வரும் சங்கரன் உமையொருபாகன் தங்கும் கோயில். சோலைகள் நிறைந்த அங்கு மான்கள் வயலில் துள்ளிக் குதிக்க, மிரண்டு போன மந்திகள் மரங்கள் மீதேறிப் பாய, அவைகளின் பாய்ச்சலால் சேதமுற்ற தேனடையிலிருந்து தேன் ஊற்ற, அதனால் அரண்ட மீன்கள் துள்ளிக் குதிக்க தடாகத்தில் விளைந்த தாமரை மொட்டுக்கள் மலரும் திருவையாறு.

நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 

நடம்பயிலுந் திருவையாறே.

சிவனார் தலையில் கங்கை இருக்கிறாள், அதனோடு வெண் மதியும் இருக்கிறது, வெள்ளெருக்கம் மலர்கள் இருக்கின்றன, கொன்றை மலர்கள் கொத்தாக இருக்கிறது, எருக்கம்பூவையும் தன் சடையில் அணிந்த தத்துவனார் சிவபெருமான் தங்கும் கோயில். மேகக் கூட்டங்கள் தவழ்ந்து வந்து மழைபொழிய வாவிகள் நிறைந்து விளங்கும், தேர் ஓடுகின்ற வீதிகளில் அரம்பையர்கள் போன்ற மங்கையர்கள் நடனம் ஆடுகின்ற திருவையாறு.



வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் 
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த 
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார் 
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் 
நடமாடுந் திருவையாறே.

வேந்தனாகவும், தேவர்களுக்கும், மண்ணிலுள்ள மாந்தருக்கும் வழிகாட்டும் தலைவனாகி, மலர்ந்து மணம் வீசும் கொன்றை மலரைத் தன் சடையில் அணிந்த புண்ணியனார் நாடும் கோயில். காந்தாரத்தில் இசை அமைத்துக் காரிகையார் பாடல் இசைக்க, அழகு மிகுந்த வீதிகளில் பெண்கள் மேடையேறி “தேம் தாம்” என்று ஜதியோடு நடனமாடும் திருவையாறு.

நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு 
புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி 
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச 
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு 

கண்வளருந் திருவையாறே.

வானத்தை முட்ட விசுவரூபமெடுத்து முப்புரங்களையும் எரித்த வில்லைக் கையிலேந்திய வில்லாளி; கயிலை மலைக்கதிபதியான மலையுடையான் எழுந்தருளியுள்ள கோயில். குன்றுதோறும் குயில்கள் கூவிட, வாசமலர்களில் பொங்கி வழியும் தேன் திசையெங்கும் பாய்ந்து மணம் பரப்ப, தென்றல் அந்த மணத்தைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வயல்களில் வளர்ந்திருக்கும் கரும்புப் பயிரைத் தழுவித் தூங்க வைக்கும் திருவையாறு.


அஞ்சாதே கயிலாய மலையெடுத்த 
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் 
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ 
இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல 
வயல்படியுந் திருவையாறே.

பயம் என்பது சிறிதும் இல்லாமல் கயிலை மலையையே தன் தோளால் பெயர்த்தெடுத்த அரக்கர் தலைவனான இராவணனுடைய பத்து தலைகளையும், இருபது தோள்களையும் நெரித்துத் தண்டித்தவன் பின்னர் அவனுக்கு அருள்புரிந்து காத்த இறைவன் வாழும் கோயில். அந்தப் பகுதியில் வளம் மிகுந்து எங்கும் தண்ணீர் நிரம்பியிருக்க அப்போது ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழ, அந்த ஓசை கேட்டு அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை பயந்து வயல்வெளியில் தறிகெட்டு ஓட, அதனால் வயலில் இருந்த நெற்கதிர்கள் பூமியில் அழுந்திவிட அந்த இடத்தில்  தாமரை மலர்கள் பூத்த திருவையாறு.

மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை 
மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத 
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் 
குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் 
நடமாடுந் திருவையாறே.

அண்ணாமலையில் ஜோதிவடிவாக அடி முடி காணமுடியாத பேரொளியாக இறைவன் நெடுக வளர்ந்து நிற்க அவனது முடிகாண பிரம்மனும், அடிகாண நாரணனும் அடிமுடி காண விரைந்தனர். அவர்களால் காணமுடியாத தீயுருவாக நின்றவன் அமர்ந்த கோயில். அங்கு நடன ஆசிரியரின் நட்டுவாங்கக் கோல் ஓசையிட்டு ஆட, அந்த ஓசைக்கேற்ப குவிமுலை மாதர்கள் நடனமாட அவர்கள் முகத்தில் பல்வேறு உணர்வுகளையும் காட்டி சிலைகள் எழுந்து ஆடுவது போல பெண்கள் அழகாக நடனமாடும் திருவையாறு.



குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு 
சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே 
யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் 
இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் 
வந்தலைக்குந் திருவையாறே.

அருமைத் தொண்டர்களே! கேளுங்கள்! குண்டாடு குற்றுடுக்கைச் சமணர்கள், சாக்கியர்கள், நற்குணமொன்றில்லா இருட்குணம் படைத்தோர் சொற்களைக் கேட்காதீர்கள்! முக்கண்ணனாம் சிவபெருமான் எம் ஈசன் இறைவன் அமருங் கோயில். மலர்களைக் கொண்டுவரும் வெள்ளம் அலைமோத, அதில் பல மணிகள் வந்து கரைசேரும் திருவையாறே.
அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் 
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான 
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் 
ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் 
றெய்துவார் தாழாதன்றே.

அளவு கடந்த அன்னமிடும் நெற்களஞ்சியமாம் ஐயாற்றின் எம்பெருமானை சீர்காழி மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் பாடும் பாடல், இன்னிசையோடு இவை பத்தையும் பாடும்போது ஈசன் எம் சிவபெருமானைத் துதித்துப் போற்றுவார்கள். தவநெறியோடு சிவலோகத்தை அடைந்திடுவாரே.

இதுபோன்ற அரிய தேவாரப் பாடல்களால் சைவம் தழைத்தது. மாமழை பொழிந்தது. வையம் செழித்தது. திருச்சிற்றம்பலம்.


No comments: