பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 18, 2017

"லக்ஷ்மி ராமாயணம்" part II

"லக்ஷ்மி ராமாயணம்"

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

திருவவதாரப் படலம்.

சிகரமா யிருந்த தச ரதனின்
சித்தத் திலே ஒர் கவலை!
சந்ததி எவரும் இல்லையே - தமக்கடுத்து
சிம்மா சனத்திலே அமர் வதற்கு!                24

வேத முனி வசிஷ்ட்டரைத் தான்
வேந்தன் தன் அவைக்கழைத்தான் – மன
வேத னையை வெளிப் படுத்தி
‘யாது செயதல் நலம்?’ என்றான்.                25

அவ்வமையம்…-
முக் கால மு முணர்ந்த
பிரும்ம புத்ரன் வசிஷ்ட் டருக்கு
அக் காலத்திய ஓர் நிகழ்வு
அகக் கண்ணில் தெரிந் ததுவாம்.               26

முன் பொருநாள் தேவர் வந்துத்
திரு மாலின் தாள் பணிந்து,
அவதி தரும் அரக்கர் தம்மை
அழித் தருள வேண்டி நின்றார்.                 27

திரு மாலும் மன முவந்து
தச ரதனின் புத் திரனாய்
தர ணியிலே உதிப் பதாய்
தந் திருந்தார் உறுதி மொழி!                   28

இலக்கு வனாய் ஆதி சேடனும்,
சங்கு பரதனாய், சக்கரம் சத்ருக்னனாய்
மண் மீது பிறப் பெடுத்து
மற் றோரைக் காப்போ மென்றார்.              29

நினைவி னின்று மீண்ட மா முனிவர்,
அஸ்வ மேத யா கமும், புத்திர
காமேஷ்ட்டி யாகமும் செய் யுங்கால்,
புதல்வர் பிறக்கும் வாய்ப் புண்டென்றார்.       30

‘அன்னதற் கடியவன் செய்வன யாதெ’ன
அரசனுக் கரசன் ஆவலாய் வினவிட
அதற்கான நியமத்தை அவை முனிவர்
அடுத்த டுத்து விளக்க லானார்.                31

விபா ண்டக முனியின் குமாரரும்
மான் வயி ற்றில் பிறந்து,
மான் கொம்புடன் இருக்கும் - கலைக்கோட்டுமாமுனி
வந்திட பலன் கிட்டிடு மென்றார்..             32
(கலைக்கோட்டு மாமுனி – ரிஷ்ய ஸ்ருங்கர்)

தவத்தில் சிறந்த தகப் பனுக்கு
பணிவிடை செய்வதே பாக்கிய மென்ற
பெண்ணுரு பார்த்திரா முனிவன் கால்பட
மழை பெய்திடு மென்பது ஐதீகம்             33

பஞ்சம் வாட்டிய உரோம பாதர்
தஞ்ச மென்றிவர் தாள் பணிந்து,
அங்க மழைத்து வந்த தினால்
கொட்டிய மழையால் பஞ்ச மழிந்ததாம்       34

நாட்டின் சுபிக்ஷம் திரும் பியதால்,
சாந்தை யென்ற தம் மகளை – கலைக்
கோட்டு முனியுடன் மணம் செய்து - மரு                        
மகனாய் ஏற்றான் அம் மன்னன்.              35

வசிட்டரின் உரையினால் தச ரதனும்
வாட்ட மகன்று அங்க மடைந்தான்.  – கலைக்
கோட்டு மாமுனி யிடத்தில் – தன்
நாட்டு நில வரம் நல்கினான்.                 36

.இரங்கேல் அரசே! இனிமேல் வருந்தேல்!
யாம் வந்திருப்போம்! இயற்றிடுவீர் யாகங்களை!
ஈரே ழுலகையும் ஆண்டிடும் புதல்வரை
ஈன்றிடுவீர்! என்றுரைத்தார் அம்முனிவர்       37

ஏவலர்கள் அமைத்தனராம் யாக சாலையை!
வேதியர்கள் மூட்டினராம் வேள்வித் தீயினை!
மகவுஅருள் ஆகுதியை முறையாய் வழங்கியே                
வருடம்ஒன் றானதுவாம் அருள் வேண்டியே!  38       

தீயிடை மீண்ட பூத மொன்று
தூயபொன் தட்டிலே வைத்த – சுவை
மேவிய அமிர்தம் தன்னை
தரு வித்து மறைந்த துவாம்!                 39

அமிர்தத்தில் ஓர் பங்கை கௌசலைக்கும்,
அடுத்தவள்கை கேயிக்கு ஒரு பங்கும்,
எஞ்சிய இரு பங்கினையும் சுமித்திரைக்கும்
ஈந்தன ராம் தசரதமா சக்ரவர்த்தி!             40

யாகநியம நிமித்தமாய், கடவுளர்க்குப் பூசையும்,
அந் தணர்க்குப் பொருட் களும்,
அரசற்குப் பரியும், தேரும் தந்துவிட்டு
சரயுநதி நீரமிழ்ந்தார் சக்ரவர்த்தி திருமகனார்!  41

ஒருசில நாள் இடை வெளியில்
கருவுற்றனராம் தேவியர் மூவரும் – கருவை
உதரத் தினிலே சுமந்த னராம்.                                  
பன்னி ரெண்டு மாதம் வரை!                 42 

புனர்பூசம், கடகத்துட னிணைந்து - பரி
பூரணமாய் பரிமளித்த பகற் பொழுதில்
அரிதான ஆண்மகவை ஸ்ரீ ராமனாய்
அவனிக்குப் பெற் றெடுத்தாள் கௌசல்யை!   43

அரியநல் வேதமே அறிதற் கரியனாய்
கரியமுகில் போன்ற மேனிக் கரியனாய்
திருமாலின் மறுபிறப்பிற் குரியனாய்
அவதரித்தான் அருள்நிறைந்த இராம பிரான்.  44

கைகேயி பரதனையும், சுமித்தி ரையோ
லட்சு மணன், சத்ருக்னன் இருவரையும்
புதல்வர் களாய் பெற்றெடுக்க
பெரு மகிழ்ச்சி பெருகிற் றாம்.               45                                                                          
நாட்டினர் அனைவரும் ஆடினர் – கூத்தாடினர்
கூடினர் முனிவரும் ஆசி கூறினர் – பூ தூவினர்
மகிழ்ந்தனர் மன்னரும் வழங்கினர் – வாரி வழங்கினர்.
நீக்கினர் வரியெலாம் கொட்டியே – முரசுகொட்டியே!  46
             
கிளி கொஞ்சும் மொழி பேசித்,                      
தண்டளர் நடை பயின்று வந்து
அனு தினமும் வளர்ந்தன ராம்
அரசிளங்குமரர் கள் நால் வருமே!            47                                                                    
                                        
இராம – இலக்குவன், பரத – சத்ருக்னன் என
இணைகள் இரண்டெனவே இருந் தனராம்.
இருப்பினும் அண்ணன் இராமனுக்கே – முதல்
இருக்கையை இதயத்தில் தந் தனராம்.        48

யானை, குதிரை, இரதம் ஏனைய
ஏற்றம் பயின்று, வேதம் உணர்ந்து
யாதொரு கலையும் நீக்கல் இன்றி,
யாவினும் தேர்ந்தனர் தசரத புதல்வர்கள்.     49                                      
(இன்னமும் வரும்)

No comments: