Thiruvaiyaru Balaji shared சங்கத் தமிழ் இலக்கியம்'s photo.
மாவளத்தான். (வரலாறு) ==================== மாவளத்தான் என்பவன் சோழப் பெருநாட்டை ஆண்ட அரசருள் ஒருவன். மேலும், அவன் அந்நாட்டை நலமுற ஆட்சி புரிந்த நலங்கிள்ளி என்பவனின் தம்பியும் ஆவான். மன்னன் மாவளத்தான் ஆற்றல் பெற்றவன். ஆயினும், போர்களத்தை விரும்பினான் இல்லை. நல்ல தமிழ் அறிவு உடையவன். ஆயினும், அதனை வெளிக்காட்டிக் கொண்டான் இல்லை. அவனுடைய அவா, அதை மேலும் மேலும் பெருக்குக் கொள்வதிலேயே இருந்தது. அதனால், அவன் தமிழ் வல்ல அறிஞர் பலரைத் தேடினான். அவர்களில் பலரிடம் ஈடுபாடு கொண்டான். அவர்களோடு உரையாடி மகிழ்வதைப் பெரும் பேறாகக் கருதினான். அவனது அவைக்களம் எப்போதும் கல்விக்களமாக தமிழ்க் கழகமாக விளங்கிற்று. அவ்வாறு அவன் ஈடுபாடு கொண்ட தமிழ்ப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் தாமப்பல் கண்ணனார் என்னும் புலவர் பெருந்தகை ஆவார். புலவர் கண்ணனார் தொண்டை நாட்டினர். சென்னை - பெங்களூர்ப் பெருவழியில் ஏறக்குறைய ஐம்பதாவது கல்லில் உள்ள 'தாமல்' அல்லது 'தாமப்பல்' என்னும் ஊரினர். பார்பன மரபில் உதித்தவர். தமிழ் நன்கு பயின்றவர். அறிவு மிக்கவர்; அஞ்சா நெஞ்சினர். ஆண்மை குணம் நிரம்பியவர். ஒரு நாள் புலவர் கண்ணனார் மாவளத்தான் அவைக்கு வந்தார். அரசன் அவரை வரவேற்றான். உபசரித்தான்; இனிது உரையாடி மகிழ்ந்தான். அவரது புலமை நலம் அவன் உள்ளத்தை மிகவும் ஈர்த்தது. அதனால், அவரைத் தன்னுடன் இருக்குமாறு வேண்டிக் கொண்டான். கண்ணனார் வேந்தனது வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அவர் அவனுடன் இருந்து வரலானார். நாள்தோறும் கண்ணனார் மாவளத்தானுக்குத் தமிழ் இலக்கியக் கருவூலத்தினின்றும் தக்க கருத்துக்களை எடுத்து கூறுவார். அரசன் ஆவலோடு கேட்டு அறிந்துக் கொள்வான்; சுவையுணர்ந்து மகிழ்வான். தமிழமுது மாந்திய நேரம் போக, எஞ்சிய ஓய்வு நேரங்களில் இருவரும் வட்டு என்னும் ஒருவகை விளையாட்டினை ஆடிப் பொழுது போக்குவர். வட்டு ஆடுதல் என்பது, 'சொற்கேட்டான்' அல்லது 'சொக்கட்டான்' என்று இன்று வழக்கில் இருக்கும் விளையாட்டினைப் போன்றதொரு சூதாட்ட விளையாட்டு. ஒரு நாள் புலவரும் புரவலனும் வட்டாட விழைந்தனர். உடனே, பணியாட்கள், அறை வரையப்பெற்ற ஓர் அழகிய பட்டுத் துணியினையும், நல்ல மணிகள் பொருந்தப்பெற்ற காய்களையும் கொணர்ந்து வைத்தனர். இருவரும் அதன் எதிர் இருந்து விளையாடலாயினர். ஆட்டம் தொடக்கத்தில் சுறுசுறுப்பின்றியும் சுவையற்றும் இருந்தது; சிறிது நேரம் செல்லச் செல்லச் சிறிது சூடு பிடித்தது. ஆயினும் இரு தரப்பிலும் வெற்றி தோல்வி இன்றி நடுநிலைமையில் இருந்தது. நேரம் போகப் போக ஆட்டம் வலுவடைந்தது. ஆட்டத்தில் ஒரு விறுவிறுப்பும் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மாவளத்தான் கை ஓங்கியது. கண்ணனார் கை தாழ்ந்தது. அதாவது, வெற்றி மாவளத்தான் பக்கத்திலும், தோல்வி கண்ணனார் பக்கத்திலுமாக இருந்தது. பார்த்தார் கண்ணனார். தோல்வியைத் தழுவுவதைக் காட்டிலும், ஆட்டக் காய்களில் ஒன்றை எடுத்து மறைத்து விடலாமா என்று எண்ணினார். ஆனால், அவர் உள்ளம் அதற்கு இடமளிக்கவில்லை. ஆயினும், அவர் எண்ணம் போல் அவரையும் அறியாமலேயே எவ்வாறோ காய்களில் ஒன்று அவர் இருக்கையின் கீழ் மறைந்துவிட்டது. எப்பொழுதுமே வட்டாட்டம் என்றால், அதில் கண்ணும் கருத்துமாக இருப்பவன் மாவளத்தான். ஆகவே, அவனை எளிதில் ஏமாற்றிவிட முடியாது. விழிப்புடன் இருந்த அரசனுக்குக் காய்களில் ஒன்று காணப்படாதது தெரியலாயிற்று. தோல்வியுற இருந்த புலவர் கண்ணனாரே, காணப்படாத காயினை வேண்டுமென்று மறைத்து விட்டார் என்று கருதினான். பொறுமை அவனை விட்டு நழுவியது. சினம் அந்த இடத்தைப் பற்றிக் கொண்டு ஆட்சி புரியலாயிற்று. அது கண்ணனார் எடுத்திருப்பாரா, மறைத்திருப்பாரா என்றெல்லாம் சிந்திக்கக்கூட அவனை விடவில்லை. வெடுட்சி கொண்ட மாவளத்தான் காய்களில் ஒன்றை எடுத்தான்; கண்ணனார் மீது ஓங்கி வீசி எறிந்தான். அது சென்று அவரை வன்மையாகத் தாக்கி விட்டது. கண்ணனார் உண்மையிலேயே காயினை எடுத்து மறைக்கவில்லை. ஆயினும், மாவளத்தான் அவரே எடுத்து மறைத்துவிட்டார் என்று தவறாகக் கருதி விட்டான்; அதோடு காயினை வேறு எறிந்து வன்மையாகத் தாக்கியும் விட்டான்! இச் செயல் கண்ணனார்க்கு மிக்க சினத்தை உண்டாக்கியது. அதனால் அவர், "மாவளத்தான் உண்மையிலேயே சோழர் குடியிற் பிறந்தவன் தானா?" என்று ஐயமுற்றார். அவர் மனம் எண்ணச் சுழலில் உழன்று திரிந்தது. அவையெல்லாம் உருப்பெற்று வெளிவரலாயின. அவரது உள்ளம் முடிதரித்து மண்ணாளும் வேந்தனாகிய மாவளத்தானுக்காக அஞ்சவில்லை. அஞ்சா நெஞ்சினராகிய கண்ணனார் மாவளத்தானைப் பார்த்து இடித்துக் கூறத் தொடங்கினார். "சோழ வேந்தே! வழி வழியாகச் சோழர் குடியில் வந்தோர், பார்ப்பனர் மனம் நோக நடந்து கொள்ளும் பண்பில்லாதவர்கள் அல்ல. வன் பருந்து ஒன்றினால் தாக்குதல் அடைந்து தஞ்சம் என வந்து சேர்ந்தது ஒரு சின்னஞ் சிறிய புறா. அதனைப் பேணிக் காத்தற் பொருட்டுத் தன் இன்னுயிரையும் ஈயத் துணிந்து துலை புகுந்தான் உன் முன்னோன், சிபி என்னும் மாவரசன். அத்தகைய உயர்ந்தவர்கள் பிறந்த பெருமையுடையது சோழர் குடி. பெருமை மிக்க அக் குடியில் உன்னைப் போன்றவர்கள் எவ்வாறு பிறந்திருக்கக் கூடும்?" "மேலும், உன் அண்ணன் நலங்கிள்ளியோ புலவரைப் புரக்கும் வள்ளல் தன்மையும், பகைவரை ஒடுக்கும் பேராண்மையும் உடையவன். அவனோடு உன்னை எவ்வாறு ஒப்பிடுவது? மேலும், உன்னை அவன் தம்பி என்றுதான் எவ்வாறு ஏற்றுக் கொள்வது? உண்மையில் நீ அவனோடு பிறந்திருக்க மாட்டாய். உன் பிறப்பில் உறுதியாக எனக்கு ஓர் ஐயம் உண்டாகிறது!" என்றார். இவ்வுரை கேட்டான் மாவளத்தான்; கேட்பதன் முன்பே புலவர் கண்ணனார் தவறு புரிந்திலர் எனவும் உணர்ந்து கொண்டான். அதனால், அவர் கூறிய இடித்துரைகள், வன்சொற்கள் அவனுக்கு மேலும் சினத்தை மூட்டவில்லை. மாறாகத் தணிக்கச் செய்தன. மாவளத்தான் நிலையினை உண்ர்ந்தார் மாபெரும் புலவர் கண்ணனார். அவர் மனம் இளகிற்று. தாம் நாத்துடிக்கத் தவறி இடித்துரைத்ததையும் உணர்ந்தார். அவனது பொறுமைக்குணம் தெரியலாயிற்று. அவனை வியப்போடு நோக்கிக் கூறலானார்; "அரசே! நான் வேண்டுமென்றே காயினை எடுத்து மறைத்துக் கொள்ளவில்லை. ஆனால், அது எவ்வாறோ என்னையும் அறியாமல் மறைந்து கொண்டு விட்டது. ஆகவே, நீ என்னைத் தவறு புரிந்தவன் எனத் தவறாகக் கருதிவிட்டாய்; அதனால் காய் கொண்டு எறிந்தும் வன்மையாகத் தாக்கிவிட்டாய்! " அது பொறாத நான், உன்னைச் செம்மையாகச் சொற்காய் கொண்டு எறிந்து தாக்கி விட்டேன். அதற்காக நீ மிகவும் வருந்துகின்றாய்! ஆயினும் தவறி இடித்துக் கூறிவிட்ட என்னை, ஏதும் செய்யாது அடங்கியுள்ளாய்! ஆகவே, நீ பிறர் கூறிய பழிப்புரைகளையும் பொறுத்தருளும் பண்புடையவனாய் விளங்குகின்றாய்!" " இப்பண்பு உனக்கு மட்டும் உரியதன்று. பொதுவாகச் சோழர் குடிக்கே உண்டு. அவர்கள் பிழை புரிந்தாரையும் பொறுக்கும் பேருள்ளம் படைத்தவர்கள். அத்தகைய குடியிலே பிறந்து, அப் பண்பிலே சிறிதும் மாறாது நீ மாண்புற்றுள்ளாய். ஆகவே, நீ காவிரியாற்று மணலைக் காட்டிலும் பல நாள் வாழ்வாயாக!" என்று வாழ்த்தினார். பிறகு, மன்னன் மாவளத்தான், கன்னித் தமிழ்ப் புலவர் தாமப்பல் கண்ணனாரோடு, பகை மறந்து ஒன்றி வாழ்ந்தான்; தமிழமுது உண்டு மகிழ்ந்தான். -- சங்கத் தமிழ் இலக்கியம் --
No comments:
Post a Comment