பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 8, 2014

“பாரதி லீலை”

சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதியுள்ள இந்த நூலிலிருந்து சில பகுதிகளை பாரதி அன்பர்கள் படிப்பதற்கென்று கீழே கொடுக்கிறேன். இது முதல் பகுதி. மற்ற பகுதிகள் தொடர்ந்து வெளிவரும். 1938இல் வெளிவந்த இந்த நூலின் சிறப்பை இதனைப் படிக்கும்போதே தெரியவரும்.

“பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                                                      அன்னை

                                                 அன்னை வடிவமடா - இவள்
                                                ஆதிபராசக்தி தேவியடா - இவள்
                                                இன்னருள் வேண்டுமடா - பின்னர்
                                                யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா.

ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு என்று புதுச்சேரியிலே ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவிலே ஒரு வீடு. வீட்டின் மாடியிலே திறந்த வெளியிலே ஒருவர் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறார்; ஆகாயத்தை அண்ணாந்து நோக்கியபடியே இருக்கிறார்; ஆகாயத்தை அப்படியே விழுங்கி விடுகிறவர் போலே பார்க்கிறாரே! அவர் யார்? அவர்தான் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்.

இரவு மணி பத்து. எங்கே பார்த்தாலும் ஒரே இருள். இயற்கைத் தேவி "இருளாயி"யுடன் கூத்தாடுகிறாள்; இருட்டு; இருட்டு; மையிருட்டு; அந்த மையிருட்டு நேரத்திலே மாடியிலே திறந்த வெளியிலே உட்கார்ந்திருக்கிறார் பாரதியார். அவருடன்கூட வேறு ஒருவரும் இருக்கிறார். திடீரென்று துள்ளிக் குதிக்கிறார் பாரதியார்.

"அடே! சங்கரா! இந்த இருளைப் பாரடா! இதுதான் பராசக்தி. இந்த இருளிலே மகாகாளி ஒரு பெண் மாதிரிக் காட்சி தருகிறாள் பார். இந்த மையிருட்டுத்தான் மகாகாளி. அவளைப் பார்த்துப் பிரார்த்தனை செய்" என்று ஆவேசம் வந்தவர் போலக் கூறுகிறார்.

தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து ஆகாயத்தை அண்ணாந்து நோக்கிவிட்டார். அவ்வளவுதான்! அவர் மெய்மறந்து அந்த இருளிலே ஈடுபட்டார். அப்பொழுது ஓர் அழகான பாட்டுப் பிறந்தது.

             "பின்னோ ரிராவினிலே - கரும்
             பெண்மை உஅழகொன்று வந்தது கண்முன்பு
             கன்னி வடிவ மென்றே - களி
             கொண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
            அன்னை வடிவமடா! - இவள்
            ஆதி பராசக்தி தேவியடா! - இவள்
            இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
            யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா!

            செல்வங்கள் பொங்கிவரும் - நல்ல
            தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்
            அல்லும் பகலுமிங்கே - இவை
           அத்தனை கோடி பொருளினுள்ளே நின்று
           வில்லை யசைப்பவளை - இந்த
           வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
           தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
           தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா!"

இதுதான் அந்தப் பாட்டு. "மூன்று காதல்" என்ற தலைப்பின் கீழே ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார் பாரதியார். முதலாவது 'சரஸ்வதி காதல்'; இரண்டாவது 'லக்ஷ்மி காதல்'; மூன்றாவது 'காளி காதல்'.

இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்த அழகான பாட்டில் அந்தக் காளி காதல்தான் மிகவும் சிறந்தது. 'கன்னி வடிவமென்றே களி கொண்டு சற்றே அருகிற் சென்று பார்க்கையில்' என்னும் அடிவரை தாழ்ந்த குரலில் பாடவேண்டும். பாடிய பிறகு 'அன்னை வடிவமடா! இவள் ஆதிபராசக்தி தேவியடா! இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா' என்ற வரிகளையெல்லாம் உயர்ந்த ஸ்தாயியில் குரலை உயர்த்திப் பிடித்துப் பாடினால் அற்புத ரஸம் அப்படியே 'கல கல' வென்று உதிரும்.

பராசக்தி நினைவு பாரதியாரின் நெஞ்சில் எவ்வளவு தூரம் வேரூன்றியிருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் போதாதா?

                                                           (தொடரும்)




No comments: