பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 14, 2014

10. பாதிரியார் பாராட்டு

                                                                “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                                       10. பாதிரியார் பாராட்டு

                                                              "விளையும் பயிர் முளையிலே தெரியும்"

திருநெல்வேலி ஜில்லாவில் 'நாஸரெத்' என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரிலே ஒரு பாதிரியார் வசித்து வந்தார். அவர் பெயர் ரெவரண்டு ஏ.கானன் மெகாஷியஸ் என்பது. அவர் அக்காலத்தில் இருந்த 'பிரைமரி போர்டு' தலைவராயிருந்தார். அந்தப் பிரைமரி பரீக்ஷை எழுதி சர்டிபிகேட் வாங்குவது ஒரு பெரிய கெளரவம் என்று அக்காலத்திய இளைஞர்கள் எண்ணினார்கள். ஆதலினாலே ஏராளமான பேர்கள் அப்பரீக்ஷைக்குப் போவதுண்டு. பாரதிக்கும் அந்தப் பரீக்ஷை பாஸ் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

அப்பொழுது எட்டயபுரத்தில் ஏ.வி.ஸ்கூல் என்று ஒரு பள்ளிக்கூட மிருந்தது. சங்கர ஐயர் என்பவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் எட்மாஸ்டர். அவரிடம் பாரதியார் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் பாரதியாரின் விருப்பத்துக் கிணங்கிச் சில மாணவர்களுடன் பாரதியாரையும் பரீக்ஷைக்கு அனுப்பினார்.

அந்த வருஷத்திலே சுமார் இருநூறு பேர் அந்தப் பரீக்ஷைக்குச் சென்றனர். எல்லாரும் சாத்தூரில் மேற்பட் பாதிரியார் முன் ஆஜரானார். ஒவ்வொருவரையும் தமக்குத் தெரிந்த ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடுமாறு பாதிரியார் கேட்டார். பாரதியார் 'டுவிங்கில் டுவிங்கில் லிட்டில் ஸ்டார்' என்ற இங்கிலீஷ் கவியை மிகுந்த உற்சாகத்துடனும், ரஸாபாவத்துடனும் அபிநய பூர்வமாகப் பாடிக் காட்டினார். அது கண்டு பாதிரியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டார். சங்கரய்யர் என்பவரிடம் "இந்தச் சிறுவன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் உடனே லண்டனிலுள்ள ஏதாவதொரு சர்வகலாசாலைக்கு இவனை அனுப்புமாறு இவன் தந்தையிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்.

இளமையிலேயே பாரதியார் பாட்டிலும் கவிதையிலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

                                          பாரதியாரும் ஸங்கீதமும்

1899 -1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீக்ஷிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீக்ஷிதர் என்பார் 'ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி' என்றதோர் அரிய ஸங்கீத நூலை இயற்றிக் கொண்டிருந்தார். எட்டயபுரம் மன்னர் அதற்கு வேண்டிய பொருளுதவி புரிந்து வந்தார். அந்தச் சமயத்திலே சென்னை சீப் செக்ரிடேரியட் ஆபீஸ் மானேஜராயிருந்தவரும் ' பிராசீன கானம்' (Oriental Music in European Staff Notation) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எம். சின்னசாமி முதலியார் எம்.ஏ. யும் அங்கே இது சம்பந்தமாக வந்திருந்தார். 72 மேளங்களின் தாரதம்யங்கள் பற்றி அங்கே சர்ச்சை நடைபெறும். சின்னசாமி முதலியாரவர்களின் இடைவிடாத நண்பராயிருந்து அவ்வப்போது அவருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தவர் எட்டயபுரம் ஸ்ரீ குருகுஹதாஸப் பிள்ளை அவர்களாவர். அவர்களுடனே பாரதியாரும் மேற்பட் சங்கீத விவாதம் நடக்குமிடத்துக்குச் செல்வார்; சென்று ராக லக்ஷணங்கள் அவற்றின் சஞ்சாரங்கள் முதலியவைகளைத் தெளிந்து அப்யஸிப்பார்.

இவ்விதமாக பாரதி ஸங்கீதத்தில் விற்பன்னரானார். ஸ்ரீ சுப்பராம தீக்ஷதர் பேரிலே பாரதி ஒரு சரம கவி பாடியிருக்கிறார். பின்னே 1908ல் பாரதி எட்டயபுரம் போயிருந்தார். அப்பொழுது ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதர் அவர்களது வீட்டுக்குப் போனார். 'ஸங்கீத ஜோதி மறைந்ததே' என்று வாய்விட்டுக் கூறினார். பாரதியும் தீக்ஷதரும் முன்பு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தைப் பத்து நிமிஷம் உற்று நோக்கினார்; கலகலவென்று கண்ணீர் உகுத்தார். அவ்விடத்தை வீழ்ந்து நமஸ்கரித்து விட்டுப் போய்விட்டார்.

                                                     பூ மழை பொழிந்தார்

சுதேசிக் கப்பல் ஓட்டிய தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இருந்த பொழுது பாரதியார் அரசாங்கத்தின் உத்தரவு பெற்று அவரைப் பார்க்கச் சென்றார். சிறையிலே தமிழ் நாட்டுத் தேசபக்தர் அடைபட்டுக் கிடந்தார். பாரதியார் அவரைப் பார்க்கப் போகும் பொழுது ஒரு கூடை நிறையப் பூ வாங்கிக் கொண்டு போயிருந்தார். அந்தக் கூடை பூவையும் சிதம்பரம் பிள்ளை மீது வர்ஷித்து ஆனந்த பாஷ்பம் பொழிந்தார் பாரதியார்.

எட்டயபுரத்திலே இருக்கும் பொழுது பாரதியாருக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் அவ்வளவாக மனப்பிடித்தம் கிடையாது. சூரத் காங்கிரசின் போதுதான் இருவருக்கும் அத்தியந்த ஸ்நேகம் உண்டாயிற்று.

                                             குவலயானந்த மொழிபெயர்ப்பு.

ஸம்ஸ்க்ருதத்திலே 'குவலயானந்தம்' என்று ஒரு நூல் இருக்கிறது. அதை ஸ்ரீ சங்கர சாஸ்திரிகள் என்பார் தமிழில் மொழி பெயர்த்தார். எட்டயபுரம் மீனாட்சிசுந்தரக் கவிராயர் அதைப் பாட்டாகப் பாடினார். எட்டயபுரம் சின்ன ராஜாவால் அது அச்சிடப்பட்டது. அப்பொழுது பாரதியார் எட்டயபுரத்திலிருந்தார். தமிழ்மொழி பெயர்ப்பிலே அணி நயத்திலே சில குற்றங்கள் இருப்பதாகவும் மூல நூலிலே அவ்விதம் இருந்திருக்க முடியாதென்றும் பாரதி சாதித்தார். சாதித்த பிறகு அதை மெய்ப்பித்தும் காட்டினார்.

உண்மையில் மூல நூலிலே அக்குற்றம் இல்லை. அப்பொழுது பாரதிக்கு அவ்வளவாக ஸம்ஸ்கிருதம் தெரியாது. இம்மாதிரி நூல் இயற்றுவது பெரிய காரியமில்லை யென்றும் அம்மாதிரி நூல் இயற்றித் தருமாறு தம்மைச் சமஸ்தானம் கேட்டுக் கொண்டால் தாம் இயற்றித்தரச் சித்தமாயிருப்பதாகவும் கூறினார்.

                                                                                       (தொடரும்)



No comments: