பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 7, 2014

'அங்கனே ஆகுக!'



மகாகவி பாரதி 'அத்வைத' சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவன். அதனால்தான் தனக்கும் தன் மனைவி குழந்தைகளுக்கும் எல்லா நலன்களும் இல்லையென்றாலும் உலகிலுள்ள எல்லா உயிர்களுக்குமாய் இறைவனிடம் வேண்டி, அத்தனை உயிர்களும் 'இன்புற்றிருக்க வேண்டும் என' வேண்டுகிறான். இதோ பாருங்கள் அவன் வேண்டுதலை; இதுபோல எண்ணம் வேறு யாருக்கு வரும் என சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

"பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா!


ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல் உயிரெலாம்
இன்புற்று வாழ்க' என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு, திருவுளம் இரங்கி
'அங்கனே ஆகுக!' என்பாய்,
ஐயனே!

இந்நாள், இப்பொழுது எனக்கு இவ்வரத்தினை
அருள்வாய் ஆதிமூலமே!
அனந்த
சக்தி குமாரனே! சந்திரமெளலி
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே!

(விநாயகர் நான்மணி மாலை)

No comments: