பி. லீலா
பி. லீலா திரைப்படப் பின்னணிப் பாடகி. பி.லீலா என்னும் ஞானகோகிலம், கேரள மாநிலம், பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது மகளாக பிறந்தார். சாரதா, பானுமதி என்ற இரு அக்காள், லீலா வீட்டின் கடைக்குட்டி. அப்பா மேனன் ராமவர்மா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இசை, பாடல்கள் மீது மேனனுக்கு அலாதி பிரியம். அவரே தனது பெண்களுக்கு இசை பயிற்சி அளிக்க வைத்து, லீலாவை பெரிய பாடகியாக மாற்ற உதவினார்.
இறைவன் லீலாவுக்கு கொடையாக அளித்திருந்த நல்ல குரல் வளத்தை, மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான சங்கீத பயிற்சி அளித்து சீராக்கினார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் என பல சங்கீத மேதைகளிடம் பயின்று இசை திறமையை வளர்த்துக்கொண்டார்.
12 வயதில் ஆந்திர மகிள சபாவில் லீலா செய்த கச்சேரியே அவரை மிக பிரபலம் ஆக்கியது. துர்கா பாய் தேஷ்முக் அவர்களிடம் பாராட்டையும், பரிசையும் பெற்றார். பின்னர் தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள் செய்தார். 1948ல் திரைத்துறையில் பாட நுழைந்தார்.
1948 தொடங்கிய இவரது சினிமா பயணம், 1968 வரை 21 ஆண்டுகள் தொடர்ந்தது. 7000 பாடல்களை பாடி முடித்தார். எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பாடினார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இளையராஜா அவர்கள் இசையில் பாசில் அவர்களின் இயக்கத்தில் உருவான, கற்பூர முல்லை என்ற படத்திற்காக "ஸ்ரீசிவ சுத பத கமல" என்ற அருமையான மிக கஷ்டமான பாடலை பாடி கொடுத்தார்.
இனிமையான குரல் மட்டுமல்ல, குணமும் கொண்டவர் லீலா. பாடிய பாடலுக்கு பணத்தை கூட வற்புறுத்தி வாங்க தெரியாதவர். கொடுத்தால் மட்டுமே வாங்கி கொள்வார் என்பார்கள். இவர் இசை பாடல் என்றே வாழ்ந்ததால் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி குடும்பத்தினருடனே வாழ்ந்து வந்தார்.
ஞானகோகிலம் , ஞானமணி, கலாரத்னம், கானவர்ஷினி என பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் பி.லீலா. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். கேரள, தெலுங்கு திரை உலகமும் பல விருதுகளை அளித்து இவரை கௌரவித்தன. 2006ல் பத்மபூஷன் விருதை அளித்து மத்திய அரசு பெருமை பெற்று கொண்டது. ஆனால் அவ்விருதை பெற அப்போது லீலா அவர்கள் உயிரோடு இல்லை என்பதே சோகமான செய்தி.
சென்னை டிஃபென்ஸ் காலனியில் தனது உறவினர்கள் வீட்டில் அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த இசை கோகிலம் பி.லீலா தனது 76ஆவது வயதில் 2005ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இசையுலகமே அதிர்ச்சியில் உறைந்து அஞ்சலி செலுத்தியது.
மாயமே நானறியேன் ... கண்ணுடன் கலந்திடும் சுப தினமே ... மாப்பிள்ளை டோய்..மாப்பிள்ளை டோய்.. வெண்ணிலவே தன்மதியே என்னுடனே வாவா .. நீதானா என்னை அழைத்தது .. நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும்..
No comments:
Post a Comment