பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, January 10, 2014

வேட்டி தினம்

                                                                     வேட்டி தினம்

தமிழர்கள் வேட்டிதான் அணிந்தனர். இன்று வேட்டி அணியும் ஆண்களைத் தேடித்தான் பார்க்கவேண்டும். அரசியல் ஆயிரந்தான் அப்படி இப்படி இருந்தாலும் அரசியல் வாதிகள் மட்டும் தமிழ்நாட்டில் வேட்டி அணிந்து பார்க்க கண்கொள்ளாக் காட்சியாகக் காட்சியளிக்கிறார்கள். கட்சிகளின் பொதுக்குழு என்று தொலைக்காட்சியில் காட்டும் காட்சிகளில் வரிசையாக ஒரே மாதிரியில் வெள்ளை வெளேர் என்று வேட்டி முழுக்கை சட்டை அணிந்து அரசியல் வாதிகள் காட்சியளிப்பது பார்த்து மகிழத் தக்கது. தறியில் தொடர்ச்சியாக நெய்து அதைத் துண்டு துண்டாக வெட்டி எடுப்பதால் வேட்டியென்றாயிற்று என்பர். பேண்ட் அணிபவர் மத்தியில் வேட்டி அணிந்தவரின் தோற்றம் கெளரமிக்க தோற்றமாகக் காட்சியளிக்கிறது. சமீப காலத்தில் தமிழகத்தில் வேட்டி அணிவோர் எண்ணிக்கை கிராமங்களில் கூட மிகக் குறைந்துவிட்டது. கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலும் வேட்டி, புடவை இவற்றை நெய்து, பண்டிகைக் காலங்களில் தெருக்களில் மூட்டை மூட்டையாக வைத்துக் கொண்டு வியாபரம் செய்வார்கள். தீபாவளி பண்டிகை இவர்களுக்குக் கொண்டாட்ட காலம். தஞ்சாவூரில் தீபாவளிக்கு சில நாட்கள் முன்பிருந்து தெற்கு வீதி நெடுக கைத்தறி நெசவாளர்கள், ஈரோடு, சென்னிமலை, எடப்பாடி போன்ற ஊர்களிலிருந்து கைத்தறி வேட்டி துண்டு புடவைகளை வியாபாரம் செய்வார்கள். பொதுமக்கள் பெரிதும் கைத்தறி துணிகளை இவர்களிடமிருந்து வாங்கிச் செல்வார்கள். தீபாவளி சமயத்தில் மழை வந்துவிட்டால் இவர்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு விடும். அப்போதெல்லாம் இவர்கள் தங்கள் துணிகளை கட்டுபடியாகும் விலையில் விற்றுவிட்டுச் சென்றுவிடுவார்கள். தீபாவளிக்கு முந்தைய இரவு பதினோரு மணிக்கு இவர்கல் ஊருக்குப் புறப்படும் நேரம் பல சென்று வாங்குவார்கள். அவர்களும் வந்த விலைக்குத் தள்ளிவிட்டு ஊருக்குப் புறப்படும் அவசரத்தில் இருப்பார்கள். பொதுவாக கைத்தறி நெசவாளர்கள் பாடு மிகவும் கஷ்டமான வாழ்க்கை.

இவர்கள் உற்பத்தி செய்யும் வேட்டிகளை விற்பனை செய்து அவர்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் விதத்தில் கைத்தறித் துறையின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு யு.சகாயம், ஐ.ஏ.எஸ். ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு நாளை வேட்டி தினம் என அனுசரிக்கும்படி கல்லூரி, அரசு துறைகள் இவற்றுக்கு எழுதி குறிப்பிட்ட நாளில் கூடியமட்டும் அனைவரும் வேட்டி கட்டி கைத்தறித் துறைக்கும் கோஆப்டெக்சுக்கும் ஒரு விடியலை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறார். திரு சகாயம் ஐ.ஏ.எஸ். ஏற்கனவே ஊழலுக்கு எதிரானவராக செயல்பட்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர். இவருடைய இந்த வேட்டி தினம் என்பது ஏழை எளிய நெசவாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க இவருடைய முயற்சி. இந்த ஒரு நாளாவது தமிழர்கள் வேட்டி கட்டுங்கள், பின்னர் பல நாட்களும் கட்டப் பழகுங்கள். நாமும் சிறப்பாகத் தோன்றலாம், கைத்தறி நெசவாளர்களும் ஒரு வேளை நல்ல சோறு சாப்பிடலாம்.

இந்த புது முயற்சியைத் தோற்றுவித்த திரு யு.சகாயம் ஐ.ஏ.எச். வாழ்க.

No comments:

Post a Comment

You can give your comments here