பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

இனியவை நாற்பது (நிறைவுப் பகுதி)


40.இனியவை நாற்பது (நிறைவுப் பகுதி)

அவர் வாழும் அதே ஊரில் பிறந்து, வளர்ந்து படித்து வேலையும் பார்த்தவர். திருமணமாகி குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்கள் பிழைப்பு தேடி, வெளி நாடுகளுக்கும், வெளி ஊர்களுக்கும் சென்று விட்டார்கள். ஒரே பெண் திருமணமாகி புகுந்த வீடு சென்று விட்டாள். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவரை அவரது மகன்கள் தங்களுடன் வந்துவிடுமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் இவர் கேட்கவில்லை. அப்படி இந்த ஊரில் என்னதான் இருக்கிறது. ஆணி அடித்தது போல இங்கேயே உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கிறீர்களே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அவர் கேட்கவில்லை. அவருக்கு அப்படி என்னதான் இருக்கிறது அந்த ஊரில். அதற்கு அவரது மனதைப் புரிந்து கொண்டால்தான் விடை காண முடியும். அவர் நினைவு தெரிந்து பார்த்தது அந்த ஊரில் அந்தத் தெரு, செடி, கொடி, மரங்கள், மனிதர்கள் இவைகளைத்தான். அவர் பழகியது, படித்தது அனைத்தும் அங்கேதான். தான் வாழ்ந்து முழுமையாகப் பூர்த்தியடைந்த பிறகும் அந்த ஊரைப் பிரிந்து வாழ முடியாது என்று அவர் மனம் உணர்ந்தது. தனது முடிவும் அதே ஊரில் அதே சூழ்நிலையில்தான் இருக்க வேண்டுமென்று கருதினார். அதில் என்ன தவறு? மனைவியும் போய்ச்சேர்ந்த பிறகும் அவர் அந்த மண்ணில் வாழ்வதையே விரும்பினார். மகாகவி பாரதி பாடினார்:-

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல் போந்ததும் இந்நாடே - இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலையள் ஈன்று அமுதூட்டித் தழுவியதும் இந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வ்ளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

இந்த கருத்துக்கள் நாட்டுக்கு மட்டுமல்ல, ஊர்களுக்கும் உண்டு என்பதை இவர் மெய்ப்பித்து வந்தார். பல்பொருள் கொடுத்து வலிய அழைத்தாலும் இவர் தன் சொந்த மண்ணை விட்டு அகலாமல் வாழ்ந்த வாழ்க்கை இனியது.

பெரிய புராணத்தில் வரும் ஒரு அடியாரின் வரலாற்றில் சிவபெருமான் அந்தத் தொண்டரைச் சோதிக்க விரும்பி ஒரு நாள் இரவு, கடும் மழை பொழியும் நேரத்தில், அகாலத்தில் அவரிடம் வந்து தனக்குப் பசிக்கிறது உணவு கொடு என்கிறார். அந்த அடியோரோ சிவனடியாருக்கு உணவு தருவதையே தனது கடமையாகக் கொண்டவர். அப்படி சிவபெருமான் வந்து கேட்கும் நேரத்தில் அவர் வீட்டில் உணவுக்கு எதுவும் இல்லை. அன்று மாலைதான் விதை நெல்லைக் கொண்டு போய் வயலில் தூவிவிட்டு வந்தார். ஆகவே அந்த சந்நியாசியை உட்காரவைத்துவிட்டு இருட்டில் மழையில் வயலுக்குச் சென்று அன்று வயலில் தூவிய நெல்லைத் துழாவி எடுத்து வந்து குத்தி சோறாக்கி உணவு படைத்தாராம். அப்படிப்பட்ட சோதனை எந்த மனிதனுக்கும் வரக்கூடாது. விதை நெல் என்பது ஒன்றை நூறாக்கி பலமடங்கு பெருக்குவதற்காக ஏற்பட்டது. அதைக் குத்தி, புடைத்து சோறாக்கித் தின்றுவிட்டால் பின்னர் விளைச்சல் இல்லாமல் போகாதா? செடி கொழுந்துவிட்டு வளரும் நேரத்தில் அதனைக் கிள்ளி விட்டால் அது வளர்ந்து பலன் கொடுப்பது எப்படி? ஆகையால் விதைக்கான தானியங்களை விதைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைக் குத்தி உண்ணக் கூடாது என்பது இனியது.

சிலர் இருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றால், சும்மா இருக்கிறேன் என்பார்கள். சும்மா என்றால் எதுவுமே செய்யாமல் இருப்பது. அப்படியானால் அவரது மனம் சோம்பித் திரியும். சோம்பல் உள்ளவன் மனம் இஷ்டம் போல் உலாவும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Idle man's brain is devil's workshop என்று. சோம்பித் திரிபவனின் மனம் பிசாசின் இருப்பிடம் என்பது உண்மை. ஆகவே சோம்பித் திரிந்து, நேரத்தையும், காலத்தையும் வீணடிக்காமல் நல்ல நூல்களைப் படித்துப் பண்பட்டு நல்ல மனிதனாக வாழ முயற்சிக்க வேண்டும்.

"பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிக இனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்."

பொருள்: பத்துப் பொருள் கொடுத்தாலும் தன் சொந்த ஊரில் வாழ்வது இனியது; விதைக்கான நெல்லைக் குத்தி உண்ணாத இயல்பு இனியது; நாளை வீணாக்கி வெட்டிப் பொழுது கழிப்பதிலும், நல்ல நூல்களைக் கற்பது இனியது.

இதுவரை இனியவை நாற்பதைப் பார்த்தோம். இவற்றில் சில இந்த காலத்துக்கு ஒத்துப்போகாமல் இருந்தாலும், இவையெல்லாம் பொதுவான நீதி என்பதால் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் என்றும் இன்பம், எதிலும் இன்பம். வாழ்க்கைப் பயனுடையதாக அமையும்.


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

ல்பொருள் கொடுத்து வலிய அழைத்தாலும் இவர் தன் சொந்த மண்ணை விட்டு அகலாமல் வாழ்ந்த வாழ்க்கை இனியது.

சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரு போல வருமா???

thanusu said...

இனியவை நாற்பது அத்தனையும் படித்தேன் அய்யா. அத்தனைக்கும் ஒரு சிறு கதையோடு விளக்கம் கொடுத்து இருந்தது நன்றாக இருந்தது .

நல்ல நூல்களைப் படித்து பண்பாட்டு நல்ல மனிதனாக வாழமுயற்ச்சிக்க வேண்டும் . இது நீங்கள் சொன்னது , ஆனால் படித்து பண்பட்டு நல்ல மனிதனாக இருப்பதோடல்லாமல் அதனை அனைவருக்கும் தெளிவுபட எடுத்துச்சொல்லி வாழ்ந்து காட்டும் உங்களை என்ன என்று சொல்வது.நூல்களை படிப்பதைவிட உங்களை படித்தாலே போதும் .

நன்றிகள் அய்யா மிக்க மிக்க நன்றிகள் .

sriganeshh said...

Dear Sir,

If you can provide the entire series as pdf download, will be easy for offline as well future anytime reading. One need not go through entire webpages again and again.
You can try cutepdf program to make pdf documents.
thanks for a practical series on iniyavai 40.

sri