பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

. "இனியவை நாற்பது" (28)

28. இனிமை இருபத்தியெட்டு

மகாகவி பாரதி கண்ணன் என் சீடன் என்றொரு பாடலை எழுதியிருக்கிறார். அது தத்துவார்த்தமான பாடல் என்றாலும் அந்தப் பாடலில் முதலில் காணப்படும் அந்த கவைக்குதவாத சீடனைச் சற்று நினைத்துப் பார்ப்போம். எதைச் சொன்னாலும் அதற்கு மாறாகச் செய்வது; அல்லது செய்யாமல் இருப்பது; அல்லது செய்யத் தெரியாமல் விழிப்பது. இப்படி. இந்தப் பாடலின் கருத்து வேறு. 'நான் செய்வேன்", இந்த சீடனை நான் மாற்றிக் காட்டுவேன் என்று அகந்தை மிகுந்திருந்த போது கண்ணனாகிய அந்த சீடன் குருவின் சொல்லை கேட்கவேயில்லை. கடைசியில், நான் உன்னிடம் தோற்றேன் என்று சொன்னதும், உடனே அந்த சீடன் எள் என்றவுடன் எண்ணெயாக அத்தனை வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கிறான்.

ஆனால் இங்கு நாம் பார்க்கப்போகும் ஆள் எதற்கும் ஆகாதவன். எந்தச் செயலையும் செய்ய வக்கில்லாதவன். சாமர்த்தியம் கிடையாது. அவசரமாக ஒரு பொருள் வேண்டுமென்று சொன்னால் அவன் போனவன் போனவந்தான் திரும்பி வருவதே கிடையாது. நம் வேலையும் கெட்டுப் போகும். அவனை நம்பினால் மண்குதிரையை நம்பிய கதைதான். அப்படிப்பட்ட கவைக்குதவாத மனிதனிடம் எந்தப் பொறுப்பையும் ஒப்படைத்து இதனைச் செய்து முடி என்று சொல்லாதிருத்தல் இனிமை தரும்.

வாழ்க்கை நிலையாமையை மனிதன் முதுமையை அடையும்போதுதான் உணர்கிறான். அது வரை 'ரத்தத் திமிர்' என்பார்களே அந்த இளமைக் காலத்தின் அகம்பாவமும், அலட்சியமும் அவனைத் தானே எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல் மிக்கவன், தனக்கு மிக்கவன் யாரும் கிடையாது என்றெல்லாம் நினைக்கிறான். கிடைத்த பொருளை அபகரித்துச் சேகரித்துக் கொள்கிறான். பொய்யும், களவும், பிறர் பொருளை ஏமாற்றி அபகரிக்கும் வஞ்சகமும் அதிகரித்து ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொள்கிறான். ஆனால் இளமையும், பேராசையும் இருக்கும் வரை இவனுக்கு வாழ்க்கை நிலையாமை குறித்த அறிவே இருப்பதில்லை. தன் தேவைக்கு மேல் ஒரு சிறிது ஆபத்துக்கு உதவட்டுமே என்று சேர்த்து வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் கொண்ட மட்டும், ஆகாயமே எல்லை என்று கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொள்ளும் கயமைத்தனம் தேவையில்லை. எதற்காக இத்தனை? இவைகள் எல்லாம் இவன் போகும்போது கொண்டு போகப் போகிறானா? அல்லது இவன் வாரிசுகள் அவைகளைக் கட்டிக் காக்குமா? எமன் ஒரு நாள் வரப்போகிறான். நம்மைக் கொண்டு சென்று விடுவான். நம் வாழ்க்கை சாசுவதம் இல்லை என்கிற வாழ்க்கை நிலையாமையைப் புரிந்து கொண்டால், தானும் வாழ்ந்து, பிறரும் வாழ உதவி அனைவரும் போற்றும் குணவானாக இருப்பதே நன்று. அப்படிப்பட்டவனின் வாழ்வும் எண்ணமும் இனிது.

ஒருவன் வாழ்ந்த காலத்தில் நல்ல செல்வாக்கும், செல்வமும், இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் படை குடிகளும் இருக்கும் வரை முகத்தில் நிம்மதியையும், புன்னகையையும் சிந்திக் கொண்டிருந்துவிட்டு, இவை அனைத்தும் போய் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் காலத்தில் இவனிடம் உதவி கேட்டுப் பெற்றவர்களையெல்லாம், திருட்டுப் பயல்கள் இருந்த காலத்தில் பிடுங்கித் தின்றார்கள். இன்று எனக்கு இல்லை என்றதும் ஒரு பயலும் என்னைக் கவனிக்கவில்லை. கேடுகெட்ட மனிதர்கள் செய்நன்றி கொன்ற அயோக்கியர்கள். இவர்களுக்கெல்லாம் போய் நான் உதவிகளைச் செய்தேனே. இன்று என்னை கவனிக்க ஒருவரும் வரவில்லையே என்றெல்லாம் பிறர் மீது கடும் சொற்களை வீசாமல், பாவச் சொற்களை சொல்லாமல், தெளிவோடு, அறிவு பூர்வமாக தாழ்ந்திருந்த போதும் பெருந்தன்மையான சொற்களை உபயோகித்துப் பேசுவது இனிமை தரும். இல்லையா?

"ஆற்றானை யாற்றென் றலையாமை முன் இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்."

"செயல் திறன் இல்லாத ஒருவனிடம் இந்த காரியத்தைச் செய் என்று ஒப்படைத்துவிட்டு அவன் செய்யாதது கண்டு மனம் வருந்துவதைக் காட்டிலும் அவனிடம் வேலையை ஒப்படைக்காமல் இருப்பது இனியது. கூற்றுவன் நம் உயிரை ஒரு நாள் கொண்டு போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு நல்ல வண்ணம் சிந்தித்து ஒழுங்கோடு வாழ்வது இனியது; செல்வங்களை இழந்து வரிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் பாவச் சொற்களைச் சொல்லாமல் தெளிவோடு வாழ்வது இனியது.

No comments:

Post a Comment

You can give your comments here