பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (27)

27. இனியவை இருபத்தேழு. 

இந்தப் பாடலின் கருத்தைச் சற்று விவரமாக பார்க்க வேண்டும். இந்தப் பாடலின் கருத்துக்கு தஞ்சை மராத்தியர் வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஆற்காட்டு நவாப் அன்வர்தீன் கானின் மகனான முகமது அலியை அவனது உறவினன் சந்தா சாஹேப் பிரெஞ்சுக் காரர்களின் உதவியோடு ஆற்காட்டைவிட்டுத் துரத்திவிட்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். பின்னர் முகமது அலி தஞ்சை மராத்திய மன்னர் பிரதாபசிம்ம ராஜாவின் உதவியோடு சந்தாசாஹேபை தோற்கடித்து ஆற்காட்டை மீட்டு முகமது அலியிடம் கொடுத்தார். பின்னர் சந்தா சாஹேப் பலத்த படையுடன் தஞ்சைக்கும் திருச்சிக்கும் படையெடுத்து வந்தான். அவன் படைகள் திருவரங்கத்தில் தங்கி போரிட்டது. அவனை எதிர்த்து ஆங்கில கம்பெனி படைகளும், மைசூர் படைகளும், கிழக்கிலிருந்து தஞ்சை மராத்தியர் படையும், இராமநாதபுரம் சேதுபதி படைகளும் போரிட்டன. மராத்தியர்களின் படை தளபதி மானோஜி ராவ் தலைமையில் கோயிலடி எனும் இடத்தில் (கல்லணைக்குப் பக்கத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகில்) தங்கியிருந்தது. இடையில் மாட்டிக் கொண்ட சந்தா சாஹேப் தப்பிக்க வழியின்றி இரவோடு இரவாக கோயிலடி வந்து மானோஜி ராவிடம் சரணடைகிறான். முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் சித்திரவதை செய்துவிடுவான் என்று மானோஜி ராவிடம் அடைக்கலம் கேட்டான். மன்னர் பிரதாபசிம்மரும் இந்த சந்தாசாஹேப் தஞ்சையை கொள்ளை யிட்டவன், அக்கிரமங்கள் புரிந்தவன் என்றாலும் அடைக்கலம் என்றதும் வேறு வழியில்லை. நமது தர்மப்படி அடைக்கலம் அடைந்தவனைக் காப்பது நம் கடமை என்று அவனுக்கு அடைக்கலம் கொடுத்து தஞ்சையில் அரண்மனைத் தோட்டத்தில் ஒரு வீட்டில் சிறை வைத்தார். அப்படிப்பட்ட பிரதாபசிம்மருடைய வீரம் இனிமையுடையது.

சந்தா சாஹேப் தஞ்சையில் அடைக்கலம் புகுந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதும், முகமது அலியும், ஆங்கிலேயர்களும் அவனைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரதாபசிம்மரை வற்புறுத்தினர். தாங்கள் அவன் உயிரைக் காப்பதாகச் சொன்ன வாக்குறுதிக்காக மன்னரும் பெரும்பாடுபட்டு அவனை அனுப்பாமல் இருந்தார். ஆனால் இறுதியில் அவனை அவர்களிடம் ஒப்படைக்கும்படியான கட்டாயம் வந்தது. சந்தா சாஹேபும் தான் இருந்த இருப்பும் இன்று அடைந்த தோல்வியும் அவமானமும் ஒன்று சேர்ந்து, அவர்களிடம் சித்திரவதை அனுபவித்து இறப்பதைக் காட்டிலும் உங்கள் கையால் கொன்று விடுங்கள் என்றான். அதன்படியே அவன் தலை வெட்டப்பட்டு முகமதலியிடம் அனுப்பப்பட்டது. மானம் போனபின் வாழ்வதிலும் உயிர் விடுவதே மேல் என்று சந்தா சாஹேப் முடிவு செய்து விட்டான். அந்த முடிவு இனிது.

இழந்த ஆட்சியை மீட்டுக் கொடுத்து, எதிரியான சந்தா சாஹேபைப் பிடித்துக் கொடுத்து ஏராளமான உதவிகளை தஞ்சை பிரதாபசிம்ம ராஜா செய்திருந்தும் ஆற்காட்டு நவாப் சலுகை கொடுத்திருந்த கப்பப் பணத்தை முந்தைய ஆண்டுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டுமென்று தஞ்சைக்குத் தன் படைகளை அனுப்பி தஞ்சை ராஜாவாக இருந்த துளஜாவை சிறையில் அடைத்துவிட்டு தஞ்சையைப் பிடித்துக் கொண்டான். துளஜா ராஜா ஆங்கில கவர்னருக்கும், அவர்கள் மூலம் இங்கிலாந்துக்கும் முறையிட்டு மீண்டும் தஞ்சை ஆட்சியை ஆங்கில கம்பெனியார் மீட்டுக் கொடுத்தனர். தான் செய்த நன்றியை மறந்து தங்கள் ராஜ்யத்தையே அபகரித்துக் கொண்ட ஆற்காட்டின் மீது துளஜாவோ, தஞ்சை மன்னர்களோ குற்றம் கண்டு விரோதம் பாராட்டவில்லை என்பதும் இனிதுதானே.

பாடல்:
"தானம் கொடுப்பான் தகையாண்மை முன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை
கோள் முறையாற் கோடல் இனிது."

பொருள்: அடைக்கலம் என்று வந்தவர்க்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கும் பெருமையுடைய வீரம் இனியது; மானம் அழியும் நிலை உருவானால் உயிர் வாழாமை இனிமை தரும்; பிறர் குற்றங்களை பெரிது படுத்தாமல் நல்லவைகளை மட்டும் மனதில் கொள்ளுதல் சாலவும் இனிமை தரும்.

No comments: