பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (26)


26. இனியவை இருபத்தியாறு.

சிறு வயது முதல் ஒரு பொருளைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பி காத்திருந்தான் அவன். அந்த பொருள் நேபாளத்தில் கிடைக்கும் அரிய வகை சாளக்கிராமம் எனும் கருமையான கல். ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு சுவாமியை அடையாளமாகக் காட்டும் என்பார்கள். அவற்றை பக்தி சிரத்தையோடு வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்படியொரு சாளக்கிராமக் கல்லை வாங்கி வரவேண்டுமென்று அவருக்கு நெடுநாள் ஆசை. ஒரு முறை அவர் பத்ரிநாத், நேபாளம் முதலிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டபோது கண்டகி நதியில் கிடைத்த அரிய வகை கல்லொன்றை வாங்கி வந்து தன் பூஜை அறையில் வைத்துக் கொள்வதற்காகக் கொண்டு வந்தார்.

சுற்றுப்பயணம் செய்து வந்த இவரைப் பார்ப்பதற்காக இவரது நண்பர்கள் பலர் இவரது இல்லத்துக்கு வந்தனர். அப்படி வந்தவர்கள் இவர் வாங்கி வந்த அரிய சாளக்கிராமத்தையும் பார்த்து வியந்தனர். அதில் ஒருவர் குறிப்பிட்ட இறைவனை வழிபடுபவர். அவர் சொன்னார் இந்தக் கல் நான் வழிபடும் இறைவனைக் குறிக்கும் கல். இது எனக்குக் கிடைத்தால் தினசரி பூஜைகளைச் செய்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்வேன் என்றார். அவரது ஆசையை உணர்ந்த தான் விரும்பி வாங்கி வந்த அந்த சாளக்கிராமத்தை அவருக்கு மனம் உவந்து கொடுத்தார். அந்தச் செயல் இனிமையானது அன்றோ.

சோழநாட்டு சிறிய ஊர் ஒன்றிலிருந்து சென்னைக்கு வேலை கிடைத்துப் போன ஒருவர் தனக்குத் தெரிந்த நண்பர் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். உணவை வெளியில் ஓட்டலில் வைத்துக் கொண்டாலும், தனக்குத் தனியாக அறையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளாமல் தூரத்துச் சொந்தக்காரரான அவருக்குத் தெரிந்தவர் வீட்டிலேயே இருந்து வந்தார். இவர் போய்விடுவார் போய்விடுவார் என்று காத்திருந்த அந்த நண்பரும் அவரது குடும்பத்தாரும் இவரிடம் வெறுப்பை உமிழத் தொடங்கினர். இவர் வந்தவுடனேயே படுக்க இடம் இல்லை, தூங்க இடம் இல்லை என்றெல்லாம் சொல்லிக் காட்டியும் இந்த நண்பருக்குப் புரியாமல் அங்கேயே டேரா போட்டிருந்தார். அந்த நிலையில் இவருடைய அலுவலக நண்பர் ஒருவர் இவரோடு இவர் இருந்த வீட்டுக்கு வந்தபோது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அந்த மரமண்டைக்குப் புரியும்படியாக, அடே! நீ தங்கியிருக்கும் வீட்டில் நீ இருப்பதை விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ளவில்லையா? ஏன் இப்படி பிறர் விரும்பாத இடத்தில் இருக்கிறாய். வேறு அறை பார்த்துக் கொண்டு போய்விடு என்று சொன்ன பிறகு இவரும் போய்விட்டார். மதிப்பு இல்லாத இடத்தில் வாழாத வாழ்க்கை இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல்.

தான் விரும்பி வாங்கிவந்த அரியவகை கல்லை வேறொருவர் கேட்டார் என்பதற்காக மனம் உவந்து கொடுத்த இவரது பண்பை எல்லோரும் பாராட்டினார்கள். அதைவிட இனியது வேறு என்ன இருக்கிறது.

"நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிக இனிதே
எத்திறத்தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்."

தன்னை நாடிவந்து எனக்கு உன்னிடம் உள்ள இந்தப் பொருளைக் கொடு என்று கேட்பவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பண்பு இனியது; மதிப்பு இல்லாத இடத்தில் வாழாதிருத்தல் மிகவும் இனியது; தன்னிடம் உள்ள பொருளை மறைக்காமல் கேட்டவருக்குத் தரும் அன்பு மிக இனியது.

No comments: