பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (38)

38. இனியது முப்பத்தியெட்டு.

ஒரு மனிதனுக்கு அவனுக்கென்று உறவு, நட்பு என்று பெருந்திரளானவர்கள் சுற்றியிருந்தால் அவனுக்கு இருக்கும் தைரியமே தனிதான். தனி மனிதனாக இருந்தால் எங்கு, எப்போது, யாரிடமிருந்து ஆபத்து வருமோ என்கிற அச்சம் இருக்கும். ஆட்கள் சூழ இருப்பவனுக்கு அந்தக் கவலையே கிடையாது. எவர் எதிர்த்து வந்தாலும் அவர்களைச் சமாளித்து அனுப்ப மனிதர் கூட்டம் சுற்றிலும் இருக்கிறதே. ஆகவே தனி மரமாக இருப்பதைக் காட்டிலும் தோப்பாக இருப்பது நன்று. நம்மைச் சுற்றி நட்பும், சுற்றமும் சூழ்ந்து இருந்தால் அவனுடைய ஆயுதம், படைக்கலம் பெருமையுடையது. அந்த நிலைமை இனியது.

இப்படி உறவும் நட்பும் சூழ இருப்பவனுக்கு பகை ஏற்படுவது கிடையாது. அப்படி யாரேனும் பகைவர் இருந்தாலும் இவனைச் சுற்றி இருக்கும் படை பலத்தைப் பார்த்து, இவனிடம் மோதக் கூடாது இவனுக்கு ஆள்பலம் அதிகம் என்று விலகி விடுவார்கள். ஆகையால் யாரையும் விரோதித்து ஒதுக்கி விடாமல் எப்போதும் மக்கள் சூழ, உறவும் நட்பும் சூழ இருப்பது இனியது. அவனது எதிர்ப்பை சமாளிக்கும் தன்மை இனிதாகும்.

முன்பெல்லாம் கிராமங்களில் அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பசுவும் கன்றும் கட்டாயம் இருக்கும் இன்று போல காகிதப் பொட்டணங்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப் பட்ட பாலுக்காக வரிசையில் நிற்கும் வழக்கம் அப்போதெல்லாம் கிடையாது. ஒன்று அவரவர் வீட்டில் ஒரு பசு வளர்ப்பார்கள். அல்லது அடுத்துள்ள இல்லத்தில் பசு இருப்பவரிடம் பால் வாங்கிக் கொள்வார்கள். இப்போது பசு வளர்ப்பது என்பது அரிதாகப் போய்விட்டது. வீட்டுக்கு திடீரென்று விருந்தாளி வந்து விடுகிறார். உடனே நாம் குளிர்சாதனப் பெட்டியில் வாங்கி வைத்திருக்கும் பால் பொட்டணத்தைத் தேடுகிறோம். இல்லாவிட்டால் கடைக்குச் சென்று அங்கு குளிர்சாதனப் பெட்டியிலுள்ள பாலை வாங்கி வருகிறோம். சற்று இருங்கள் இதோ பால் கறந்து வருகிறேன். பால் அருந்திச் செல்லுங்கள் என்று சொல்லுவார் இல்லை. இடமும் வசதியும் இருக்குமானால் ஒவ்வொரு வீட்டிலும் கன்றோடு ஒரு பசுவையும் வளர்ப்பது இனியது. அப்படிப்பட்ட இல்லத்தில் விருந்தினராகப் போவது அதனினும் இனிது.

"சிற்றாளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன் இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து."

பொருள்: ஆள்பலம் உள்ளவனின் ஆயுதம் பலம் உள்ளது. உறவினர்கள் அதிகம் உள்ளவர்களால் பகையை எளிதில் சமாளிக்க முடியும் என்பது இனியது; கன்றும் பசுவும் உடையவன் வீட்டில் விருந்தாகப் போவது இனியது.

No comments:

Post a Comment

You can give your comments here