பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (31)

31. இனியவை முப்பத்தியொன்று. 

நமது பாரதத் திருநாட்டின் இதிகாசங்கள் இராமாயணமும், மகாபாரதமும் என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோலவே இந்த இதிகாசக் கதைகளும் அனைவருக்கும் ஓரளவு நன்கு தெரிந்திருக்கும். இதில் முதல் இதிகாசமான இராமாயண காப்பியத்தில் தன் உற்றார், உறவு இவர்களிடமிருந்து பிரிந்து போய் வேறொருவரிடம் அடைக்கலம் என அடைந்தவர்கள் சுக்ரீவனும், விபீஷணனும் ஆவர். இவர்களில் சுக்ரீவனுக்குத் தன் அண்ணன் வாலியினால் ஏற்பட்ட தொல்லைகள் தீர இராமனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் புகுந்தான். விபீஷணன் நன்னெறிகளில் ஊறித் திளைத்தவன். இராவணனின் 'பிறன் மனை நோக்கும்' பிழையை திருத்திக் கொள்ள வாய்ப்பளித்தும் அவன் திருந்தாததோடு, விபீஷணனின் உயிருக்கும் ஆபத்தாக இருந்த காரணத்தால், அவன் இராமனிடம் வந்து சரணடைந்தான்.

இப்போது இராமனுக்கு இரட்டைப் பொறுப்பு. தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதோடு தன்னிடம் அடைக்கலம் என்று வந்தவர்களின் பாதுகாப்பும் சேர்ந்து கொண்டது. இப்படி அடைக்கலம் வந்து அடைந்தவர்களின் உயிருக்கு எப்போதும் அவர்கள் யாரிடமிருந்து பிரிந்து வந்து இங்கு சேர்ந்தார்களோ அந்த முந்தைய உறவிடமிருந்து உயிருக்கு ஆபத்து வரும் அச்சம் இருந்து கொண்டே இருக்கும். வாலி இறக்கும் தருவாயில் இராமனிடம் விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா? இராமா! என் தம்பி சுக்ரீவனைச் சுற்றிலும் எப்போதும் பாதுகாப்புக்காக வீரர்களை இருக்க ஏற்பாடு செய் என்பதுதான். அதுபோலவே விபீஷணனின் உயிருக்கு ஆபத்து வராதபடி இராவணாதியரிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும் இராமனுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடுமையான செயல்.

அப்படி எதிரிகளிடமிருந்து சுக்ரீவனைக் காக்க அவன் அண்ணனான வாலியை இராமன் வந்தம் செய்ய நேர்ந்தது. விபீஷணனுக்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இராமன் உதவி செய்ததோடு இராவணன் இருக்கும்போதே விபீஷணனுக்கு இலங்கை அரசனாக முடிசூட்டியும் வைத்தார். இப்படித் தம்மிடம் அடைக்கலமாக வந்தவர்கள் துன்பம் அடையாமலும், நன்மை செய்தும் காப்பது இனியது என்கிறது இந்த நூல்.

நம்மிடம் நெடுங்காலம் பணியாற்றிய பணியாளர் ஒருவர். நம்மையே நம்பி இருப்பவர். அவருக்கு உலகமே நாம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நன்மையைக் கருத்தில் கொண்டு அவருக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அப்படி நம்மிடம் பணியாற்றும் ஒரு கணக்குப் பிள்ளை, அவருடைய ஒரே மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். ஆனால் அந்தத் திருமணத்துக்கு வேண்டிய பொருள் அவரிடம் அப்போது இல்லை. நிச்சயம் நமது எஜமானர் நமக்கு வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் செய்து விடுவார் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அந்த எஜமானருடைய நிதி நிலைமை அந்த நேரத்தில் சரியாக இல்லை. தன் ஊழியரின் மகள் திருமணத்துக்கு வேண்டிய பொருளுதவி செய்யப் போதிய பணம் இல்லாத காரணத்தால், அது தன் கடமை, அவர் தன்னையே நம்பி இருப்பவர் என்பதால் வெளியில் கடன் வாங்கி தன் ஊழியரின் மகள் திருமணம் நன்கு நடைபெற ஏற்பாடு செய்து விட்டார். தன் நிதி நிலைமை சரியானதும் வாங்கிய கடனைத் திரும்ப அடைத்து விடலாம்; ஆனால் இவரது மகள் திருமணம் இந்த காரணத்துக்காக நின்று விடக்கூடாது என்கிற நல்ல எண்ணம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியில் கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காகச் செய்து முடித்தல் இனியது.

அவர் நன்கு கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். கற்றவர்களால் மதிக்கப்படுபவர். மற்றவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு சரியான தீர்வு கண்டு சொல்பவர். அவரிடம் ஒரு தர்ம சங்கடமான பிரச்சினை வந்தது. அது குறித்து அவர் தீர்க்கமான ஆலோசனைக்குப் பிறகு எது சரி எதைச் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். அப்படி அவர் சொல்லும் ஆலோசனையினால் யாரும் பாதிக்கப்படவும் கூடாது, யாருக்கும் எதிராகவும் போய்விடக்கூடாது. ஆனால் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். அந்த சூழ்நிலையில் அவர் நிதானமாக ஆற அமர ஆய்ந்து பார்த்துத்தான் தன் தீர்வைச் சொல்ல வேண்டுமே தவிர எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் அறிவித்துவிட முடியாது அல்லவா? எதிலும் ஆராய்ந்து பார்த்து முடிவு சொல்வது என்பது நன்கு கற்றுணர்ந்தவராயினும் அதுவே நன்மை தரும்; இனிமையானது.

"அடைந்தார் துயர்கூரா ஆற்ற இனிதே
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது."

தம்மிடம் அடைக்கலம் என்று வந்தவர்கள் துன்பப்படாமல் காப்பது இனிமை தரும்; செய்யத் தகுந்த காரியங்களுக்காக கடன் வாங்கியாவது அந்தக் காரியத்தை முடிப்பது இனிமை தரும்; சிறந்த கேள்வி ஞானம் உடையவராயினும் நன்கு ஆராய்ந்தறிந்து முடிவைச் சொல்லுதல் இனிமை தரும்.

No comments:

Post a Comment

You can give your comments here