பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (37)

37. இனியவை முப்பத்தியேழு

ஒரு முதியவர் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்தார். ஓட்டுனர் பேருந்தை அவசரமாக நிறுத்தும் போதெல்லாம் இவர் தடுமாறி விழப்போனார். ஐயோ பாவம் என்று உட்கார்ந்திருந்த எவரும் இவருக்கு இடம் தரவில்லை. ஆனால் உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன், இவர் ஒருமுறை விழப்போன தருணம் சொன்னான், "ஏ பெரிசு, நல்லா பிடிச்சுக்கிட்டு நில்லு" என்று. அவனுக்கு ஒரு நினைப்பு; தான் என்றும் இப்போது போலவே சிறிசாகவே இருக்கப் போகிறோம் என்ற எண்ணம். மூப்பும், முதிர்வும் அனைவருக்கும் வந்தே தீரும் எனும் உண்மையை அவன் புரிந்து கொள்ளவில்லை. இன்று 'பெரிசு' என்றழைக்கப்பட்டவரும் ஒரு காலத்தில் இவனைப் போல் திமிர் பிடித்து அலைந்திருக்கலாம். இளமை சாசுவதமல்ல என்பதை உணர்ந்து கொண்டால் தோற்றத்தை, மூப்பை, உடல் ஊனத்தை இழிவாகப் பேசத் தோன்றாது. ஒவ்வொருவரும் தனக்குள்ள இளமை ஒரு நாள் மாறும் என்பதையும், மூப்பு இவனையும் வந்தடையும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் இனிமை.

நமக்குச் சொந்தங்கள் அதிகம். பிறந்த தாய் வழி, தந்தை வழி, கொண்ட மனைவி வழி, மக்கள் வழி என்று உறவு அதிகரித்துக் கொண்டே போகும். அப்படி அதிகரிக்கும் உறவினர்களிடமிருந்த நான் நலம், நீங்கள் நலம்தானே என்று செய்தி வந்தால் மனம் மகிழ்ச்சியடையும். மாறாக வருகின்ற செய்திகள் எல்லாமே ஏதாவது துன்பத்தைத் துயரத்தைத் தாங்கி வந்தால் என்ன செய்வது? அப்படி இல்லாமல் துன்மம் இல்லாத செய்தியை அவர்களிடமிருந்து கேட்பதே இனிமை.

பெண்களைப் பற்றி கவிஞர்கள் வர்ணித்திருப்பதை நாம் அறிவோம். பட்டினத்தார் போன்றவர்களும், அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழிலும் பெண்களைப் பற்றிக் கூறியிருப்பதையும் நாம் அறிவோம். இந்த இலக்கியம் தோன்றிய நாளில் இதன் ஆசிரியரின் எண்ணம் எப்படி இருந்ததோ நாம் அறியோம். ஆனால் அவர் மேலே சொன்ன இருவரின் வழியில் பெண்களைப் பற்றி கருத்துச் சொல்லியிருக்கிறார். கூரிய கத்தி இருக்கிறது. அது காய், கனிகளை நறுக்கவும் உதவுகிறது. ஆளைக் காயப்படுத்தவும் செய்கிறது. ஆகவே கத்தி என்பது காயப்படுத்துவது என்றோ, கனிகளை நறுக்குகிறது என்றோ நிச்சயப்படுத்திச் சொல்ல முடியாது அல்லவா? அது போலத்தான் நாம் பார்க்கும் பார்வை, நடந்து கொள்ளும் முறை இவற்றிலிருந்து பெண்ணைப் பற்றிக் கருத்துக் கூற முடிகிறது. சிலர், குறிப்பாக சக்தி உபாசகர்கள் பெண்களை சக்தியின் வடிவம் என்கிறார்கள். பெண்களின் தாய்மைதான் மிக உயர்ந்த பேறு என்பது சிலரது கருத்து. ஆனால் இளயோர் வட்டத்தில் காதல் என்ற உறவு, அதில் கிடைக்கும் தோல்வி, அப்படி பிரியும்போது ஆணின் மனம் வருந்துவது போல பெண் வருந்துவதில்லை. கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் மனத் திட்பம் அவர்களுக்கு இருக்கிறது, அதற்கு முந்தைய காதல், கீதல் இதெல்லாம் தொடர்ந்து மனத்தில் கொண்டு வருந்துவதில்லை. தாடி வைப்பது, போதைக்கு அடிமையாதல் இவையெல்லாம் ஆண்களுக்குத்தான். எங்காவது காதலில் தோல்வியடைந்த பெண் போதைக்கு அடிமையாகி வருந்தியதாகப் படித்திருக்கிறோமா? ஒரு தேவதாஸ் கதை போதாதா நமக்கு. சரி இந்தப் பாடலில் இவர் சொலும் கருத்து மென்மையான மூங்கில் போன்ற தோள்களையுடைய தளிர் போன்ற மென்மையான மகளிரை நஞ்சு என்று எண்ணுதல் இனிது என்கிறார். பிரச்சினைக்குரிய கருத்து. அவரவர் அனுபவத்துக் கேற்ப இந்த வரிக்குப் பொருள் கொள்ளுங்கள். காரணம் நஞ்சு அளவோடு இருந்தால் மருந்து. அளவுக்கு மிகுந்தால் இறப்பு. இதில் எதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படிப் புரிந்து கொண்டால் சரி.

"இளமையை மூப்பென் றுணர்ந்தல் இனிதே
கிளைஞர் மாட்டச் சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தனிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது."

பொருள்: ஒவ்வொரு இளைஞனும் தனக்கும் ஒருநாள் முதுமை வரும் என்பதை உணர்தல் இனிது; சுற்றத்தாரிடமிருந்து அச்சம் தரும் துன்பமில்லாத செய்தியைக் கேட்பது இனிது; மென்மையான மூங்கில் போன்ற தோளையுடைய மெல்லியலாரை நஞ்சு என எண்ணிதல் இனிது.


No comments:

Post a Comment

You can give your comments here