பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (36)

36. இனியவை முப்பத்தியாறு.

"அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"

என்கிறது திருக்குறள். அழுக்காறு என்பது பொறாமை, அவா என்பது பேராசை, வெகுளி என்பது கோபம், இன்னாசொல் என்பது கடுமையான சொற்கள், இப்படி இந்த தீய குணங்களை வெறுத்து நீக்கி வாழ்வதே அறம் என்கிறது தமிழ் நூல். நாம் அன்றாட வாழ்வில் பலருடன் பழகுகிறோம், அவர்களோடு சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மன வருத்தப்பட்டும் நடக்கிறோம். ஒரே மாதிரியான பதவி, ஒரே மாதிரியான வருமானம், குடும்ப நிலையிலும் சமத்தன்மை இத்தனையும் இருந்தும் அடுத்தவனுக்கு ஏதாவதொரு உயர்வு கிடைத்து விட்டால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று அவன் மீது பொறாமை ஏற்படுகிறது. ஏற்றத் தாழ்வு அதிகம் உள்ள சமுதாயத்தில் நம்மைவிட மிக உயர்ந்த நிலையில் இருப்பவனிடம் நாம் அவனிடம் அதிகம் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்பதாலோ, அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்பதாலோ அதிகமாக பொறாமை ஏற்படுவதில்லை. சம நிலையில் இருந்து நன்றாகப் பழகி வருபவனிடம்தான் இந்தப் பொறாமை அதிகம் வருகிறது. அப்படி நேரும் சந்தர்ப்பங்களில் பொறாமை காரணமாக நாம் வேண்டுமென்றே அவன் ஏதோ குறுக்கு வழியில் இந்தப் பெருமையைப் பெற்று விட்டான். எழுத்தாளனாக இருந்தால் இவன் யாரையோ பிடித்துத் தன் நூலுக்குப் பரிசு வாங்கிவிட்டான் என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டுவார்கள். வேண்டாம். பொறாமையில் அப்படிப்பட்ட இல்லாத பொல்லாத சொற்களைத் தவிர்த்து விடலாம். அப்படித் தவிர்த்துவிடுவது இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல்.

கோபம் என்பது உடன் பிறந்த வியாதி. நமது முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு முன்கோபக்காரர். சட்டென்று கோபம் வந்துவிடும். அது வந்தது போல சட்டென்று நீங்கியும் விடும். கோபப் படாதவர்கள் யார் சொல்லுங்கள். ஒருவரைப் பற்றி நாம் ஆகா ஓகோ என்று புகழ்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட புகழ்ச்சியெல்லாம் வெளிப்பார்வைக்குத்தான் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் அத்தகையோர் மனதில் ஆழ்ந்திருக்கும் கோபமும், கெட்ட எண்ணங்களும். வெளிப்பார்வைக்கு யாரும் நல்லவர்கள் போலத்தான் இருப்பார்கள். ஆழ்மனத்தை உணர்ந்து கொண்டால்தான் அவர்கள் யார் என்பது தெரிய வரும். சிலர் கோபத்தில் தங்கள் தகுதிக்குச் சம்பந்தமில்லாமல் மிகக் கீழ்த்தரமாகக்கூட பேசி விடுவார்கள். என்ன செய்வது? கோபம் என்கிற பேய் மனத்தைப் பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது அறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. கோபப் படுபவனுக்கு அதிகம் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். நாளடைவில், வேண்டாம், அவனிடம் போகாதீர்கள் அவன் கோபக்காரன். ஏதாவது கோணா மாணாவென்று பேசிவிடுவான் என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிடும். ஒருவன் மிகவும் சிரமப்பட்டு கோபப் படுவதை கட்டுப் படுத்திக் கொண்டாலும், அவனுடைய இயற்கை குணம் சில நேரங்களில் பிளந்து கொண்டு வெளிப்பட்டு விடும். சிலர் ஆலோசனை சொல்வார்கள். கோபம் வரும்போது ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கு, கோபம் அடங்கிவிடும் என்று. இதெல்லாம் செயலுக்கு ஒத்து வருமா? ஒரே வழி. மனதை அமைதியாக இருக்கும்போது இனி கோபப்படக் கூடாது என்று சொல்லிச் சொல்லி, நாளடைவில், பல ஆண்டுகள் பழகியாவது கோபத்தை அடக்கிவிட வேண்டும். அது இனியது.

ஒரு பொருளின் மீது ஒருவனுக்கு ஆசை. அது தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம். ஆனால் அந்தப் பொருள் மீது அவனுக்கு உரிமை இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பொருளுக்குச் சரியான காவல் இல்லை. யாரும் கவனிக்கப் போவதுமில்லை. இதுதான் சரியான நேரம் அதை அமுக்கிவிட்டால் என்ன என்ற கெட்ட எண்ணம் இல்லாமல் இருப்பது இனிமை.

"அவ்வித் தழுக்கா றுரையாமை முன் இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது."

பொருள்: மனமாறுபாட்டல் பொறாமை கொண்டு பேசாமை இனிது; மனத் தெளிவோடு கோபத்தை நீக்கி வாழ்தல் இனிது; மனத்தில் ஆசை கொண்டு தான் காமுற்ற பொருளை விரும்பி தக்க சமயம் பார்த்து கவர்ந்து கொள்ளாதிருத்தல் இனிது.No comments:

Post a Comment

You can give your comments here