பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (39)

39. இனியவை முப்பத்தியொன்பது.

ஒரு நாள் நடு வயது பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாகச் சென்று 'அம்மா! பிச்சை போடுங்க' என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான். பல வீடுகளில் ஏதோ காசோ, அல்லது அரிசியோ கொண்டு வந்து போட்டார்கள். அவனைப் பார்த்தால் உடலில் ஊனம் எதுவும் இருப்பதாகவோ, அல்லது வயதானவனாகவோ தெரியவில்லை. நன்றாக 'கிண்'ணென்று ஆரோக்கியமான உடலோடுதான் இருந்தான். பின் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். ஏதாவது வேலை கொடுத்தால் செய்வானோ, அருகில் வந்ததும் அந்த வீட்டுக்காரர் கேட்டார், இந்தாப்பா, இந்த தோட்டத்தைக் கூட்டிக் குப்பையை எடுத்துப் போய் தொட்டியில் போடு, காசு தருகிறேன் என்றார். அதற்கு அவனுக்குக் கோபம் வந்ததே பார்க்க வேண்டும். பிச்சை போட இஷ்டம்னா போடு, இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எனக்கு வேலை கொடுக்கச் சொல்லி உன் கிட்டே கேட்டேனா என்று படு சண்டைக்குப் போய்விட்டான். அதற்கு அவர் நீ உடல் நிலை நன்றாகத்தானே இருக்கிறாய் பின்னே எதற்காகப் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான் அவன் அவரைப் பிடி பிடியென்று பிடித்து விட்டான். அவருக்கு இவனிடம் போய் ஏன் வாயைக் கொடுத்தோம் என்று தலை குனிந்து உள்ளே போய்விட்டார். அவன் அங்கிருந்து கண்ணுக்கு மறையும் வரை திட்டிக் கொண்டே போனான். அப்படி அவன் திட்டும்படியாக அவர் அவனை என்ன கேட்டுவிட்டார்? வேலை செய் கூலி தருகிறேன் என்றது தவறா? இல்லை பிச்சை எடுப்பது என்பது அவனது பிறப்புரிமை, போட வேண்டியது மக்கள் கடமை என்ற எண்ணத்தை அவன் மனதில் ஏற்றுக் கொண்டு விட்டான். ஒரு முறை ஒரு முதியோர் இல்லத்து நிர்வாகிகள் அவர்கள் இல்லத்தில் சேர மனுச்செய்திருந்த வயதானவர்களை நேர்முகம் காண்பதற்காக வரச்சொல்லி யிருந்தார்கள். பலர் வந்திருந்தனர். அதில் ஒருவன் சுமார் 35 அல்லது 40 வயதிற்குள் இருக்கும் நல்ல திடகாத்திரமான ஆள். திருமணம் ஆகவில்லை. எப்போதாவது சமையல் வேலைக்கோ அல்லது பரிமாறவோ கூப்பிட்டால் போவானாம். அவன் முதியோர் இல்லத்தில் சேர மனுச்செய்திருந்தான். இல்லத்து நிர்வாகி அவனிடம் உனக்கென்ன அவசியம் முதியோர் இல்லத்துக்கு வந்து சேருவதற்கு. நீ இன்னும் ஐம்பது வருஷம் இருக்கலாம். அதுவரை முதியோர் இல்லத்தில் இலவசமாக சாப்பிட்டுப் பொழுது போக்கவா என்றார். அவன் சொன்னான், சேர்த்துக் கொள்வதாக இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள், அநாவசியமாகப் பேச வேண்டாம் என்று சண்டைக்கு வந்து விட்டான். இப்படியும் சில மனிதர்கள். கேட்பது பிச்சை. அப்படிக் கேட்குமிடத்தில் கோபப்பட்டு சண்டைக்குப் போவது சரியா? அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பது இனியது என்கிறது இந்தப் பாடல்.

ஒருவர் மிகச் சிறிய குடிசை வீட்டில்தான் வாழ்ந்து வந்தார். விவசாயக் கூலி வேலைக்கு யார் கூப்பிட்டாலும் சென்று வருவார். தினமும் சம்பாதிக்கும் பணத்தில் நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு யாரிடமும் போறாமையோ, வருத்தமோ இல்லை. பொதுக் காரியங்களிலும் ஆர்வமாகக் கலந்து கொள்வார். பெரிய வீட்டுக்காரர்கள் கலந்து கொள்கிறார்களே என்று இவர் எங்கும் ஒதுங்கிப் போவதில்லை. எல்லோரிடத்தும் அன்போடு பழகுவார். ஆகவே இருக்கும் இடம் குடிசை என்றாலும், மனத்தால் ஆரோக்கியமாகவும், மாட்சிமையோடும் வாழ்ந்த வாழ்க்கை இனியது.

அரசுப் பணியில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும் ஒருவருக்குத் தான் மேலும் பதவி உயர்வு பெற்று அதிகாரியாக வந்து பணியாற்ற வேண்டுமென்கிற ஆசை நிறைய இருந்தது. ஆனால் அவர் நேர்மையானவராகவும், லஞ்ச லாவண்யங்களில் ஆர்வமில்லாதவராகவும், மக்கள் பணியில் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டார். இவருக்கு மேல் நிலையில் இருப்பவர்களை இவர் மகிழ்ச்சியடைய வைக்கவில்லை, மாறாகத் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பணியாற்றினார். இப்படி நேர்மை தவறாமல் இருந்தால் உயர்வுகள் கிடைக்குமா? கிடைக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளறவோ, உற்சாகம் இழக்கவோ இல்லை. அவருடைய பணிகளிலும் எந்தவித குறைவும் இல்லாமல் வழக்கம் போல நடந்து கொண்டார். அற வழியிலிருந்து நீங்க வைக்கும் மனத் தளர்ச்சி ஏற்படாமல் வாழ்ந்த அவரது வாழ்க்கை இனியது.

"பிச்சை புக்குண்பான் பிளிறாமை முன் இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்ற பேராசை கருதி அறனொரூம்
ஒற்கம் இலாமை இனிது"

ஒற்கம்: மனத் தளர்ச்சி

பொருள்: பிச்சையெடுப்பவன் கோபம் கொள்ளாமல் இருப்பது இனிது; எளிய குடிசையில் வாழ்ந்தாலும் துன்பமோ வருத்தமோ இல்லாத மாட்சிமை இனியது; தன் ஆசை நிறைவேறு வதற்காக அறவழி பிறழ்ந்து மனத் தளர்ச்சி அடையாமை இனிது.


No comments: