பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (35)

35. இனியவை முப்பத்தைந்து

மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, இப்போதைய குடியரசு ஜனநாயக நாடுகளிலும் சரி, ஒரு நாடு தன்னை வெளிநாட்டு நடப்புகளில் தங்கள் நாட்டுக்கு ஏதாவது எதிரான நடவடிக்கைகள் இருந்தால் தெரிந்து கொள்ளவும், ராஜாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும் உளவு அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் உளவு வேலை என்பது மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டிய வேலை. இந்த ஒற்றர்களாக யார் இருப்பார் என்பதைக் கூட அனுமானிக்க முடியாதபடி இவர்கள் பல வேடங்களில் இருப்பார்கள். மன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் படைவீரர்கள் மட்டுமல்லாமல், நாட்டு குடிமக்களில் பல தரப்பாரும் இந்த வேவு வேலை செய்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ள உடையார் எனும் புதினத்தில் நடனம் ஆடும் மங்கையரும், வேதம் ஓதும் பிராமணரும் கூட ஒற்றர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இப்படி ஒற்று பார்ப்பது என்பதை யாருக்கும் எதிரானது அல்ல. நம் நாட்டை அன்னிய சக்திகளிடமிருந்து காப்பாற்றவும், நம்மைச் சுற்றி என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது, ராஜாங்க ரகசியங்கள் எவையெவை என்பதையெல்லாம் ஒரு நாட்டின் மன்னன் அறிந்திருக்க வேண்டும்.அப்படி ஒற்றர்கள் நாலாபுறமும் சென்று கொண்டு வரும் செய்திகளை மன்னன் தன்னுடைய அந்தரங்கமான அமைச்சர்களுடன் உட்கார்ந்து பகிர்ந்து கொண்டு அவற்றிலுள்ள உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்வது என்பது இனிமை.

எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்பாக ஒன்றுக்கு பலமுறை நன்கு ஆலோசனை செய்தபின் தொடங்க வேண்டும். அதில் ஏதாவது ஐயப்பாடு இருக்குமானால், அறிவில் சிறந்த பெரியோரின் துணையையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு தெளிவு பெற்றபின் தொடங்க வேண்டும். ஆராயாமல் அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் தோல்வியடையும். ஆகவே ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஆராய வேண்டியவைகள் எவை என்பதை தீர்மானித்து அவற்றை நன்கு ஆராய்ந்து முறைப்படி செய்து முடித்தல் இனியது.

இராமாயணத்தில் சீதையின் தந்தை ஜனக மகாராஜன். இந்த ராஜாவை ராஜரிஷி என்பர். இவர் தவத்திற் சிறந்த ஒரு முனிவருக்கு ஒப்பானவர். தான், தனது என்பதெல்லாம் இல்லாமல் மக்களின் உணர்வை பிரதிபலிப்பவராக, சுயநலமில்லாதவராக, நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவர் நலனிலும் அக்கறை உள்ளவராக இருந்தார் என்கிறது இராமகாதை. இதனால்தான் கம்பர் பெருமானும் தசரத சக்கரவர்த்தியைப் பற்றி அறிமுகம் செய்யும் போது நாட்டுமக்கள் எல்லாம் உயிர் என்றால் அந்த உயிர்களுக்கான உடம்பாக தசரதன் இருந்தான் என்கிறார். அப்படி மக்கள் அனைவரின் பிரதிநிதியாக அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் தலைவனாக மன்னன் இருத்தல் அவசியம். தான் எதிலும் பற்று கொள்ளமல் இருந்து கொண்டு, மக்களின் பற்றை உணர்ந்து அவர்களாக வாழ்தல் ஒரு மன்னனுக்கு இனிமை என்கிறது இந்தப் பாடல்.

"ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிதே
முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது."

பொருள்: ஒற்றறிந்து உண்மையை உணர்தல் ஒரு மன்னனுக்கு இனிது; ஆராய்ந்து பார்த்து ஒரு செயலைச் முறைப்படி செய்தல் இனிது; தான் பற்று இல்லாதவனாய், பற்று கொண்ட மக்களின் பற்றைப் பகிர்ந்து கொண்டு வாழ்தல் மன்னனுக்கு இனிது.


No comments: