பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (32)


32. இனியவை முப்பத்தியிரண்டு

நாம் எந்தக் காரியத்தைச் செய்யும் முன்பாக நன்கு கற்றறிந்த பெரியோரிடம் சென்று அவர்களிடம் விளக்கிவிட்டு, நாம் செய்யப் போகும் காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும், எப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதையெல்லாம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தவொரு காரியத்தையும் நாமாக அரைகுறையாகச் செய்துவிட்டுத் தோல்வியைச் சந்திக்கக்கூடாது. கற்றறிந்த பெரியோர்கள் நல்ல அனுபவம் உள்ளவர்களாக இருப்பார்கள். நல்லது கெட்டது தெரிந்து வைத்திருப்பார்கள். எதை யாரால் செய்து முடிக்க வேண்டும் எனும் உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள்; அத்தகைய பெரியோர்கள் கூறும் வழிகாட்டுதலின்படி நாம் காரியத்தைச் செய்யத் தொடங்குவோமானால் நிச்சயம் வெற்றிதான் கிட்டும். அது இல்லாமல் போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் நாம் செய்யப்போகும் காரியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தோமானால், அவரவர்க்கு மனம்போனபடி ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விட்டால் நஷ்டம் நமக்குத்தானே தவிர அவர்களுக்கு அல்ல. ஆகையால் கற்றறிந்தவரிடம் ஆலோசனை கேட்டுச் செய்தால் நல்ல பயன் கிட்டும் என்பது இனிமை அல்லவா?

ஒரு அரசன். சுகவாசி. அரண்மனையில் இருந்து கொண்டு வெளியே மக்களின் இன்ப துன்பங்களைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும். முன்பெல்லாம் தெருக் கூத்துக்களில் வரும் ராஜா அமைச்சரைப் பார்த்துக் கேட்பார், 'மந்திரி! நாட்டில் மும்மாரி மழை பொழிகிறதா?' என்று. நாட்டில் மழை பொழிவது கூட தெரியாத மன்னன் இருந்தென்ன, இல்லாமல் இருந்தென்ன? மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவனாக மன்னன் இருக்க வேண்டும். மெக்சிகோ எனும் நாட்டில் இப்படியொரு கொடுங்கோல் சர்வாதிகாரி இருந்தான். அவனுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. மழையின்றி, மக்கள் விளைச்சல் இல்லாமல், உணவுக்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் வரிப்பணம் கொடுக்கச் சொல்லி அவர்களைத் துன்புறுத்தி வசூலித்தான். இதனை எதிர்த்து விவசாயப் பெருங்குடி மக்கள் அவனிடம் சென்று முறையிட்டுத் தங்கள் துன்பத்தை எடுத்துரைத்தனர். அவனோ கல்நெஞ்சுக் காரனாக இருந்து அடித்து உதைத்து சிறையிலிட்டு கொடுங்கோல் புரிந்தான். மக்கள் துன்பம் தாங்காமல் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அவனை எதிர்த்து விவா சபாட்டா எனும் இளைஞன் வீறுகொண்டு எழுந்தான். மக்களை ஒன்று திரட்டி மன்னனை எதிர்த்துப் போரிட்டு அவனை நாட்டை விட்டு ஓடவைத்தான். பின்னர் அந்த விவா சபாட்டாவை மன்னனாக மக்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று மெக்சிகோ நாட்டுக் கதையொன்று கூறுகிறது. இப்படிப்பட்ட கொடுங்கோலன் ஆட்சியில் வாழ்வதைக் காட்டிலும் வெளியேறி வேறிடங்களுக்குச் சென்றுவிடுவது இனிமை தரும்.

நமக்கு ஆலோசனை சொல்லுபவர்கள் ஒரு காரியத்தை நன்கு புரிந்து கொண்டு நல்ல வழியைக் காண்பிக்க வேண்டுமே தவிர, நமக்கென்ன ஆயிற்று என்று ஏதோ போகாத ஊருக்கு வழி காட்டுவது போல நடந்து கொள்ளக் கூடாது. அப்படி தவறாக வழிகாட்டப்பட்டுத் துன்பங்களுக்கு ஆனானவர்கள் பின்னர் அப்படி நடந்து கொள்பவர்களிடம் வன்மம் வைத்துக் கொள்வது தேவையில்லை. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இனிமேல் அப்படிப்பட்டவர்களிடம் எந்த ஆலோசனையையும் கேட்கக்கூடாது என மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களை விரோதிகளாகக் கருதத் தேவையில்லை. நாம் சிக்கித் தவிக்க வேண்டுமென்றுகூட சொல்லியிருக்க மாட்டார்கள்; அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அவர்களிடம் வன்மம் இல்லாமல் அன்பைத் தொடருவது இனிமை தரும்.

"கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்."

பொருள்: கற்றறிந்தவர்கள் கூறும் செயலின் பயன் இனிமையுடையதாகும்; குடிமக்களிடம் அன்பு பாராட்டாத மன்னனின் கீழ் வாழாமை இனிதாகும்; ஆராய்ந்து பார்க்காமல் தன்னை ஒரு செயலைச் செய்ய வைத்தவரிடம் தீங்கு பாராட்டாமல் அன்புடமை இனியது.

No comments: