பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (29)


29. இருபத்தியொன்பதாம் இனியது.

ஒரு நல்லவன் வாழ்கின்ற பகுதியில் சுற்றுப் புறத்தில் பல கீழ் மக்களும் வாழ்ந்தனர். சுற்றிலும் இருக்கிற இவர்கள் போன்ற தீயவர்களிடமிருந்து இவன் ஒதுங்கி இருக்க நினைத்தாலும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். அவர்கள் கெட்டவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் என்பது தெரிந்து, கூடிய வரையிலும் அவர்கள் முகத்தில் விழிக்காமல் ஜாக்கிரதையாக இருத்தல் நலம். அப்படி சந்தர்ப்ப வசத்தால் அந்த தீயவர்கள் கூடியிருக்கும் நேரத்தில் இவன் வீட்டைவிட்டு வெளியே போக நேரும் சந்தர்ப்பங்களில் அவர்களோடு நட்புரிமை பாராட்டாமல், மிகவும் சாமர்த்தியமாக அவர்களை விரோதப் பார்வையும் பார்க்காமல் நழுவிவிடுதல் நலம். கூடியவரை அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனிமை தரும்.

சாதாரணமாக கீழ் மட்டத்தில் இருந்த ஒருவன் தன் உழைப்பினாலும், நேர்மையினாலும் மெல்ல மெல்ல தான் பணிபுரியும் இடத்தில் உயர்வுகளைப் பெற்று வந்தான். தனக்குக் கிடைத்திருக்கிற இந்த உயர்வுக்குக் காரணம் தன்னுடைய வசதிகளோ, சிபாரிசுகளோ இல்லை என்பதும் தன்னுடைய உழைப்பு, நேர்மை இவைகள்தான் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு மேலும் உயர்வதற்காக கடின உழைப்பைக் கொடுத்து, நேர்மைத் திறத்தை வளர்த்துக் கொண்டு தன் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பது இனிமை தரும்.

இவனுக்கு நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே மிக மிகச் சாதாரணமானவர்கள். இவனுக்குக் கிடைத்த வசதிகள்கூட இல்லாதவர்கள். மிக எளிமையானவர்கள், வறுமையில் வாடுபவர்கள் என்றாலும் செம்மையாக வாழ்பவர்கள். இவர்கள் வறியவர்கள்தானே என்று எண்ணாமல் அவர்களை மதித்து பண்போடு பாராட்டி நடப்பது இனிமை தரும்.

"கயவரைக் கையிகந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது."

கயமைக் குணம் படைத்தவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனியது; தன்னுடைய உயர்வுக்குத் தேவையான உள்ள எழுச்சியோடு வாழ்தல் இனியது; வறியவர்களை இகழ்ச்சியாக எண்ணாமல் கெளரவமாக நடத்துதல் இனியது.

No comments: