பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, March 1, 2012

"இனியவை நாற்பது" (25)


25. இனியவை இருபத்தைந்து 

மனிதனை வழிநடத்தும் இயந்திரங்களை ஐம்பொறிகள் என்கிறோம். அதாவது மெய் (உடல்) வாய், கண், மூக்கு, செவி ஆகியவையாகும். உடலால் பல உணர்வுகளை அடைகிறோம். வாய் சுவைக்கிறது, பேசுகிறது, சிரிக்கிறது, அழுகிறது, குரல் எழுப்புகிறது, கண்கள் பார்க்கின்றன, மூக்கு நுகர்கிறது, செவி கேட்கிறது. இப்படி மனிதனுக்கு வேண்டிய அத்தியாவசியமான செயல்கள் அனைத்தையும் செய்வது இந்த ஐந்து பொறிகள். இவை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்படி கட்டுப்பாட்டை இழந்து அவை தன் போக்கில் செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும்? ஒரு பழைய திரைப்பட பாடல் உண்டு. 'கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனிதன் போகலாமா?' என்று அந்த பாடல் இருக்கும். இந்த ஐம்பொறிகளும் தன் இயல்பினாலே அவற்றுக்கு உகந்த வகையில் நடந்து கொள்ளும். ஆனால் அவை அப்படி நடக்காமல் அவற்றைத் தன் மனம் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய புராணத்தில் 'எறிபத்த நாயனார்' என்பவரின் வரலாறு உண்டு. அவர் தேவார மூவரைப் போல பாடிப் பரவியவர் அல்ல. ஆனால் அசைக்கமுடியாத முரட்டு சிவபக்தி அவருக்கு. சிவனடியார்களுக்கு யாராவது தீங்கு செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டார். அப்படியொருநாள் சிவகாமியாண்டார் எனும் சிவநேசச் செல்வர் கருவூரில் கோயில் கொண்டுள்ள ஆநிலையப்பருக்கு மலர்கள் கொய்து பூந்தாமத்தை ஏந்தி ஆம்பிராவதி நதிக் கரையிலிருந்து ஆலயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்த புகழ்ச்சோழ மன்னன் கருவூருக்கு வருகை தந்து தன் அரண்மனையில் தங்கி இருந்தான். அவனுடைய பட்டத்து யானையை பாகர்கள் ஆம்பிராவதி நதிக்குக் கொண்டு சென்று நீராட்டி, கரும்பு, வாழை முதலிய உணவுகளைக் கொடுத்து அதற்குச் சிவச் சின்னங்களை அணிவித்து, பட்டத்து யானை அல்லவா? அதனால் அதன் மேல் ஒரு பாகன் இரு புறமும் இரு பாகர்கள் ஆக மொத்தம் ஐந்து பாகர்கள் அதனை வழிநடத்தி வந்தனர். நீராடிய மகிழ்ச்சி, உணவு உண்ட திருப்தி அந்த யானை வழியோடு போன சிவகாமியாண்டாரின் பூந்தாமத்தைப் பறித்து வீசி காலால் துவைத்துவிட்டது. இதனைக் கண்ட எறிபத்தர் தன் கையிலிருந்த மழு எனும் கூரிய ஆயுதத்தால் அந்த யானையின் துதிக்கையை வெட்டினார். யானை பிளிறி அலறியது. பாகர்கள் சண்டைக்கு வந்தனர். அந்த ஐந்து பாகர்களையும் எறிபத்தர் வெட்டி வீழ்த்தினார். செய்தி கேட்டு எதிரி நாட்டு படைதான் வந்து தன் யானையைக் கொன்றுவிட்டதோ என்று மன்னன் தன் குதிரை மீதேறி வேகமாக வந்தான். இங்கு பார்த்தால் உடலெங்கும் திருநீறு பூசிய சிவனடியார் ரத்தம் சொட்டும் மழுவுடன் நிற்கிறார். மன்னன் புகழ்ச்சோழனும் சிறந்த சிவபக்தன், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவன். அவன் உடனே குதிரையினின்றும் கீழிறங்கி சிவனடியாரான எறிபத்தரிடம் சிவனடியாரான தாங்கள் தவறு செய்திருக்க முடியாது. என் யானைதான் தவறு செய்திருக்க வேண்டும். அடியேனின் யானை செய்த தவற்றுக்கு என்னை தண்டியுங்கள் என்று தன் வாளை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி தங்களைப் போன்ற சிவனடியாருக்கு நான் செய்த தவற்றுக்கு என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன் என்று எறிபத்தர் தன்னை வெட்டிக்கொள்ள முயல சிவபெருமான் தோன்றி இரு சிவனடியார்களையும் வாழ்வித்தார் என்கிறது கதை.

இதில் மதங்கொண்ட யானைதான் ஆணவ மலம். அதனைக் கட்டுப்படுத்த தவறிய பாகர்கள் ஐவரும் ஐம்பொறிகள். சிவதீட்சைதான் எறிபத்தர். ஆகவே மனிதனை நல்வழிப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட கதைகளை உண்மை வரலாற்றோடு கலந்து கொடுத்திருக்கின்றனர் நமது பெரியோர்கள். ஆகையால் இந்த இனியவை நாற்பது பாடலில் சொல்வது போல ஐம்பொறிகளைக் கட்டுக்குள் வைப்பது இனிது.

ஒரு காரியத்தைச் செய்வதால் கை நிறைய செல்வம் வரும் என்றாலும், அப்படிச் செய்யக் கூடிய காரியம் கல்லாத புல்லர் ஒருவரின் மூலம் கிடைக்கிறது என்றால் அதனை வேண்டாம் என்று ஒதுக்கி அப்படிப்பட்ட செல்வத்தைப் பெறாமல் தவிர்ப்பதும் இனிமைதான்.

ஊரில் ஒருவன் எல்லோரிடமும் மரியாதையின்றி நடந்து கொள்வான். அடக்கமின்றி செயல்படுவான். நல்லவர்களும், பெண்மணிகளும் அவனைக் கண்டு அஞ்சுவார்கள். ஒரு நேரம் போல மறு நேரம் இல்லாமல் நிலையற்ற மனம் கொண்டவன். அத்தகைய தீயவனைக் கண்டு அஞ்சி அவனோடு சேராதிருத்தல் நன்மை தரும். அதுவும் இனிமைதான்.

"ஐவாய வேட்கை அவாவடக்கல் முன் இனிதே
கைவாய்ப் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வினிதே
நில்லதே காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது."

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் வழியாக வரும் ஆசைகளையும், நினைவுகளையும் அடக்கிக் கொள்ளுதல் இனிமை; கை நிறைய பொருள் பெருவதாயினும் கல்லாதவரைச் சேரா விடுதல் இனிமை. நிலையற்ற அறிவையுடைய அடக்கமில்லாத வீணனைச் சேராதிருத்தல் இனிமை தரும்.

No comments:

Post a Comment

You can give your comments here