பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (34)

34. முப்பத்திநான்காம் இனிமை

இப்பொழுதெல்லாம் இரவு நேரம் என்பது பகல் பொழுதைப் போலவே மாறிவிட்டது. எங்கும் விளக்குகள். வெளிச்சம். இரவெல்லாம் போக்குவரத்து, ஜன நடமாட்டம் இப்படி வளர்ந்து விட்டது. ஆனால் இந்த நூல் இயற்றப்பட்ட காலம் அப்படிப்பட்டதல்ல. இரவானால் ஊர் அடங்கிவிடும். எங்கும் இருட்டு. வழிப்பயணம் செய்ய அஞ்சுவர். இப்படிப்பட்ட மாற்றங்கள் இருந்தாலும் பெண்கள், குழந்தைகள் இப்போதும் கூட தனியாக இரவில் பயணம் செய்வது ஆபத்து ஏற்படக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆகவே தான் அந்த நாட்களில் இரவில் பயணம் செய்யாதிருப்பது இனிமை தரும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

வகுப்பில் ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கிறார். நீண்ட நேரம் பல விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லி மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர் தொடங்கும் போது இருக்கும் வேகம் நேரம் ஆக ஆக குறைந்து போகுமானால், மாணவர்களின் கவனமும் சிதறுண்டு போகும். ஆகவே தொடங்கிய வேகத்திலேயே அவர் தொடர்ந்து பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போக வேண்டும். சில விழாக்களில் தொகுப்பாளர்கள் என்பவர் இருப்பர். இவர்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை சோர்வின்றி விறுவிறுப்பாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். தொய்வு ஏற்பட்டால் விழாவின் சிறப்பு மங்கிவிடும். ஆகவே தொய்வின்றி சோர்வு இல்லாமல் சொல்வது இனிமை தரும்.

நம் அண்டை வீட்டுக்கு ஒருவர் புதிதாகக் குடி வருகிறார். நமது பண்பாடு யாராவது புதியவர் நம் பகுதிக்கு குடிவருகிறார் என்றால், அவருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது என்பது நமது பாரம்பரியமான குணம். அதன்படி அந்த அண்டை வீட்டாரிடம் சென்று நம்மை அறிமுகம் செய்துகொண்டு விசாரிக்கிறோம். ஏதாவது உதவிகள் தேவையென்றால் செய்யவும் தயார் என்பதை தெரிவிக்கிறோம். ஆனால் அந்த மனிதர் நம்மை ஏதோ பூச்சி புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்து, எனக்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அலட்சியமாக நம்மை அனுப்பிவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் அதன் பிறகு பழக விரும்புவோமா? ஏதோ ஒரு அசம்பாவிதம் அந்த வீட்டில் நடந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், நாம் ஓடிப்போய் உதவி செய்வது என்பது நம் உடம்போடு பிறந்த குணம். ஆனால் இந்த மனிதருக்கு அப்படிச் செய்யத் தோன்றுமா? அப்படிப்பட்டவரின் நட்பை உதறிவிடுவது இனிமை தரும்.

"எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது"

எல்லி: இருள் வழங்காமை: இயங்குதல் பொருளல்லார்: நேர்மையில்லாத (பொருள் எனும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு)

சூரியன் மறைந்த பின் இருளில் அலையாமல் இருப்பது இனிமை; சோர்வின்றி சொல்லும் திறம் உடைமை இனிது; நம்மை பொருட்டாய் மதியாத நேர்மையற்றோரிடம் நட்பு கொள்ளாமல் இருதல் இனிது.


No comments: