பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, February 18, 2012

"இனியவை நாற்பது" (14)

14. இனியது பாதினான்கு.

அந்த இளைஞனுக்குத் திருமணம் ஆனது. நற்குணம் வாய்த்த ஒரு பெண் அவனுக்குத் துணைவியானாள். இருவரும் நல்லறமாகக் குடும்பம் நடத்தினர். ஓராண்டில் அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக என்று சொல்வார்களே அப்படி வளர்ந்தது. அந்த குழந்தையின் முதலாமாண்டு நிறைவின் போது அக்குழந்தை மெல்ல எழுந்து தடுமாறி, தளர்நடை நடக்கத் தொடங்கியது. அந்தக் காட்சியைப் பார்த்து கணவனும் மனைவியும் மட்டுமல்ல, அண்டை அயலார் அனைவருமே பார்த்து மகிழ்ந்து போயினர். அப்படிப்பட்ட நேரத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோர் அடையும் இன்பத்துக்கு ஈடு உண்டா. எப்படிப்பட்ட இனிமை அது?

அந்தக் குழந்தை மெல்ல மெல்ல சொற்களை முதலில் குழறிக் குழறிச் சொன்னாலும் வெகு விரைவில் பளிச்சென்று சொற்களை உச்சரிக்கத் தொடங்கியது. அந்தக் குழந்தையின் மழலையைக் கேட்கத்தான் எத்தனை இனிமை. அதனால்தான் வள்ளுவர் பெருமானும் சொன்னார், "குழலினிது, யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்று. தன் மக்களின் மழலை அமிழ்தினும் இனிது அல்லவா?

ஒருவன் இளம் வயதில் கெட்டவனாகத் திரிந்து கொண்டிருந்தான். அவன் தீச்செயலைக் கண்டு சில நற்குணமுள்ள பெரியோர்கள் அவனுக்குத் தகுந்த புத்திமதி சொல்லி திருத்த முயன்றனர். இளம் வயது என்பதால் அவன் வாயில்லா ஜீவராசிகளுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தான். நாய்களைக் கண்டால் கல்லெடுத்து அவற்றை அடித்துத் துரத்துவான். ஓணான் போன்றவற்றை அடித்துக் கொல்வான். இப்படிப்பட்ட ஜீவஹிம்சை செய்தால் உனக்குத் துன்பம் வரும் என்றெல்லாம் பெரியோர்கள் சொன்னது அப்போது அவன் காதுகளில் விழவில்லை. பின்னர் நாட்பட நாட்பட அவன் திருந்தி நல்லவனாக வாழும்போது அவன் முன்பு இளம் வயதில் செய்த கொடிய செய்கைகளாலோ என்னவோ, இவனுக்குப் பிறந்த குழந்தை ஊனமாகப் பிறந்தது. இதற்கெல்லாம் தான் அன்று செய்த பாவங்களே காரணமோ என்று மனம் வருந்தினான். சரி! நான் செய்த வினை எனக்கே வருகிறது என்ன செய்ய முடியும், இனி நம் பிள்ளைகளாவது பாவம் செய்யாமல் இருக்கட்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாக வாழ்க்கையை எதிர் கொண்டான். அவனுடைய அந்த அஞ்சாமை இனிது. அந்தப் பாடல்

"குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது."

இதன் பொருள்: குழந்தையின் தளர்நடை காண்டல் இனிது; அதன் மழலையைக் கேட்பது அமிழ்தத்தை விட இனிது; ஒருவன் தான் செய்த வினைக்குப் பயனாகத் துபம் வந்தடையும்போது மனம் அஞ்சாமல் எதிர்கொள்வது இனிதாகும்.

No comments: