பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 23, 2015

கௌதம புத்தர்

                                               

‘கௌதம புத்தர்’ என்றும் சித்தார்த்தர் என்றும் எல்லோராலும் போற்றப்படும் இவர் புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்ல எண்ணம்’, ‘நல்ல வாய்மை’, ‘நல்ல செய்கை’, ‘நல்ல வாழ்க்கை’, ‘நல்ல முயற்சி’, ‘நல்ல சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர்.
இவ்வுலகில் தோன்றிய மகா ஞானிகளில் விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகக் கருதப்பட்டவர் புத்தர். இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்களுக்கு, அவரது வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து,  இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. வினைகளை அதிகரிக்காமல்,  நல்ல கர்மங்களைச் செய்து, மனதைத் தூய்மைப்படுத்துவதால் ஞானத்தை அடையும் போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறிது பார்ப்போம்.
இவர் கிறிஸ்துவுக்கு முன்பு 563 ஆண்டுவாக்கில் இப்போது நேபாளத்திலுள்ள லும்பினி எனுமிடத்தில் பிறந்தார். அப்போது அது பாடலீபுத்திரம் அருகில் இருந்ததாகத் தெரிகிறது. சித்தார்த்தர் கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா என்ற அரசருக்கும், மகாமாயா என்ற அரசிக்கும் மகனாக பிறந்தார். புத்தர் பிறந்த போது, அவரது புனிதத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு அடையாளங்கள் இருந்தனவாம். அவர் பிறந்து, ஏழு நாட்களில் அவரது தாயார் இறந்ததால், மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்.
 சித்தார்த்தரின் ஜாதக கணிப்பின் போது, ‘அவர் உலகம் போற்றும் துறவியாக வருவார்’ என்று ஜோதிடர்கள் கூறியதால், அவரை சீரும், சிறப்போடு வளர்த்து அரசராக்க எண்ணிய அவரது தந்தை, அவருக்குத் துன்பம், இறப்பு மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிக்கு அர்த்தம் தெரியாத அளவிற்கு, அவரை அரண்மனையிலே வைத்து வளர்த்தார். தனது இளம் வயதில், செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர். தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.
 ‘எங்கு தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவானோ’ என்று அஞ்சிய அரசர் சுத்தோதனர், சித்தார்த்தனுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.
அரண்மனை வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போனதால், உலகின் தனது வாழ்வின் பொருளை அறிய வேண்டி, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், தனது தந்தையின் கட்டளைக்கு எதிராக அரண்மனையை விட்டு வெளியே சென்றார். ஜோதிடர்கள் கணித்தது போலவே, வழியில் அவர், ஒரு முடமான முதியவர், ஒரு நோயுற்ற மனிதன், ஒரு பிணம் மற்றும் இறுதியாக ஒரு அமைதியான துறவியைப் பார்த்தார். முதலில் கண்ட மூன்று பேரும், அவரைக் கலக்குமுறச் செய்தனர், மேலும் அவர்கள், ‘அழகு மற்றும் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல’ என்றும் புரிய வைத்தனர். ஆனால், அவர் இறுதியில் கண்ட துறவியின் முகத்திலோ அமைதி தெரிந்தது. இதனால், பிறப்பு, முதுமை, நோய், மற்றும் இறப்பு போன்ற பிரச்சனைகளுக்கான விடையைக் கண்டறிய அவர், தனது மனைவி, குழந்தைகள், அரண்மனை, ராஜ வாழ்வு போன்ற அனைத்து உலக உடைமைகளை விட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். எனவே, அவர் ஒரு இரவில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
உலக உடமைகளைத் துறந்து, துறவறம் பூண்ட சித்தார்த்தர்,  தனது தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற உடையில், அரண்மனையை விட்டு வெளியேறி, மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா  என்ற இடம் நோக்கிச் சென்றார். பின்னர், அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளுக்குச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு செய்தார். மேலும், அவர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைவதற்காக யோகா மற்றும் சந்நியாசத்தின் தீவிர வடிவங்களைப் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியான சித்திரவதையால், அவர் முற்றிலும் உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவர் மிகவும் பலவீனமானார்.
ஒரு நாள், அவர் தியானம் செய்ய முயன்ற போது, சில நடனமாடும் பெண்கள் அவர் அமர்ந்த இடத்தைக் கடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய கட்டுப்பாடுகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப் புரியவைத்தது. இதனால், அவர் தீவிர தியானம் மற்றும் பிற நடைமுறைகளைக் கைவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் ‘உடலும், மனமும் எவ்வித வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்றும் உணர்ந்தார்.
 தனது தேடலுக்குப் பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர், ‘உண்மையைக் கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள ‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்த பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமய போதனைகளை யும், உபதேசங்களையும் பெற்றார். சார்நாத்தில் உள்ள மான் பூங்காவில், அவரது பிரபலமான உபதேசம் நடைபெற்றது. அன்றிலிருந்து அவர், ‘கௌதம புத்தர்’ என்றும், ‘புத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
புத்தர் தனது போதனைகளை போதிக்க, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து, பின் தொடர்ந்தனர். இவரது போதனைகளுக்கு, இந்துக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை நிறுவினார். புத்தமதம், ‘ஆசையே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு எடுத்துரைக்கிறது. மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார். இந்தப் பாதையில் சென்றால், ஒரு நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார். அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழை பணக்காரர் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. மவுரியப் பேரரசரான அசோகர், புத்த மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் மிக முக்கியமான மையங்களாகக் கருதப்படுகின்றன.
புத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். அந்த உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால், அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், தள்ளாடி அவர், குஷிநாகா என்ற இடத்திற்குச் சென்றார். அவர், இறுதியாகக் காகுத்தா ஆற்றில் குளித்தார். இதையடுத்து சிறிது நேர ஓய்விற்குப் பிறகு, அவர் இயற்கை எய்தினார்.


2 comments:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. புத்தரைப் பற்றிய பதிவினைக் கண்டேன். அருமை. நன்றி. சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் வலைப்பூவில் எழுதி வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது அவ்வலைப்பூவைக் காணவும், கருத்து கூறவும் அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete

You can give your comments here