பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 16, 2015

கணாபத்தியம்





இந்து மத வழிபாட்டில் “ஷண்மத” ஸ்தாபனம் செய்து இறைவனை ஆறு வழிகளில் வழிபடச் செய்தவர் ஆதி சங்கரர். அவை, சைவம், வைணவம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ஆகியவை. இதில் கணாபத்தியம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடுதல்
இந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது பணிகள் மற்றும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் முன்னர் செய்யப்படுவது. கணபதியை வணங்கிய பின்னர்தான் இதர வழிபாடுகளை நடத்துவது மரபு...
கணபதி வழிபாடு, சைவ சமயத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. கணாபத்தியப் பிரிவு பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கலாம்.. பத்தாம் நூற்றாண்டில் விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இவற்றுள் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மிகப்பெரியது.  
மகாராஷ்டிரப் பகுதிகளில் 17ம் நூற்றாண்டுக்கும், 19ம் நூற்றாண்டுக்கும் இடையில் காணாபத்தியப் பிரிவு முதன்மை பெற்றது. தென்னிந்தியாவிலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விநாயகர் சிறுத்தொண்டர் மூலம் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது என்று கருதப்படுகிறது. அவர் கொணர்ந்த விநாயகப் பெருமான் நாகை மாவட்டத்திலுள்ள திருச்செங்காட்டாங்குடி எனும் கிராம சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இப்போதும் வழிபாடுகள் நடந்து வருகிறது. இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர். இசைக் கச்சேரிகளில் முதலாவதாகப் பாடப்படும் “வாதாபி கணபதிம் பஜே” எனும் பாடலும் விநாயகப் பெருமானை முன்னிருத்திப் பாடப் படுவதுதான். திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார், கீழே குடிகொண்டிருக்கும் மாணிக்க விநாயகர், திருவையாற்றை அடுத்த கணபதி அக்ரஹாரத்தில் இருக்கும் விநாயகர், செட்டிநாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் போன்ற சிலவிடங்களில் விநாயகர் சிறப்பாக வழிபடப் படுகிறார். “விநாயக சதுர்த்தி” புண்ணிய தினத்தில் அன்த விக்ன விநாயகர் நம் விக்கினங்களைப் போக்கி நல்வாழ்வு தர பிரார்த்தனை செய்வோம்.

No comments: