பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 11, 2015

மகாகவி பாரதியும் இசையும்.










காகவி பாரதியாருக்கு இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் மிகுந்த பற்று உண்டு. பரத நாட்டியம் குறித்து அவருடைய கருத்துக்களை அவருடைய மகள் சகுந்தலா "என் தந்தை" எனும் நூலில் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார் என் தந்தை பரத நாட்டியத்தில் மிகுந்த ஆவல் கொண்டவர். கோபாலகிருஷ்ண பாரதியாரின் "ஆனந்த நடனம் ஆடினார்" எனும் பாடலை அவர் அடிக்கடி பாடிப்பாடிப் பரவசமடைவார். அவரே பாடிய "தகதகத் தகதக வென்றாடோமோ?" போன்ற பாடல்களில் அவருடைய நாட்டிய பரவசம் வெளிப்படும்.

மேலும் பரதநாட்டியக் கலை பொதுமக்கள் கையில் வராமல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தார் வசம் இருப்பதனால் அதை வெளிப்படையாகப் பார்க்கவோ, ரசிக்கவோ முடியாமல் போனதைக் குறித்து பாரதியின் கருத்தையும் சகுந்தலா விவரிக்கிறார். அவர் சொல்கிறார், "பரதநாட்டியம் என்ற மாபெரும் கலை, தற்காலத்தில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒரு வகுப்பினரால் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அதன் மேன்மையைச் சகலரும் கண்டு ஆனந்தமடையத் தக்கதாக இருந்தும் நம்முள் நாமே வெட்கப்பட்டுக்கொண்டு இலை மறைவு காய் மறைவாக ரகசியமாகப் பார்த்து ரசிக்க வேண்டியிருக்கிறது. அந்த தெய்வீகக் கலையை நம் வீட்டில் தாய்மார்களும், சகோதரிகளும் நடத்தினால், நாம் பகிரங்கமாகக் கண்டு ஆனந்தப்படலாம்". இப்படிச் சொல்வதன் மூலம் பரதக் கலை எல்லோராலும் அந்தக் காலத்தில் கற்கவோ, பொது மேடைகளில் ஆடவோ இயலாமல் இருந்திருக்கிறது. ஆலயங்களில் அதற்கென்று குறிப்பிட்டவர்கள் அதை 'சதிர்' எனும் பெயரால் ஆடி அந்த அற்புதமான கலையை உயிர்ப்புடன் காத்து நம் கையில் கொடுத்துச் சென்றிருக்கின்றனர்.

பாரதியாருக்கு இசையில் தணியாத ஆர்வம் உண்டு. இயற்கையிலேயே தனக்கிருக்கும் இந்த இசை ஞானத்தை மேலும் விருத்தி செய்துகொள்ள முடியாமல் தவித்தார். ஒரு நல்ல இசைக் கலைஞரை அணுகி அவருக்கு குரு தட்சிணை கொடுத்துக் கற்றுக்கொள்ள அவரிடம் வசதி இல்லாமல் போயிற்று. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக இருந்த நிலையில் ஊரைவிட்டு ஓடிப்போய் புதுச்சேரியில் வாழவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இசையை எங்கே போய் கற்றுக் கொள்வது. இருந்தாலும் அவரால் ஒரு தேர்ந்த இசைக் கலைஞரைப் போல பாட முடிந்தது, அதற்கான ஞானமும் அவரிடம் இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கில அரசின் எடுபிடிகளான ரகசிய போலீசார் அவரிடம் இசை கற்றுக் கொள்ள வேண்டி வந்திருப்பதாகவும், சிலர் தமிழ் கற்க வந்திருப்பதாகவும், சிலர் வேத, உபநிஷதங்                  

களைக் கற்க வந்ததாகவும் பொய்சொல்லி வேவு பார்த்தார்கள். அவர்களை இனங்கண்டுகொண்டு பாரதியார் அத்தகைய சூது நிரம்பியவர்களைத் தன்னை அண்டவிடாமல் பார்த்துக் கொண்டார்.

சகுந்தலா மேலும் சில அரிய தகவல்களைக் கூறுகிறார். பாரதியாரிடம் ஸீ.ஆர்.சீனிவாச ஐயங்கார் என்பார் தியாகராஜ கீர்த்தனைகளுக்கு ஸ்வரம் போட்ட புத்தகம் ஒன்று இருந்தது என்கிறார் அவர். அந்த புத்தகத்தில் உள்ள ஸ்வரங்களைப் பயன்படுத்தித் தானே பாட முயற்சிகள் செய்வாராம். தியாகராஜ சுவாமிகளின் 'நகுமோமு', 'மாருபல்க', 'நிதிசால சுகமா' போன்ற கீர்த்தனைகள் மீது அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம். 

மகாகவிக்கு தெலுங்கு மொழியும் நன்கு தெரியும். இது அவருடைய 'சந்திரிகையின் கதை'யைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதில் சந்திரிகையும் பந்துலுவும் தெலுங்கில் பேசிக்கொள்ளும் பகுதிகள் சுவாரசியமானவை, அவை நல்ல தெலுங்கில் அமைந்தவை. தெலுங்கு மொழி தெரிந்த காரணத்தால் பாரதியார் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளில் உள்ள சொற்களின் பொருளையும் அவற்றின் நயத்தையும், பாவத்தையும் ரசித்து மகிழ்வாராம். 'மாருபல்க' கீர்த்தனை இவருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு இவர் 'சந்திரிகையின் கதையின்' நாயகி விசாலாட்சி இந்தப் பாடலைப் பாடுவதாக எழுதியிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பாரதியின் தமிழ்மொழிப் பற்று உலகம் அறிந்தவொன்று. தமிழே உயர்ந்த மொழி என்றும் தமிழிலே எண்ணி, தமிழிலே பேசு, ஆங்கிலத்தில் எண்ணி பின் தமிழில் மொழிபெயர்க்காதே என்றெல்லாம் அவர் சொல்வதுண்டு. அப்படிப்பட்டவர் இசையில் மொழி பேதம் பார்த்ததில்லை. அவரைப் பொறுத்தவரை சங்கீதம் என்பது வேறு, அதற்கு மொழி ஒரு தடை இல்லை என்பார் அவர். 

"சங்கீத விஷயம்" என்ற அவருடைய கட்டுரையில் பாரதியார் தியாகராஜ சுவாமிகள் தன்னுடைய கீர்த்தனங்களில் அந்தந்தப் பாடலின் கருத்துக்கேற்ப பாவம் வெளிப்படும் வகையில் ராகங்கள் அமைந்திருப்பதை வெகுவாகப் பாராட்டி எழுதியிருக்கிறார். ஆனால் அவர் காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட தெலுங்கு கீர்த்தனைகள் அப்படி அமையவில்லை என்பது அவர் கருத்து. அவர் தியாகராஜரின் ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அது "நன்னு ப்ரோவ நீகு இந்த தாசமா?" எனும் கீர்த்தனை. அதில் பாடலின் பொருளுக்கேற்ப அமைக்கப்பட்ட ராகம் பொருந்தி வருவதைச் சுட்டிக் காட்டி, அதைப் போல பட்டணம் சுப்பிரமணிய ஐயர் இயற்றிய 'வரமுலொசகி" எனும் பாடலில் இல்லை என்றும் சொல்லுகிறார். பின்னதில் இசை சண்டைத் தாளம் போடுகிறது என்று எழுதுகிறார். 

அவருடைய புகழ்பெற்ற பாடலான "சிந்துநதியின் மிசை நிலவினிலே, சேரநன் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்" எனும் பாடலைக் குறிப்பிட்டு சகுந்தலா தன் தந்தையிடம் "ஏன் அப்பா தெலுங்கில் பாட வேண்டும்? தமிழில் நல்ல பாடல் இல்லையா?" என்று கேட்டிருக்கிறாள். அதற்கு பாரதியார் சொன்ன பதில்: "பாப்பா! தமிழ்ப் பாட்டும் பாடலாம்; இந்துஸ்தானியிலும் பாடலாம். பெரிய பெரிய கவிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாடுவதற்குரிய முறையில் பாடலை இயற்றி, அதற்கேற்ற இசையுடன் பொருத்தி சுவையுடன் பாடும் சங்கீத வித்வான்கள் நம் தமிழுலகில் அதிகம் இல்லாமல் போய்விட்டனர். சங்கீதத்தில் தெலுங்கு என்றும் உருது என்றும் பேதம் கிடையாது. ஆங்கிலேயர் தேசாபிமானம் அதிகம் உடையவர்கள். மொழிப்பற்றிலும் அவர்களுக்கு இணை கிடையாது. ஆனால் சங்கீதத்தில் ஜெர்மன் சங்கீதமும், இத்தாலிய சங்கீதமும் உயர்ந்தவை என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் வடதேசத்தில் இருக்கிற சிந்து நதியின் மீது, தென் தேசத்தில் உள்ள அழகிய சேரநாட்டுப் பெண்களுடன் தமிழ் நாட்டவர்களாகிய நாம், சங்கீதத்துக்கு அழகு தரும் தெலுங்கு மொழியில் பாடி மகிழ்வோம் என்று சொன்ன கருத்து, நம் இந்திய தேசம் முழுவதையும் ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக்குவதுதான்." என்று பதில் சொன்னார் பாரதியார்.

பாரதியார் தான் இயற்றிய "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்" எனும் பாடலை அவரே பாடும்போது கமாஸ் ராகத்தில் பல சங்கதிகளுடன் பாடுவாராம். அவருடைய எல்லா பாடல்களையும் இசையோடு பாடுவதற்கேற்ப அவற்றை ஸ்வரப்படுத்தி ஒரு புத்தகம் வெளியிட ஆவல் கொண்டிருந்தாராம். பாவம், அவர் ஆசைப்பட்டது எதுதான் நடந்தது? அவர் பாடலை பலர் அறிய பாடுவதற்கே தமிழ் மக்கள் பயந்த காலம் அது.

பாரதியார் ஒரு பாட்டை இயற்றுகிறார் என்றால் அந்தப் பாடலுக்கு ராகம், மெட்டு இவை அமைக்க எந்த உதவியையும் யாரிடமும் நாடியதில்லையாம். ஏதோ அவர் மனதுக்குத் தோன்றிய ஒரு மெட்டில் அவரே பாடிப் பார்ப்பாராம். அந்த மெட்டு அவருக்குப் பிடித்துப் போய்விட்டால் அந்த மெட்டு எந்த ராகத்தின் ஸ்வரங்களோடு பொருந்துகிறதோ அந்த ராகத்தின் பெயரை மட்டும் எழுதி வைத்து விடுவாராம். அதற்குரிய தாளம் தானாக அமைந்து விடுமாம்.

பாரதியார் தான் இயற்றிய பாடல்களைத் தனக்கு நெருக்கமாக உள்ள நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். அப்படிப்பட்ட நண்பர்களில் ஒருவர்தான் வ.வெ.சு.ஐயர். பாரதியாரின் கண்ணன் பாட்டுக்கு வ.வெ.சு.ஐயர் முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி பாரதியின் இசைத் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவர் சொல்கிறார் "பாரதி தன் கற்பனா பாவத்தோடும், சிருஷ்டி உற்சாகத்தோடும் தனது பாடல்களைப் பாடும்போது அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அட்சர லட்சம் பெற்றதாக‌ மதிப்பர்". 

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவையாற்றுக்கு வந்து ஐயாறப்பனைத் தரிசித்து மகிழும்போது "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" என்கிறார். உலகின் இயக்கங்கள் அனைத்திலும் ஒளிர்பவன் இறைவன், அந்த இயக்கம் எழுப்பும் ஒலி, ஓசை அனைத்துமே இறைவன் தந்தவையாகும் என்பதை அப்பர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இறைவனை நாதப்பிரம்மம் என அழைக்கிறார்கள்.

கண்ணபிரானை பல்வேறு வடிவங்களில் கண்டு ரசித்துத் தன் கண்ணன் பாட்டில் அழகுற வடித்துத் தந்திருக்கிறான். அவை அத்தனையும் பல்வேறு ராகங்களில் இசையோடு பாடக்கூடிய பாடல்கள் என்பதிலிருந்தே அவன் கண்ணனை இசை வடிவில் தரிசித்திருக்கிறான் என்பது விளங்கும். இசையை ஆராதித்த பாரதி அந்த இசையே துன்பம் தருவதாகவும் தொல்லை தருவதாகவும் இருக்கக்கூடாது என்பதையும் தெரிவிக்கிறான். தன்னுடைய "சங்கீத விஷயம்" எனும் கட்டுரையில் பாரதி சொல்லும் கருத்துக்கள் இன்றளவும் உண்மை என்பதை நாம் காண முடிகிறது.

அவர் சொல்லுகிறார், எந்த ஊருக்குப் போ, யாருடைய கச்சேரியை வேண்டுமானாலும் கேள்! அங்கெல்லாம் அவர்கள் நமக்குப் புரியாத மொழியில் பாடிக் கொண்டிருப்பார்கள். அவர் சொல்வதை அப்படியே பார்க்கலாமே! "நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம் பஜே' என்று ஆரம்பஞ் செய்கிறார். தொடர்ந்து 'ராமநீ ஸமான மெவரு', 'மரியாதை காதுரா', 'வரமு லொஸகி' ... ஐயையோ, ஐயையோ, எங்கும் ஒரே கதை!."

"எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்துக்குப் போ எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாடல்களை வருஷக் கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்."

பாரதியின் இந்தக் கருத்துத் தெலுங்கிலும், சம்ஸ்கிருத மொழியிலும் பாடிய வித்வான்களை குறைவாக மதிப்பிட்டார் என்பது இல்லை. அவர்களை அவர் மிகவும் உயர்வாகவும், மரியாதையுடனும் மதித்துப் போற்றியிருக்கிறார். ஆயினும் ஒரே பாடல்களைப் பாடி கேட்போர் உள்ளங்களை சோர்வடையச் செய்யாதீர்கள்; புதிது புதிதாக கீர்த்தனைகளை உருவாக்குங்கள்; புதிய பாடகர்களை அறிமுகம் செய்யுங்கள் என்கிறார். அப்படியானால் பழம்பெரும் மகான்களை உதாசீனம் செய்யலாமா என்று யாராவது கேட்டால், அவர்களுக்கும் அவர் பதில் சொல்கிறார். தியாகராஜர் பிறவியிலேயே பெரிய மகான். அவருடைய உயர்வை குறைத்து மதிப்பிடவில்லை. இப்படிச் சொல்லிவிட்டு அவர் தன் கருத்தையும் தெரிவிக்கிறார். அது "பூர்வீக மகான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டுமென்பது என்னுடைய கட்சியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமல் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்து விடக்கூடாது".

இப்படிச் சொல்லியதோடு பாரதி நிறுத்திக் கொள்ளவில்லை, இந்த நிலைமை மாற என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர் சொல்கிறார். "புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டு வரவேண்டும். இப்போது சங்கீத வித்வான்களில் தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும்". பாரதியார் இப்படிச் சொன்னால் அதற்கு வித்வான்கள் சொல்கிறார்கள் "பூர்வ காலத்து மகான்களுக்குத் தெய்வ பிரசாதமிருந்தது. எங்களுக்கு இல்லையே என்ன செய்வோம். இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா? இப்போதைய வித்வான்கள் புதிய கீர்த்தனைகளை அமைப்பதில் பின் வாங்கக்கூடாது, தெய்வங்கள் இறந்து போய்விடவில்லை, அவைகள் இவர்களுக்கு அந்த சாதனையை நிகழ்த்த அனுக்கிரகம் செய்வார்கள்" என்கிறார்.
அவருடைய குயில் பாட்டில் இசை அனுபவத்தை எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர் அனுபவித்தார் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார். இயற்கையோடு ஒன்றிய அவருடைய மனப்பாங்கு அவரைச் சுற்றிலும் எழுகின்ற ஓசைகள் அனைத்திலும் இசையை ரசிப்பதாக இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. இதோ 'குயில் பாட்டின்' வரிகள்:

"கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமுமே தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்
கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப்பார் தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சம் பறிகொடுத்தேன் பாவியேன்"

பாரதியாரின் கூற்றின்படி அவர் ரசித்து நெஞ்சைப் பறிகொடுத்த இசை அத்தனையும் மனிதர் பாடும் அல்லது வாசிக்கும் இசைகளில் மட்டுமல்ல, தாவரங்கள் முதல் மானுடர் வரையிலான அத்தனை உயிர்களிலும் எழும் ஓசையை அவர் நல்ல இசையாக ரசித்திருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. வாழ்வை இசைவிப்பது இசை; அந்த இசைக்கு உருகாதார் யார்? பாரதி மட்டும் விதிவிலக்கா என்ன?






No comments: