பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 19, 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படத்துக்காகப் பல பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஓரிரண்டு பாடல்களை இப்போது பார்ப்போம்.

                   நாடு கெட்டுப் போகுது

பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...
[விக்ரமாதித்தன், 1962]

                             நீதி தவிக்குது

ஒருவன்: மூளை நெறஞ்சவங்க 
காலம் தெரிஞ்சவங்க 
மூத்தவங்க படிச்சவங்க 
வாழ்கின்ற நாடு!-இது

மற்றவன்: மூச்சுத் திணறுதுங்க 
முளியும் பிதுங்குதுங்க 
பாத்துக்குங்க கேட்டுக்குங்க 
ஜனங்கள் படும்பாடு!-இது

ஒருவன்: நெலமை இப்படி இருக்குது 
நீதி கெடந்து தவிக்குது 
கொடுமை மேலே கொடுமை வளர்ந்து 
நெருக்குது - அது 
அருமையான பொறுமையைத்தான் 
கெடுக்குது - ஊர் (நெலமை)

மற்றவன்: பாதை மாறி நடக்குது, 
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது 
பழமையான பெருமைகளைக் 
கொறைக்குது-நல்ல 
பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப் 
பறக்குது - ஊர்ப் (நெலமை)

ஒருவன்: என்ன இருந்தாலும் மனுசன் 
இப்படி ஆடக் கூடாது

மற்றவன்: எதுக்கும் ஒரு முடிவிருக்குது 
அதிகநாளு ஆடாது

ஒருவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும் 
எண்ணம் உடம்புக் காகாது

மற்றவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா 
கவனிக்காமெப் போகாது-ஊர் (நெலமை)
ஒருவன்: அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே 
அகந்தை புகுந்து கலைக்குது

மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள் 
மக்கள் கழுத்தை நெரிக்குது

ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து 
வேட்டையாடிக் குவிக்குது

மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து 
வீட்டுகாரனைக் கடிக்குது-ஊர் (நெலமை)
[உத்தம புத்திரன்,1958] 

                    கண் தூங்குமோ?
எங்கே உண்மை என் நாடே
ஏனோ மௌனம் சொல் நாடே
மேலான செல்வம் வீணாகலாமோ?
வீழாமல் மீளாயோ! (எங்கே)

மீறிவரும் குரல் கேளாயோ
வெற்றி வரும் வேகம் பாராயோ
பாராளத் தகுந்தவள் உன் மகளோ
பாதகம் புரிந்திடும் பொய் மகளோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ (எங்கே)

காலமுன்னைக் குறை கூறாதோ
காவியங்கள் யாவும் ஏசாதோ
வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ
போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ....?
[இரத்தினபுரி இளவரசி,1959] 

               ஆமாம் சாமி ஆசாமிகள்
ஆண்: ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு (ஆறறிவில்)
அடக்கமில்லா பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கும் நடையிலும்
ஆதிகால பண்பைக் காட்டிப்
பறக்க விடும் உடையிலும் (ஆறறிவில்)
தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகைப் பார்க்கவரும் முறையிலும்
அவன் கண்டது போல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும்
ஏமாறும் மனத்திலும்
ஆமாஞ்சாமி கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத
மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும்
துடை நடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்து திரியும்
ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவில்)
[மகனே கேள், 1965] 

        
                    ஆணவக் குரங்கு!
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடுமயிலே! (ஆடு மயிலே)

பாடு குயிலே இசை பாடு குயிலே
அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
அமைதி பெருகி நிலைபெறவே! (ஆடு மயிலே)

ஆடாதே நீயும் ஆடாதே-வீண்
ஆணவக் குரங்கே ஆடாதே
போடாதே சத்தம் போடாதே-கொடும்
பார்வை ஆந்தையே போடாதே!
வாடாதே முகம் வாடாதே
வண்ண மலரே வாடாதே!
வழக்கமான பூசை முடியுமுன்னே
மறந்தும் இதழை மூடாதே! (வாடாதே)

ஓடாதே மானே ஓடாதே-நீ
ஓடும் வழி தவறி ஓடாதே!
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
விருந்தாய் விழுந்து விடாதே! (ஓடாதே)
[இரத்தினபுரி இளவரசி,1959] 

1 comment:

 1. நெஞ்சைவிட்டு அகலாத
  பட்டுக்கோட்டையார் பாடல்கள்
  சிறந்த பகிர்வு

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  ReplyDelete

You can give your comments here