பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 15, 2015

இறைவன் அன்பு வடிவாக இருக்கிறான்.

                            
1950இல் ராஜாஜி மும்பையில் இருந்த ஒரு அமைப்புக்கு அனுப்பிய வாழ்த்து மடலில் இருந்து…………

“கண்ணுக்குத் தெரியாத மென்மை எனும் உணர்வு காந்திய சகாப்தத்திற்கு முன்பாக மக்களுக்கு எந்த அளவுக்குப் புரிந்திருக்கக்கூடும்? பாரத நாடு தந்த ஞானியர், வெளிநாட்டு ஞானியர்களான ஏசு கிறிஸ்து, சாக்ரடீஸ் போன்ற பெரியோர்கள் போதித்தவைகளைத்தான் மகாத்மா காந்தியடிகள் நமக்கு போதித்தார். உலகிலுள்ள மதங்கள் அனைத்துமே அன்பு, அமைதி, பொறுமை ஆகிய உயர்ந்த தத்துவங்களைத் தான் போதித்தன. அவைகளைத்தான் நாமும் பின்பற்ற வேண்டுமென்று காந்திஜியும் விரும்பினார். மனித வாழ்க்கையில் உயரிய அமைதி தரும் தத்துவம் ஒன்று உண்டு என்றால் அது இந்தப் பெரியோர்கள் காட்டிச் சென்றிருக்கிற தத்துவங்கள் தான்.

காந்தியடிகள் அமைதி, அகிம்சை, அன்பு, பொறுமை ஆகிய உயர் குணங்களைத் தன் வாழ்க்கையில் கடைபிடித்ததன் மூலம் இந்திய மக்களுக்கு சுதந்திரம் எனும் விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அந்த அகிம்சை வழி நல்ல பலன்களைத் தருமென்றால், நாமும் அந்த வழியைப் பின்பற்றி வாழ்ந்தால் மேலும் பல உயர்வுகளைப் பெற முடியும் அல்லவா? அரசியல் சுதந்திரம் மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மேன்மை, வளம், உயர்வு, பெருமை ஆகிய அனைத்துமே அதனால் பெற முடியுமே!

இவ்வுலகத்துக்கு உயிர் கொடுக்கும் கதிரவனை, அவன் வீசும் ஒளிக்கற்றை களிலிருந்துதான் தெரிந்து கொள்கிறோம், இல்லையா? வானில் மேகக்கூட்டம் திரண்டு வந்து ஒன்றோடொன்று மோதி உண்டாக்கும் இடியை அது எழுப்பும் பெருத்த ஓசையின் மூலம் அறிகிறோமல்லவா? நம்மால் தொட்டுப் பார்த்து உணரமுடியாத இந்த ஒளி, ஒலி இவைகள் நம்மால் தொடமுடியாவிட்டாலும் அவை சக்தி வாய்ந்தவைகளாக இருப்பது உண்மையல்லவா? அதுபோலத்தான் இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் ஆதார சக்தியாக விளங்குவது அனைத்தையும் நாம் தொட்டு உணர முடியாதவைகளாக இருந்த போதும், அவைகள் நமது வாழ்வின் முழுமுதல் ஆதாரமாக இருப்பது என்பது உண்மை. நம் அறிவுக்கும், புத்திக்கும் எட்டாத நிலையில் இருக்கும் சக்தியொன்று நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவேதான் இறைவனை இப்பூவுலகில் பெளதீக உணர்வுகள் மூலமாக அறிந்து கொள்ளும் சக்தி நமக்கு இல்லை. ஆனால் இறைவன் நமக்கு அளித்திருக்கிற அறிவு, சிந்தனை, நம்பிக்கை ஆகியவை மூலம் அவன் இந்த பிரபஞ்சத்தை வழிநடத்துகிறான் என்பதை உணர்ந்து கொள்கிறோம். அப்படிப்பட்டவன் தான் பகுத்து அறியும் சக்தி படைத்தவன், அவன்தான் பகுத்தறிவு வாதி.

ஆலயத்தில் அடிக்கப்படும் மணியோசை ஊரெங்கும் கேட்பதைப் போலவோ, சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியெங்கும் பரவிக்கிடப்பதைப் போலவோ, வீசுகின்ற உயிர்க்காற்று எப்படி மூலை முடுக்கெல்லாம் புகுந்து செல்கிறதோ, அதைப் போல இறைவன் தான் இருப்பதை மனித குலத்துக்குத் தெரிவிப்பதில்லை. இறைவன் காற்றில் கலந்து வரும் மணியோசை போலவும், சூரியனின் கிரணங்கள் போலவும், காற்றின் வீச்சைப் போலவும் எங்கும் எப்போதும் பரவிக்கிடப்பதை உணர்ந்தவனே ஞானி.

மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கிற குறுகிய கால வாழ்க்கையில் தன்னுடைய சுயநலத்துக்காக வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ள முயல்கிறான். மனித உணர்வில் வன்முறையும் உண்டு; சாந்தம் அல்லது அமைதி என்பதும் உண்டு. வன்முறையாலும், வெறுப்பாலும் மனிதன் ஆதாயம் அடைந்தாலும், அவைகளால் அவன் மகிழ்ச்சியடைய முடிவதில்லை. அமைதி, அகிம்சை, அன்பு இவை தெய்வீக குணங்களைத் தந்து இறுதியில் வெற்றியைத் தருவதோடு மகிழ்ச்சியையும் சேர்த்தே தருகிறது.

எனவேதான் கண்களுக்குத் தெரியாத இயற்கையின் சக்திகள் நமக்குப் பல சாதனை களைத் தருகிறதோ, அங்ஙனமே, அருள், அன்பு, சாந்தம் இவைகள் கடவுளின் வடிவங்களாகும். மனிதனின் புன்னகையிலும், இரக்கத்திலும், அன்பிலும் கடவுள் வெளிப்படுகிறான். பகல் நேர சூரிய வெளிச்சத்தில் வானத்து நட்சத்திரங்கள் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை; அதற்காக நட்சத்திரங்களே இல்லையென்று சொல்லிவிட முடியுமா?


1 comment:

  1. அன்பு வடிவான இறைவனைப் பற்றிய பகிர்வு அருமை. படிக்கும்போதே மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

    ReplyDelete

You can give your comments here