பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 20, 2015

மாலிக்காபூர்.

                                                    
மாலிக்காபூர்.

இந்த பெயர் வரலாற்றுப் பாடத்தில் படித்ததாக நினைவு; மற்றபடி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை அல்லவா? ஆனால் நம் தமிழ் நாட்டில் பல ஆலயங்கள் சிதிலமடைந்து கிடப்பதற்கு இவன் படையெடுப்புதான் காரணம் என்று சொல்லி வைத்தது நமக்கு நினைவுக்கு வருகிறது. ஆம், அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான இவன் தமிழ் நாட்டுக்கு படையெடுத்து வந்து இங்கு பல கோயில்களை உடைத்து, சேதப்படுத்தி, இங்கிருந்த பல விலைமதிப்பற்ற செல்வங்களைக் கொள்ளை கொண்டு போனவன் என்பதை படித்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. பல கோயில்களில் நிலவறைகள் இருப்பதை நாம் அறிவோம். இவன் படையோடு தென்னகம் நோக்கி வருகிறான் என்றதும் விலையுயர்ந்த பொருட்களை இந்த நிலவறையில் மறைத்து வைத்திருந்தார்கள். அவை இப்போது புதையலைப் போல கிடைத்து வருவதையும் நாம் அறிவோம். அது சரி! யார் இந்த மாலிக்காபூர்? இவன் தெற்கே படையெடுத்து வந்ததன் நோக்கம்தான் என்ன? இறுதியில் இவன் செய்த கொடுமைகளுக் கெல்லாம் எப்படி பதில் சொன்னான்? இவற்றை ஓரளவுக்குத் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? மறுபடியும் வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டு இந்திய சரித்திர பாடத்தைப் படிக்காவிட்டாலும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்திகள் இவை என்பதால் ஓரளவுக்கு தெரிந்து கொள்வோம்.

அலாவுதீன் கில்ஜி காலத்தில் அவன் படைத்தலவனாக நியமிக்கப்பட்டவன் இந்த மாலிக்காபூர். இவன் குஜராத் பகுதியைச் சேர்ந்தவன். இந்துவாகப் பிறந்து வளர்ந்தவன், பிறகு இஸ்லாமுக்கு மாறிக் கொண்டவன் என்றொரு செய்தி உண்டு. வரலாற்றாசிரியர்கள் சிலர் இவன் பாக்தாதில் விலைக்கு வாங்கப்பட்டவன் என்றும், வேறு சிலர் இல்லையில்லை இவன் எத்தியோப்பியா நாட்டுக்காரன் என்றும் சொல்கிறார்கள். இந்துவாக இருந்தபோது இவன் பெயர் சாந்த்ராம். இவன் ஒரு மூன்றாம் இனத்தான், அதாவது பழைய பாணியில் சொல்வதானால் இவன் ஒரு அலி. நல்ல தோற்றக் கவர்ச்சியுடையவன், புத்திசாலி. இல்லாவிட்டால் இவன் ஏராளமான கோயில் சொத்துக்களைக் கொள்ளை கொண்டு போயிருப்பானா? அடிமைகளை அந்தக் கால வழக்கப்படி கடையில் பொருட்கள் வாங்குவது போல பணம் கொடுத்து வாங்குவார்கள். அதன்படி அடிமையான இவனை நுஸ்ரத்கான் என்பவர் ஆயிரம் தினாருக்கு விலைக்கு வாங்கினார். அதன் காரணமாகவே இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவனை “ஹஸார் தினாரி” (ஆயிரம் தினாருக்கு வாங்கப்பட்டவன்) என்றனர். எது எப்படியானால் என்ன, இந்த அடிமை இந்திய வரலாற்றையே கிடுகிடுக்க வைத்துவிட்டான் அல்லவா?

அலாவுதீன் கில்ஜி


அப்போதைய சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு இவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது. பிடித்துப் போய்விட்டது என்றால் எப்படி? போரில் வென்று கவர்ந்து வந்த கமலா தேவி எனும் குஜராத் பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதோடு, இந்த அடிமையின் அழகிலும் (இவன் தான் அலியாயிற்றே) இவன் இடுப்பில் தாலி கட்டி சேர்த்துக் கொண்டான். அதோடு இவனைத் தன் படையிலும் சேர்த்துக் கொண்டான். இவனை விலைக்கு வாங்கிய பத்து வருஷங்களுக்குள் இவன் தன்னுடைய திறமை(!)யினால் சுல்தான் அவையில் உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டான். கில்ஜியின் படைக்கு இவன் தலைவனாக நியமிக்கப்பட்டான். சுல்தான் தெற்கே படையெடுத்துச் செல்ல முடிவு செய்தவுடன் இவனை அந்தத் தென்னக படையெடுப்புக்குத் தலைவனாக அறிவித்தார். தெற்கே படையெடுத்துச் சென்று வழிநெடுக இவன் பெற்ற வெற்றிகளின் காரணமாக சுல்தானுக்கும் இவனுக்கும் செல்வம் கணக்கின்றி கிடைத்தது, மாலிக்காபூருக்கு பெருமையும் சேர்ந்தது.

தென்னக படையெடுப்பில் மாலிக்காபூர் 1306இல் முதலில் தேவகிரியைப் பிடித்துக் கொண்டான். 1309இல் இப்போதைய ஆந்திரா, தெலுங்கான பகுதிகளின் மீது படையெடுத்து வென்றதோடு, அவர்களின் கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஏராளமான செல்வங்களையும் கொள்ளை கொண்டான். அத்தனை செல்வங்களையும் அவன் சுமந்து கொண்டு சென்று சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் சமர்ப்பித்து அவரது அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமானான். அடுத்த வருஷத்தில் அதாவது 1310இல் தென்னக மேற்குக் கடற்கரைப் பட்டினமான துவாரசமுத்திரத்தைத் தாக்கிப் பிடிக்க அனுப்பப் பட்டான். இது அப்போது இருந்த ஹொய்சாள வம்சத்து வல்லாள மன்னர்களின் தலைநகரம். அதைப் பிடித்துக் கொண்டு இவன் மலபார் பகுதிக்கு படையோடு சென்றான். அங்கு கொள்ளையடித்துக் கொண்டு, கிழக்கே திரும்பி பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையை நோக்கி வந்தான். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட வழிநெடுக இருந்த கோயில் சொத்துக்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அங்கு சில காலம் தங்கியிருந்தான். அப்படி தங்கியிருந்த காலத்தில் மதுரையில் ஒரு மசூதியைக் கட்டி வைத்தான்.

மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்த காலத்தில் அங்கு ஆண்ட அரசன் மாறவர்மன் குலசேகர பாண்டியன். இவன் காலம் 1268 முதல் 1310 வரை. இவனுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீரபாண்டியன். இவர்களில் சுந்தர பாண்டியன் பட்டமகிஷிக்குப் பிறந்தவன், வீரபாண்டியன் மன்னனின் சேர்த்துக் கொண்ட மனைவிக்குப் பிறந்தவன். வழக்கத்துக்கு மாறாக மன்னன் தன்னுடைய இளைய மகனுக்குத்தான் பட்டம் சூட்டவேண்டுமென முடிவெடுத்தான். அரியணைக்கு உரியவனான சுந்தர பாண்டியன் ஆத்திரமடைந்தான். விளைவு? மன்னன் கொல்லப்பட்டான், மூத்தவனான சுந்தர பாண்டியன் 1310இல் அரியணை ஏறினான். நமக்குத்தான் தெரியுமே ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்று. இளையவன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக சிலர் கிளம்பினார்கள். உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த கலகத்தில் சுந்தரபாண்டியன் தோற்றோடிவிட்டான். ஓடியவன் ஓடிப்போய் டெல்லி சக்கரவர்த்தி அலாவுதீன் கில்ஜியிடம் முறையிட்டான். அந்த சமயம் சுல்தானின் தளபதியான மாலிக்காபூர் துவாரசமுத்திரத்தில் இருந்தான். அவ்னை சுல்தான் அழைத்து மதுரைக்குப் போய் சுந்தர பாண்டியனுக்கு அரசாட்சியை மீட்டுக் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தான். அதையொட்டி டெல்லி படைகள் மாலிக்காபூரின் தலைமையில் 1311இல் மதுரைக்குள் நுழைந்தது.

மதுரையில் மாலிக்காபூர் இருந்த ஓராண்டில் அங்கு ஒரே பிரளயம் தான். கொள்ளை, கொலை, கற்பழிப்பு. ஒரு இண்டு இடுக்கு கூட விடாமல் சென்று கொள்ளையடித்த செல்வத்தை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்தான் மாலிக்காபூர். வழியில் தஞ்சையை அடுத்த கண்டியூரில் சில காலம் தங்கி சுற்றிலுமிருந்த பல கோயில்களைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்திருந்தான். அப்படி அவன் கொள்ளையடித்த செல்வங்களை, தங்கம், வெள்ளி, சிலைகள் என்று கணக்கற்றவைகளை 312 யானைகள் மீது ஏற்றினான். 20,000 குதிரைகள் மீது ஏற்றினான். இவன் அடித்த கொள்ளையில் 10 கோடி தங்கக் காசுகள் அடக்கம் என்கிறது வரலாற்றுச் செய்திகள்.

மதுரையிலிருந்து மாலிக்காபூர் இராமேஸ்வரம் நோக்கித் திரும்பினான். அங்கும் வழக்கமாகச் செய்வது போல கொள்ளையடித்துக் கொண்டு அங்கும் ஒரு மசூதியைக் கட்டி வைத்தான். அவன் கொள்ளையடித்த செல்வங்களைத் தூக்கிச் செல்ல முடியாத அளவுக்குச் சேர்ந்து விட்டது. அத்தனையையும் சுமந்து கொண்டு சிறிதும் அசராமல் தொடர்ந்து தன் வேலையில் ஈடுபட்டான். மதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் அவன் அடித்த கொள்ளையோடு தேவகிரி கொள்ளையைக்கூட ஒப்பீடு செய்யமுடியாது. அத்தனை செல்வம் கொள்ளையடித்து வைத்துக் கொண்டான்.

டில்லியில் அல்லாவுதீன் கில்ஜிக்கு தன் படைத்தலைவன் கொள்ளையடித்துக் கொண்டு வந்த செல்வங்களைப் பார்த்து மகிழ்ந்து போய், அவனே மாலிக்காபூருக்கு அடிமையாகி விட்டான். விடுவானா அந்த அடிமை. சுல்தானை கவிழ்த்துவிட்டுத் தானே முடிசூடிக் கொள்ள ஆசை கொண்டு விட்டான். அதற்கு என்ன வழி? முதலில் சுல்தானின் மனைவி மாலிக் இ ஜெஹான் மீதும், மகன்கள் கய்சர்கான், ஷாடிகான் ஆகியோர் மீதும் பொய்யான குற்றச்சாட்டை அதாவது அவர்கள் சுல்தானுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற பொய்யை சுல்தானிடம் சொல்லி அவர் மனதைக் கலைத்தான். இவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத சுல்தானும் அவர்களை சிறையில் அடைத்தான். ராணியை டில்லி கோட்டையிலும், பிள்ளைகளை குவாலியர் கோட்டையிலும் சிறையிலடைத்து வைத்தான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாலிக்காபூர், சுல்தானுக்கு விஷமிட்டுக் கொல்லவும் முயற்சிகள் மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றான். சுல்தான் அலாவுதீன் கில்ஜி மாண்டார், மாலிக்காபூர் தன் கைப்பாவையான ஒருவனை அரசணை ஏற்றினான். தான் அவனது துணைவனாக இருந்து கொண்டான். சூதும், வஞ்சகமும் வென்றன. டில்லி சாம்ராஜ்ய வரலாற்றில் இவைகள் அப்போது சர்வசாதாரணமாக இருந்தது.

சுல்தான் கில்ஜியைக் கொன்றாகிவிட்டது. அடுத்ததாக அரசுக்கு உரிமை கொண்டாடும் அனைவரையும் கொன்று தீர்த்தான். அரச வம்சத்தார் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து தன்னை நன்கு நிலைநாட்டிக் கொண்டான். சிறையில் இருந்த கில்ஜியின் மகன்களின் கண்களை பனை நுங்கைத் தோண்டியெடுப்பது போல தோண்டி எடுக்கச் செய்தான். கில்ஜியின் ஆதரவாளர்களையெல்லாம் தேடித் தேடி களையெடுத்தான். இப்படி முன் ஜாக்கிரதையுடன் அரியணைக்கு உரியவர் எவரையும் உயிரோடு விட்டுவிடக்கூடாது என்று தேடித்தேடி அழித்த நேரத்தில் ராஜகுமாரன் முபாரக் என்பான் தப்பியோடி விட்டான். இறையுணர்வு மிக்கோர் நம்புவது “இறைவன் பெரியவன்”. இந்த அடிமை செய்த கொடுமைகளைக் கண்டு இறைவன் சும்மாயிருக்கவில்லை. இவன் கில்ஜியைக் கொன்ற முப்பத்தி ஆறாவது நாள் மாலிக்காபூரும் அவனுடன் இருந்த ஆதரவாளர்களும் பூண்டோடு கொல்லப்பட்டு விட்டனர். ஆம்! இறைவன் பெரியவன்.
இது எப்படி நடந்தது? தென் இந்தியாவை கொள்ளையிட்டு தூக்க முடியாத சுமைகளைத் தூக்கிக் கொண்டு டெல்லிக்குள் வந்தான் மாலிக்காபூர். அத்தனை செல்வங்களையும் தன் மனத்துக்குகந்த சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் பாதங்களில் சமர்ப்பித்தான். அவை அத்தனையும் தென்னாட்டுக் கோயில்களில் அடித்த கொள்ளை அல்லவா? அவை அவனை சும்மா விடுமா? அலாவுதீன் கில்ஜி விஷமிட்டுக் கொல்லப்பட்டான். பிறகு நடந்தவைகளைத்தான் பார்த்தோமே.

இவ்வளவுக்கும் பிறகு நாம் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு உண்மை என்ன தெரியுமா? அந்த மாலிக்காபூர் ஒரு சிறந்த ராணுவத் தலைவன். இவனுக்கு முன்னால் எந்த முஸ்லிம் ராணுவத் தலைவனும் செய்யாத காரியங்களை இவன் செய்து முடித்தான்; அளவற்ற செல்வங்களைக் கொள்ளையடித்தான்; மனசாட்சி யில்லாமல் இவனை ஆளாக்கியவர்களையே கொன்று குவித்தான், அதன் பலனை வெகு சீக்கிரமே இறைவனிடம் தண்டனையைப் பெற்றான். இவனைப் பின்பற்றித்தான் இவனுக்குப் பிறகு டில்லி ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்த பல தலைவர்களும் இவன் வழியைப் பின்பற்றி தென் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தனர். இவனை ஆளாக்கியவர்களை இவன் அழித்தான் அதற்கான தண்டனையையும் பெற்றான். ஊரையடித்து உலையில் போட்டுக்கொண்டு தன்னை உருவாக்கியவனையும் கொன்று தானும் மாண்டுபோன இந்த அடிமையைப் பற்றிய இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். கோஹினூர் வைரத்தை இவன்தான் தென்னக படையெடுப்பின் போது கொள்ளையடித்துக் கொண்டு வந்தான் என்றொரு செய்தியும் உண்டு. இப்படியாக சினிமாக் கதை வில்லனைப் போன்ற ஒருவனின் வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தோம். தமிழ் நாட்டில் இடித்துத் தகர்க்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு அந்த இடிபாடுகளிலிருன்து இன்னமும் மீளாமல் போன பல ஆலயங்கள் இந்த பாதகனை நினைத்துக் கொண்டு வேதனைப் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதோடு இவனது வரலாற்றை நிறைவு செய்வோம்.



















1 comment:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்