பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 9, 2015

ஹரிகதா விற்பன்னர் தஞ்சை டி.ஆர்.கமலா மூர்த்தி

                   

        ஹரிகதை என்றதும் தஞ்சை வாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் திருவையாறு அண்ணாசாமி பாகவதர். சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் புகழை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த நாகரத்தினம்மாளின் பிரதம சிஷ்ய பன்னிபாய் என்பவர் நெடுநாட்கள் தியாகராஜர் ஆராதனையின்போது ஹரிகதை செய்து கொண்டிருந்தவர். அண்ணாசாமி பாகவதரின் சீடர்களில் குறிப்பிடத் தகுந்தவர் தஞ்சை டி.ஆர்.கமலாமூர்த்தி அவர்கள். தனது முதிய வயதிலும் அந்தக் கலையை பலருக்கும் சொல்லிக் கொடுத்து, அவர்கள் புகழின் உச்சிக்குச் செல்வதைக் கண்டு மனமகிழ்ச்சியில் திளைத்திருப்பவர் திருமதி கமலாமூர்த்தி. அவருடைய சொந்த பேத்தி திருமதி சுசித்ரா இன்று இந்தக் கலையில் சிறந்து விளங்குவதையும் அவர் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

தஞ்சை டி.ஆர்.கமலாமூர்த்தி ஹரிகதையில் சிறந்து விளங்கிய காலத்தைப் பார்ப்பதற்கு முன்பு அவருடைய பிறப்பு, வளர்ப்பு பற்றியும் சிறிது பார்க்கலாம். சிதம்பரத்துக்கு அருகில் லட்சுமிகுடி எனும் சின்னஞ்சிறிய கிராமம். அங்கு வாழ்ந்த ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக 9-4-1932இல் பிறந்தவர் இவர். இவருக்குப் பிறகு தர்மசம்வர்த்தினி என்ற தங்கையும் நடராஜன் எனும் தம்பியும் இவருக்கு உண்டு. பிறந்தது சிறு கிராமம் என்பதால் இவர் இளம் வயதில் சிதம்பரத்தில் இருந்த தன் தாய்மாமன் இல்லத்தில் தங்கிப் படித்தார். இளம் வயதிலேயே நல்ல குரல் வளமும், இசை ஞானமும் இவருக்கு இருந்ததால் இவரை சிதம்பரத்தில் இருந்த ராஜா பாகவதர் என்பவரிடம் முதலில் ஹரிகதை கற்க அனுப்பப்பட்டார்.

ஹரிகதை என்பது மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் மராத்திய மாநிலத்திலிருந்து இங்கு வந்தது. அப்போதெல்லாம் ஹரிகதையை சொல்பவர் மேடையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டு கையில் சப்பளாக் கட்டையை வைத்துக் கொண்டு பாடி, ஆடி, கதை சொல்லும் வழக்கம் இருந்தது. இவருக்குப் பின்பாட்டுப் பாடுபவர்கள் பின்னால் நின்றுகொண்டு பாடியும் தாளங்கள் இசைத்துக் கொண்டும் இருப்பார்கள். இந்தக் கலை தஞ்சைக்கு வந்த பின் கிருஷ்ண ஐயர் என்பவரால் முறைப்படுத்தப்பட்டு இன்றைய பாணி வகுத்துத் தரப்பட்டது.

ஓரளவு ஹரிகதையைப் பாடவும், கதை சொல்லவும் தெரிந்த வயதில் கமலா முதன் முதலாக சிதம்பரத்தில் நடராஜ தீட்சிதர் என்பவரின் வீட்டில் "வத்சலா கல்யாணம்" எனும் தலைப்பில் ஹரிகதை செய்தார். சிதம்பரத்தில் இவருடைய குருவாக இருந்த ராஜா பாகவதர் காலமாகிவிட்ட படியால் மேலும் இவரால் இந்தக் கலையைக் கற்பதில் தடங்கல்கள் ஏற்பட்டன. சில மாதங்கள் கழிந்தபின் ராமச்சந்திர ஐயர் தன் மகள் கமலா உட்பட அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து தஞ்சையை அடுத்த திருவையாற்றில் வசிக்கத் தொடங்கினார். அவ்வூரின் மண்வாசனை கலைகளுக்கு உறைவிடமாக இருந்ததால் அங்கு இவரது இசை, ஹரிகதை பயிற்சியும் நன்கு நடைபெற்றது.

அப்போது திருவையாற்றில் ஹரிகதா விற்பன்னராக விளங்கிய அண்ணாசாமி பாகவதர் வசித்து வந்தார். அவரிடம் சென்று கமலா ஹரிகதை கற்கத் தொடங்கினார். குறிப்பாக இராமாயண காப்பியத்தையும், பெரிய புராண கதைகளையும் இவர் அண்ணாசாமி பாகவதரிடம் கற்றுக்கொண்டு சிறந்து விளங்கினார். இவருக்கு 1948இல் திருமணம் நடந்தது. கணவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. கணவரின் ஆதரவும் உதவியும் இவருக்கு இருந்ததால் ஹரிகதா கலையில் தடையின்றி கமலாவால் கவனம் செலுத்த முடிந்தது.

ஹரிகதை எனும் கலையில் பல்வேறு வரலாறுகள், கதைகள், அதன் நுணுக்கங்கள் இவைகளையெல்லாம் புகழ்பெற்ற ஹரிகதா கலைஞர் எம்பார் விஜயராகவாச்சாரியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கமலாவுக்குக் கிடைத்தது. அவரைப் போலவே தஞ்சையில் வாழ்ந்த தலைசிறந்த எழுத்தாளரும் அறிஞருமான சுவாமிநாத ஆத்ரேயர், என்.வி.வெங்கடசுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆகியோரிடமும் இந்தக் கலை சம்பந்தமான பல அரிய வழிகாட்டுதல்களை கமலா பெற்று வளர்ந்தார்.

நல்ல குரல் வளமும், இசையில் நல்ல தேர்ச்சியும் இருந்ததால் கமலாவால் ஹரிகதையில் நல்ல சங்கீதத்தைக் கொடுக்க முடிந்தது. இசை நடுவினில் சுவாரசியமான புராண, இதிகாச கதைகளை இவர் சொல்லும்போது அவற்றை நேரில் பார்த்து ரசிப்பது போன்ற உணர்வு கேட்போருக்கு ஏற்படும் விதமாக அமைந்திருக்கும் அவருடைய கதை சொல்லும் பாணி. வீட்டில் ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசுவது போன்ற சொல் நடை இருந்ததால், குறிப்பாக பெண்கள் இவர் கதைகளை விரும்பிக் கேட்கத் துவங்கினார்கள். ஒரு ராகத்தைத் துவங்கும் போதே அந்த ராகத்தின் லட்சணங்கள் வெளிப்படும் வகையில் அவர் பாடுவதும், அவர் இசையின் மேன்மையும் கேட்போர் மனங்களை அதில் ஈடுபட வைத்துவிடும். இவருடைய குருநாதர் அண்ணாசாமி பாகவதரின் லாவகமும், இசை லட்சணமும் சிஷ்யையான இவருக்கும் அப்படியே வந்துவிட்டதாகவே கேட்பவர்கள் நினைத்தார்கள்.

பின்பாட்டுக்கென்று தனியாக யாரையும் இவர் வைத்துக் கொள்ளாவிட்டாலும், தனக்கு ஆர்மோனிய வாத்தியத்தை வாசிக்க கலைஞர்களை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இவருக்கு மிருந்தங்கம் வாசிப்பவர்கள் பலரும் தஞ்சைக் கலைஞர்கள். குருவப்பா, ஜனார்தனன், மகர்நோம்புச்சாவடி சம்பங்கி கோபால பாகவதர், தஞ்சை என்.ராஜம் ஐயர் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழ்நாடு அரசின் "கலைமாமணி" விருது, 1978இல் சென்னை சங்கீத வித்வத்சபையின் டி.டி.கே.விருது, 1996இல் ஒரு விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். இவருக்கு மேலும் சில விருதுகள் கிடைத்தன. அவை "ஸங்கீதாம்ருதவர்ஷிணி", "ஹரிகதாவாணி", "ஸம்ப்ரதாய ரத்னா" ஆகியவை குறிப்பிடத் தக்கவை. 2001இல் புது டெல்லி சங்கீத நாடக அகாதமி இவருக்கு விருது அளித்து கெளரவித்திருக்கிறது.

இவருடைய பெயரைச் சொல்ல இன்று இளம் தலைமுறையினரில் பலர் இவருடைய பாதையில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களும் இவரைப் போலவே சிறந்த கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள். அவர்களும் இவரைப் போல தலை சிறந்த கலைஞர்களாக வர இறைவன் அருள் புரிவாராக.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அம்மையாரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். தங்களின் பதிவு மூலமாக பல அரிய செய்திகளை அறிந்தேன். நன்றி.