மகாகவி பாரதியாரின் வசனை கவிதை
இரண்டாம் கிளை – புகழ்
2.
சக்தி
1
|
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது. சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, உதறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது, ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது. சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது, குதூஹலந் தருவது, நோவு தருவது, நோவு தீர்ப்பது, இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது, சோர்வு தருவது, ஊக்கந்தருவது, எழுச்சி தருவது, கிளர்ச்சிதருவது, மலர்விப்பது, புளகஞ்செய்வது, கொல்வது, உயிர்தருவது. சக்தி மகிழ்ச்சி தருவது, சினந்தருவது, வெறுப்புத் தருவது, உவப்புத் தருவது, பகைமை தருவது, காதல் மூட்டுவது, உறுதி தருவது, அச்சந் தருவது, கொதிப்புத் தருவது, ஆற்றுவது. சக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது. சக்தி நினைப்பது, ஆராய்வது, கணிப்பது, தீர்மானஞ் செய்வது, கனாக்காண்பது, கற்பனைபுரிவது, தேடுவது, சுழல்வது, பற்றிநிற்பது, எண்ணமிடுவது, பகுத்தறிவது, சக்தி மயக்கந்தருவது, தெளிவுதருவது. சக்தி உணர்வது. பிரமன் மகள், கண்ணன் தங்கை, சிவன் மனைவி. கண்ணன் மனைவி, சிவன் மகள், பிரமன் தங்கை. பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய். சக்தி முதற்பொருள். பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு. சக்திக்கடலிலே ஞாயிறு ஓர் நுரை; சக்திவீணையிலே ஞாயிறு ஒருவீடு; ஒரு ஸ்வரஸ்தானம். சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம். சக்தியின் கலைகளிலே ஒளி யொன்று. சக்தி வாழ்க. |
2
|
|||||||||||||||
காக்கை கத்துகிறது. ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிரவொளியாகிய நீர் பாய்ச்சுகிறது. அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன. அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது. மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது,
மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன.
கோழி கூவுகின்றது. எறும்பு ஊர்ந்து செல்கின்றது. ஈ பறக்கின்றது. இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான். இவையனைத்தும் மஹாசக்தியின் தொழில். அவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக. நமக்குச் செய்கை, இயல்பாகுக. ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும் செய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை, நமக்கு மஹாசக்தி அருள் செய்க. கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல், மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் -- இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக. அன்புநீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது, சாத்திரக் களைபோக்கி, வேதப் பயிர்செய்து, இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம். அதனை அவள் தருக.
|
No comments:
Post a Comment