பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 15, 2015

பாரதியாரின் வசன கவிதை - 2

                             

                                 மகாகவி பாரதியாரின் வசன கவிதை
                                                     இரண்டாம் கிளை – புகழ்
                                                                 ஞாயிறு
                                                                      1
            ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?
            வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது?
            மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது?
            உயிர் எவன் தருகின்றான்?
            புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக் குரியது?
            அறிவு எதுபோல் சுடரும்?
            அறிவுத் தெய்வத்தின் கோயில் எது?
            ஞாயிறு,
            அது நன்று.

                                                                        2
            நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி,
            மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து –
            இவை யெல்லாம் நினது நிகழ்ச்சி.
            கண் நினது வீடு.
            புகழ், வீரம் – இவை நினது லீலை.
            அறிவு நின் குறி; அறிவின் குறி நீ.
            நீ சுடுகின்றாய், வாழ்க நீ காட்டுகின்றாய், வாழ்க –
            உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்
            வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,
            நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க!

                                                                        3

            வைகறையின் செம்மை இனிது.
            மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.
            உஷையை நாங்கள் தொழுகின்றோம்.
            அவள் திரு.
            அவள் விழிப்புத் தருகின்றாள், தெளிவு தருகின்றாள்.
            உயிர் தருகின்றாள், ஊக்கந் தருகின்றாள்.
            அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள்.
            அவள் அமுதம்.
            அவள் இறப்ப தில்லை.
            வலிமையுடன் கலக்கின்றாள்.
            வலிமைதான் அழகுடன் கலக்கும்.
            இனிமை மிகவும் பெரியது.
            வட மேருவிலே பலவாகத் தொடர்ந்து வருவாள்.
            வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.
            அவளுடைய நகைப்புகள் வாழ்க!
            தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள், அன்பு
            மிகுதியால்
            ஒன்று பலவினும் இனிதன்றோ?
            வைகறை நன்று. அதனை வாழ்த்து கின்றோம்.

                                                            4

            நீ சுடுகின்றாய், நீ வருத்தந் தருகின்றாய்,
            நீ விடாய் தருகின்றாய், சோர்வு தருகின்றாய்,
            பசி தருகின்றாய்,
            இவை இனியன.
            நீ கடல்நீரை வற்றடிக்கிறாய், இனிய மழை தருகின்றாய்.
            வான வெளியிலே விளக்கேற்றுகிறாய்.
            இருளைத் தின்று விடுகின்றாய்.
            நீ வாழ்க!

                                                            5

            ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?
            ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?
            கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால்
            மறைத்து விட்டாயா?
            இருள் நினக்குப் பகையா?
            இருள் நின் உணவுப் பொருளா?
            அது நின் காதலியா?
            இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால்
            இருண்டிருந்ததா?
            நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு
            நின்னைக் கலந்து விட்டதா?
            நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழன்தைகளா?
            முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி
            உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?
            உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா?
            ஞாயிறே, உன்னைப் புகழ்கின்றேன்.

                                                            6

            ஒளியே, நீ யார்?
            ஞாயிற்றின் மகளா?
            அன்று.  நீ ஞாயிற்றின் உயிர், அதன் தெய்வம்.
            ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம்.
            ஞாயிற்றின் வடிவம் உடல்; நீ உயிர்.
            ஒளியே, நீ எப்போது தோன்றினாய்?
            நின்னை யாவர் படைத்தனர்?
            ஒளியே, நீ யார்?
            உனதியல்பு யாது?
            நீ அறிவின் மகள் போலும்; அறிவுதான் தூங்கிக் கிடக்கும்.
            தெளிவு நீ போலும்.
            அறிவின் உடல் போலும்.
            ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாட்பழக்கம்?
            உனக்கு அதனிடத்தே எவ்வகைப்பட்ட அன்பு யாது
            பற்றியது?
            அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்?
            உங்களை யெல்லாம் படைத்தவள் வித்தைக்காரி.
            அவள் மோஹினி, மாயக்காரி.
            அவளைத் தொழுகின்றோம்.
            ஒளியே வாழ்க!

                                                            7

            ஞாயிறே நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது?
            நீ அதனை உமிழ்கின்றாயா?
            அது நின்னைத் தின்னுகிறதா?
            அன்றி, ஒளி தவிர நீ வேறொன்று மில்லையா?
            விளக்குத் திரி காற்றாகிச் சுடர் தருகின்றது.
            காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு?
            காற்றின் வடிவே திரியென் றறிவோம்.
            ஒளியின் வடிவே காற்றுப் போலும்.
            ஒளியே நீ இனியை.

                                                            8

            ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு?
            வெம்மை யேற ஒளி தோன்றும்.
            வெம்மையைத் தொழுகின்றோம்.
            வெம்மை ஒளியின் தாய், ஒளியின் முன்னுருவம்.
            வெம்மையே!  நீ தீ!
            நீதான் வீரத் தெய்வம்..
            தீ தான் ஞாயிறு.
            தீயின் இயல்பே ஒளி!
            தீ எரிக.
            அதனிடத்தே நெய் பொழிகின்றோம்.
            தீ எரிக.
            அதனிடத்தே தசை பொழிகின்றோம்.
            தீ எரிக.
            அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம்.
            தீ எரிக.
            அதற்கு வேள்வி செய்கின்றோம்.
            தீ எரிக.
            அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ –
            இவை யனைத்தையும் தொழுகின்றோம்.
            இவற்றைக் காக்கின்றோம்.
            இவற்றை ஆளுகின்றோம்.
            தீயே, நீ எமது உயிரின் தோழன்.
            உன்னை வாழ்த்துகின்றோம்.
            நின்னைப்போல் எமதுயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக!
            தீயே, நின்னைப்போல, எமதறிவு கனலுக.
            ஞாயிற்றினிடத்தே, தீயே நின்னைத்தான் போற்று கின்றோம்.
            ஞாயிற்றுத் தெய்வமே, நின்னைப் புகழ்கின்றோம்.
            நினதோளி நன்று, நின் செயல் நன்று, நீ நன்று.

                                            (காட்சி 2 மேலும் தொடரும்)
           
           
           


No comments: