கரூரில் கோயில் கொண்டருளும் அருள்மிகு ஆநிலையப்பர் எனும் பசுபதீஸ்வரருக்கு நாளது அக்டோபர் 26, ஐம்பசி திங்கட்கிழமையன்று அன்னாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. அன்னாபிஷேகம் என்றால் என்ன, சிவாலயங்களில் ஏன் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்பது போன்ற விவரங்களை கீழே காணும் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. அன்னாபிஷேகத்தன்று சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து சிவபெருமான் பிரசாதத்தைப் பெற்றுச் செல்லுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்னாபிஷேகம்
வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக
கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி.
உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும்
எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி
தருகின்றாள்.
அந்த இறைவனின்
அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள்,
ஐப்பசி பௌர்ணமி நாள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா
தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது
பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம்
செய்யப்படுகின்றது.
பௌர்ணமியன்று
சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த
கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து
சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
சிவன் பிம்பரூபி,
அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம்
திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக்
கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது
உண்மை.
தில்லையிலே
அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ஸ்படிக லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று
அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை
அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப்
பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே
அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
அன்னாபிஷேகத்தன்று
எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம்,
எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். சிவன்
அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான்
சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
ஆலய வழிபாட்டில்
மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை
வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால்
வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து
வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
சிவன் பரம்பொருள்,
அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால்
ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது
இயற்கைதானே.
ஆகாயத்தில்
பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது.
அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின்
சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி
அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே
அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
அன்னாபிஷேகம்
செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது
ஐதீகம்.
இனி அன்னாபிஷேகம்
எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போம். ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு
அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம்
முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது. சாயரட்சை
பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை
6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான்.
இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது.
பொதுவாக
அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின்
மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து
பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது.
எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால்
இவ்விதம் செய்யப்படுகின்றது.
சர்வ சிவாலயங்களிலும்
அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின்
நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை
பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும்
இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால்
( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம்
தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை
வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக
வழங்குகின்றனர் .
அத்தனை அன்னமும்
பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம்
கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது
சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக
மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும்
பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
பொதுவாக
அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம். ஆனால்
பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம்
செய்கின்றனர். சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள்,
பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர். காஞ்சியில் காமாக்ஷ’யம்மன்
ஆலயத்தில்
அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
என்று நாம்
வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது,
அந்த சர்வேஸ்வரனை
அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை
கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி
செய்து நன்மையடைவோமாக.