பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 27, 2012

தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் ரயில் பயண அனுபவம்.

(மகாத்மாவின் "சத்திய சோதனை"யிலிருந்து)

"நான் டர்பன் சேர்ந்த ஏழாவது அல்லது எட்டாவது நாள் அங்கிருந்து புறப்பட்டேன். எனக்கு ரெயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கப்பட்டிருந்தது. இரவில் படுக்கையும் வேண்டும் என்றால் அதற்காகத் தனியாக ஐந்து ஷில்லிங் கொடுத்துச் சீட்டுப் பெறுவது அங்கிருந்த வழக்கம். எனக்கு படுக்கை சீட்டும் வாங்கிவிட வேண்டும் என்று அப்துல்லா சேத் வற்புறுத்தினார். ஆனால் பிடிவாதத்தினாலும், கர்வத்தினாலும் ஐந்து ஷில்லிங் மிச்சப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தினாலும் அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

"இந்த நாடு இந்தியா அல்ல என்பதைக் கவனத்தில் வையுங்கள். எங்களுக்கு போதிய செல்வத்தை ஆண்டவன் அளித்திருக்கிறார். செலவு செய்யவும் முடியும். உங்களுடைய தேவைக்குச் செலவு செய்து கொள்ளுவதில் தயவு செய்து வீண் சிக்கனம் பிடிக்க வேண்டாம்" என்று சேத் எச்சரிக்கை செய்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன், "என்னைப்பற்றிக் கவலைப் படவேண்டாம்" என்றேன்.

நான் சென்ற ரயில், இரவு 9 மணிக்கு நேட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் போய்ச் சேர்ந்தது. அந்த ஸ்டேஷனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஒரு ரெயில்வே சிப்பந்தி வந்து எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார். "வேண்டாம்; என் படுக்கை இருக்கிறது" என்றேன். அவர் போய்விட்டார். ஆனால் ஒரு பிரயாணி அங்கே வந்து என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். நான் 'கருப்பு மனிதன்' என்பதை அறிந்ததும் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது வேறு ஒரு அதிகாரி என்னிடம் வந்து, "இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும்" என்றார்.

"என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே" என்றேன்.

"அதைப்பற்றி அக்கறையில்லை. நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்" என்றார்.

"நான் உமக்குச் சொல்லுகிறேன். இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்" என்றேன்.

"இல்லை நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர் இறங்கிவிட வேண்டும். இல்லையானால் உம்மைக் கீழே தள்ளப் போலீஸ்காரனை அழைக்க வேண்டி வரும்" என்றார்.

"அழைத்துக் கொள்ளும், நானாக இவ் வண்டியிலிருந்து இறங்க மறுக்கிறேன்" என்று சொன்னேன்.

போலீஸ்காரர் வந்தார். கையைப் பிடித்து இழுத்து என்னை வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்குப் போட்டுவிட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது. போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு, கைப்பையை மாத்திரம் என்னுடன் வைத்துக் கொண்டு, பிரயாணிகள் தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன். சாமான்கள், ரெயில்வே அதிகாரிகள் வசம் இருந்தன.

அப்பொழுது குளிர்காலம். தென்னாப்பிரிக்காவில் உயரமான பகுதிகளில் குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க் உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக் கடுமையாக இருந்தது. என் மேல் அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது. அதை ரயில்வே அதிகாரிகளிடம் போய்க் கேட்க நான் துணியவில்லை. கேட்டால் திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அந்த அறையில் விளக்கும் இல்லை. நடுநிசியில் ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.

என் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காக போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா? இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய் வழக்கை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறைவேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது; நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும். நிறத் துவேஷத்தைப் போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன். மறுநாள் காலையில் ரயில்வே ஜெனரல் மேனேஜருக்கு நீண்ட தந்தி ஒன்று கொடுத்தேன்; அப்துல்லா சேத்துக்கும் அறிவித்தேன். அவர் உடனே ஜெனரல் மேனேஜரைப் போய்ப் பார்த்தார். அவரோ ரயில்வே அதிகாரிகள் செய்தது சரியே என்றார். ஆனால் நான் சேரவேண்டிய இடத்திற்குப் பத்திரமாகப் போய்ச்சேரப் பார்க்குமாறு தாம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு அறிவித்து விட்டதாக அப்துல்லா சேத்திடம் கூறினார். என்னைச் சந்தித்து எனக்கு வேண்டியதைச் செய்யுமாறு மாரிட்ஸ்பர்க்கிலும் மற்ற இடங்களிலும் இருந்த இந்திய வர்த்தகர்களுக்கு அப்துல்லா சேத் தந்திகள் கொடுத்தார். வர்த்தகர்கள் என்னைப் பார்க்க ஸ்டேஷனுக்கு வந்தார்கள். தாங்கள் அனுபவித்திருக்கும் கஷ்டங்களை எல்லாம் சொன்னார்கள். எனக்கு நேர்ந்தது சர்வ சாதாரணமான அனுபவம்தான் என்று கூறி, எனக்கு ஆறுதல் அளிக்க முயன்றார்கள். முதல் வகுப்பிலும், இரண்டாம் வகுப்பிலும் பிரயாணம் செய்யும் இந்தியர்கள், ரயில்வே அதிகாரிகளிடமிருந்தும் வெள்ளையரிடமிருந்தும் தொல்லையை எதிர்பார்க்கவே நேரும் என்றார்கள். இவ்விதம் துன்பக் கதைகளைக் கேட்பதிலேயே அன்று பொழுது போயிற்று. மாலை வண்டியும் வந்தது. எனக்காக ஏற்பாடு செய்திருந்த இடம் அதில் இருந்தது. டர்பனில் நான் வாங்க மறுத்த படுக்கைச் சீட்டை மாரிட்ஸ்பர்க்கில் வாங்கிக் கொண்டேன். ரயிலும் என்னைச் சார்லஸ் டவுனுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது."

நன்றி: "சத்திய சோதனை" மகாத்மா காந்தி.

1 comment:

Unknown said...

///நிறத் துவேஷத்தைப் போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.///

இந்த வரிகளில் மகாத்மா குறிப்பிட்டதை என்னால் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. தவறுகளுக்கு பரிகாரம்??!!

///என் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காக போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா? இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய் வழக்கை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறைவேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது; நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும். ///

வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள் ஒரு சிறந்த மனிதனை எப்படிப் பாதிக்கிறது!!! அதுவே அந்த மனிதரை எப்படி மகனாக்குகிறது.!!!
மகாத்மாவின் இதயமும் சிந்தனையும் (அறிவும்) ஒன்றாய் இயங்கியதோடு, அவரின் தெளிந்த சிந்தனையும் தூரப் பார்வையும் அவருக்கு தர்மம் கொடுத்த செயலாற்றும் தன்மையும் எத்தகையது என்பதையும், சத்தியத்திற்கு எத்தனை சோதனை வந்தாலும் அது தர்மத்தின் துணை கொண்டு அகிம்சைஎன்னும் ஆயுதம் கொண்டு போராடும் பொது வெற்றி நிச்சயம் என்ற அவரின் அதீத நம்பிக்கை உலகிற்கேப் புது வழி காண்பித்து இருக்கிறது.

தசாவதாரங்களும் சொல்லாத புது நெறியைப் புகுத்தி உலகத்தையே அகிம்சை பாதைக்குத் திருப்பிய கலியுக மகா புருஷர் என்றால் அது மிகையாகாது.

வாழ்க வளர்க மகாத்மாவின் புகழும், அவர் தம் கொள்கையும்.

நன்றிகள் ஐயா!