பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 29, 2012

உயிர்ப்பலி குறித்து காந்திஜி


"கல்கத்தா நகரில் நான் தங்கியிருந்த நாட்களில் தெருக்களில் இங்கும் அங்குமாகத் திரிந்து கொண்டிருந்தேன். அனேக இடங்களுக்கு நடந்தே போய்வருவேன். எனது தென்னாப்பிரிக்காவின் வேலைக்கு நீதிபதி மித்தர், சர் குருதாஸ் பானர்ஜி ஆகியவர்களின் உதவி எனக்கு வேண்டியிருந்தது. அவர்களைப் போய்ப் பார்த்தேன். அதே சமயத்தில் ஸர் பியாரி மோகன் முகர்ஜியையும் சந்தித்தேன்.

காளி கோயிலைப் பற்றிக் காளி சரண் பானர்ஜி என்னுடம் கூறினார். முக்கியமாக, புத்தகங்களிலும் அதைக் குறித்து நான் படித்திருந்ததால் அதைப் பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆகவே, ஒரு நாள் அங்கே போனேன். அதே பகுதியில்தான் நீதிபதி மித்தரின் வீடும் இருந்தது. எனவே நான் அவரைப் போய்ப் பார்த்த அன்றே காளி கோயிலுக்கும் போனேன். காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஆடுகள், மந்தை மந்தையாகப் போய்க் கொண்டிருப்பதை வழியில் பார்த்தேன்.

கோயிலுக்குப் போகும் சந்தின் இரு பக்கங்களிலும் வரிசையாகப் பிச்சைக்காரர்கள் இருந்தனர். அவர்களில் சில சாதுக்களும் இருந்தனர். உடல் வலுவுடன் இருக்கும் யாசகர்களுக்குப் பிச்சை போடுவதில்லை என்ற கொள்கையில் நான் அந்த நாளிலேயே உறுதியுடன் இருந்தேன். அவர்களில் ஒரு கூட்டம் என்னை விரட்டிக் கொண்டு வந்தது. சாதுக்களில் ஒருவர் ஒரு தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னை நிறுத்தி "தம்பி! நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டார்.

நான் கோயிலுக்குப் போகிறேன் என்றதும், என்னையும் என்னுடன் வந்தவரையும் உட்காரும்படி சொன்னார். அப்படியே உட்கார்ந்தோம்.

"இந்த உயிர்ப்பலியை மதம் என்று நீங்கள் கருதுகிறீர்களா" என்று கேட்டேன்.

"மிருகங்களைக் கொல்லுவதை மதம் என்று யாராவது கருதுவார்களா? என்றார் அவர்.

"அப்படியானால், அதை எதிர்த்து நீங்கள் ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது?"

"அது என் வேலை அல்ல. கடவுளை வழிபடுவதே நமது வேலை"

"கடவுளை வழிபடுவதற்கு உங்களுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?"

"எங்களுக்கு எல்லா இடமும் நல்ல இடம்தான். மக்கள் ஆடுகளைப் போலத் தலைவர்கள் இட்டுச் செல்லும் இடங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர், சாதுக்களாகிய எங்கள் வேலை அதுவன்று."

இந்த விவாதத்தை நாங்கள் வளர்த்துக் கொண்டிருக்கவில்லை. கோயிலுக்குப் போனோம். அங்கே நிற்கவே என்னால் முடியவில்லை. நான் ஆத்திரமடைந்தேன்; அமைதியை இழந்துவிட்டேன். அந்தக் காட்சியை என்றும் நான் மறக்கவே இல்லை.

அன்று மாலையே சில வங்காளி நண்பர்கள் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே ஒரு நண்பரிடம், இந்தக் கொடூரமான வழிபாட்டு முறையைக் குறித்துச் சொன்னேன். அதற்கு அவர் கூறியதாவது, "ஆடுகளுக்குத் துன்பமே தெரியாது. பேரிகை முழக்கமும் மற்ற சத்தங்களும் அவைகளுக்கு துன்ப உணர்ச்சியே இல்லாதபடி செய்து விடுகின்றன."

இதை ஒப்புக் கொள்ள என்னால் முடியவில்லை. "ஆடுகளுக்கு வாய் இருந்தால் அவை வேறு கதையைச் சொல்லும்" என்றேன். அந்தக் கொடூரமான பழக்கம் நின்றாக வேண்டும் என்றும் எண்ணினேன். புத்தரின் கதையை நினைத்தேன். ஆனால், இவ்வேலை என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதையும் கண்டேன்.

அன்று எனக்கு இருந்த அபிப்பிராயமே இன்றும் இருக்கிறது. மனிதனுடைய உயிரைவிட ஓர் ஆட்டுக் குட்டியின் உயிர் எந்த வகையிலும் குறைவானதாக எனக்குத் தோன்றவில்லை. மனித உடலுக்கு ஓர் ஆட்டின் உயிரைப் போக்குவதற்கு நான் உடன்படக்கூடாது. ஒரு பிராணி எவ்வளவுக் கெவ்வளவு ஆதரவற்றதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது மனிதனின் கொடுமையிலிருந்து காக்கப்படுவதற்கு உரிமைப் பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன். அத்தகைய சேவையைச் செய்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளாதவர், அதற்கு எவ்விதப் பாதுகாப்பையும் அளித்துவிட முடியாது.

'அக்கிரமமாக பலியிடப்படுவதிலிருந்து இந்த ஆடுகளைக் காப்பாற்றிவிடலாம்' என்று நான் நம்புவதற்கு முன்னால் நான் அதிக சுயத் தூய்மையையும் தியாக உணர்ச்சியையும் அடைந்தாக வேண்டும். 'இந்தத் தூய்மையையும், தியாகத்தையும் அடையப் பாடுபடுவதில் நான் உயிர் துறக்க வேண்டும்' என்று இன்று எண்ணுகிறேன். இத்தகைய கோரமான பாவத்திலிருந்து நம்மை விடுவித்து, கோயிலையும் புனிதப்படுத்துவதற்கு தெய்வீகக் கருணையுடன் கூடிய ஒரு பெரிய ஆத்மா, ஆணாகவோ, பெண்ணாகவோ, இப்புவியில் பிறக்க வேண்டும் என்பதே என்னுடைய இடைவிடாத பிரார்த்தனை. எவ்வளவோ அறிவும், தியாகமும், உணர்ச்சி வேகமும் கொண்ட வங்காளம், இப்படுகொலைகளை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது?".

மகாத்மா காந்தி "சத்திய சோதனையில்"

3 comments:

 1. தொடர் காந்திய செய்திகள் படிக்கும் போது , அவர் கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கும் தற்போதைய நாட்டில் அவர் மீண்டும் பிறந்து வந்து வாங்கித்தந்த சுதந்திர நாட்டை பார்த்தால் என்ன வேதனை படுவார். என்றே தோறுகிறது.

  கடந்த நான்கைந்து நாட்களாக காந்திய நினைவை வழங்கிய அய்யா அவர்களுக்கு நன்றிகள் .

  ReplyDelete
 2. எவ்வளவோ செய்தற்கரிய செயல்களைச் செய்த இந்த மகாத்மாவின் வேண்டுதலும், விருப்பமும் ஒருப் பெரிய ஆத்மா ஓன்று (ஆணோ அல்லது பெண்ணோ) இப்புவியில் பிறக்க வேண்டும் அப்படி பிறக்க வேண்டிய எனது வேண்டுதல் நிறைவேற நான் தூய்மையும், தியாகமும் பெற வேண்டும் அப்படி அதை அடைய அதற்கு நான் எனது உயிரைக் கூட பரிசாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்.

  தனது உயிரைத் தருகிறேன் என்று ஒரு விருப்பத்தை கூறுகிறார் என்றால் அவரின் எண்ணத்திலே, சிந்தையிலே உதித்த அந்த விருப்பம் தனது உயிரினிலும் மேலானதாக கருதியதால் தானே!
  அதனால் அவர் மகாத்மா ஆனார்!

  அண்ணலே எங்கள் ஆருயிரே!
  ஆன்மீகச் செம்மலே அனைத்துயிரும்
  இன்பம் பெறவேண்டிய; உமக்கு
  ஈடிணையில்லை, கருணைப் பெருங்கடலே!
  உண்மையான வாழ்வதை வாழ்ந்து
  ஊருக்கு உழைத்த உத்தமரே!

  எளிமையின் சிகரமான நீவீரே!
  ஏழைகளின் வாழ்விற்கு ஒளிவிளக்கே!
  ஐம்புலனும் அடக்கி அண்டம்படைத்த
  ஒப்பில்லானை ஒருபோதும் மறவாது
  ஓதியுணர்வாயுனை அதுவே மனிதவாழ்வின்
  ஒளடதமான உண்மை பேறு
  அஃதே உயிரின் லட்சியமென்றும்...

  கல்லாமை, களவு கொல்லாமை
  கடுஞ்சொல் சொல்லாமை
  பொல்லாத மது கொள்ளாமை
  பொய்யரை புண்பட வையாமை
  புலையரோடு போல்லாதவரையும்
  போருக்கு வரும் மூர்க்கரையும் வெஃகாமை...

  தீண்டாமை வேண்டாமே அத்தீதுறு
  தீயினும் கொடியதே அதை
  தெய்வமும் மன்னிக்காது அதனாலே
  அரியின் புதல்வர்கள் அவரே
  நமது சகோதரர்கள் என்றெண்ணி
  சரிநிகர் சமானமாய் வாழ்வதே
  சரியான வாழும்முறை யென்றே
  வாழும் யாவருக்கும் பறைசாற்றி
  வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தீரே!

  எதிரி என்பதேது அஹிம்சைக்கு
  இரங்கா இதயமது ஏது?
  உண்மை ஒருபோதும் சாகாது அதனாலே
  உண்மைக்காக உண்மையாய் உறுதியோடு
  உழைப்பீரே என்றே உலகம்
  உய்ய உயர்வழி கூரிய
  உத்தமரே உமது உன்னத
  கொள்கையை உலகம் மறந்திடுமோ?
  இனியும் அணுவாயுதம் வேண்டிடுமோ?

  எறும்புக்கும் இரங்கிய ஏந்தலே!
  உந்தன் இதயம் துளைத்த
  அந்த குண்டும் அல்லவா
  கதறி அழுது இருக்கும்...
  ஆட்டுக்கு பரிந்துப்பேசிய ஐயரே!
  ஐயகோ உம்மையும் காவுகொடுக்க
  எத்தனைக் கொடிய மனமிருக்கணும்?

  மகாத்மாவே உம்மைத் தாங்கிய
  அந்த உடலிலிருந்து சிதறிய
  ஒவ்வொரு துளி குருதியும்
  ஒவ்வொரு மகாத்மாவாக இப்புவியில்
  அவதரிக்காதோ என்ற நம்பிக்கையிலே
  உமது பிறந்தநாளை இங்கே
  உலக அகிம்சை தினமாக
  கொண்டாடும் எங்களை ஆசீர்வதிப்பீர்!

  இந்த அண்டம் உள்ளவரை
  அண்ணலே உமது நினைவும்
  அவதார நோக்கமான அஹிம்சையும்
  எங்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும்.

  அண்ணலின் நினைவைப் பகிர வாய்ப்பளித்த தங்களுக்கு
  நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 3. எவ்வளவோ செய்தற்கரிய செயல்களைச் செய்த இந்த மகாத்மாவின் வேண்டுதலும், விருப்பமும் ஒருப் பெரிய ஆத்மா ஓன்று (ஆணோ அல்லது பெண்ணோ) இப்புவியில் பிறக்க வேண்டும் அப்படி பிறக்க வேண்டிய எனது வேண்டுதல் நிறைவேற நான் தூய்மையும், தியாகமும் பெற வேண்டும் அப்படி அதை அடைய அதற்கு நான் எனது உயிரைக் கூட பரிசாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்.

  தனது உயிரைத் தருகிறேன் என்று ஒரு விருப்பத்தை கூறுகிறார் என்றால் அவரின் எண்ணத்திலே, சிந்தையிலே உதித்த அந்த விருப்பம் தனது உயிரினிலும் மேலானதாக கருதியதால் தானே!
  அதனால் அவர் மகாத்மா ஆனார்!

  அண்ணலே எங்கள் ஆருயிரே!
  ஆன்மீகச் செம்மலே அனைத்துயிரும்
  இன்பம் பெறவேண்டிய; உமக்கு
  ஈடிணையில்லை, கருணைப் பெருங்கடலே!
  உண்மையான வாழ்வதை வாழ்ந்து
  ஊருக்கு உழைத்த உத்தமரே!

  எளிமையின் சிகரமான நீவீரே!
  ஏழைகளின் வாழ்விற்கு ஒளிவிளக்கே!
  ஐம்புலனும் அடக்கி அண்டம்படைத்த
  ஒப்பில்லானை ஒருபோதும் மறவாது
  ஓதியுணர்வாயுனை அதுவே மனிதவாழ்வின்
  ஒளடதமான உண்மை பேறு
  அஃதே உயிரின் லட்சியமென்றும்...

  கல்லாமை, களவு கொல்லாமை
  கடுஞ்சொல் சொல்லாமை
  பொல்லாத மது கொள்ளாமை
  பொய்யரை புண்பட வையாமை
  புலையரோடு போல்லாதவரையும்
  போருக்கு வரும் மூர்க்கரையும் வெஃகாமை...

  தீண்டாமை வேண்டாமே அத்தீதுறு
  தீயினும் கொடியதே அதை
  தெய்வமும் மன்னிக்காது அதனாலே
  அரியின் புதல்வர்கள் அவரே
  நமது சகோதரர்கள் என்றெண்ணி
  சரிநிகர் சமானமாய் வாழ்வதே
  சரியான வாழும்முறை யென்றே
  வாழும் யாவருக்கும் பறைசாற்றி
  வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தீரே!

  எதிரி என்பதேது அஹிம்சைக்கு
  இரங்கா இதயமது ஏது?
  உண்மை ஒருபோதும் சாகாது அதனாலே
  உண்மைக்காக உண்மையாய் உறுதியோடு
  உழைப்பீரே என்றே உலகம்
  உய்ய உயர்வழி கூரிய
  உத்தமரே உமது உன்னத
  கொள்கையை உலகம் மறந்திடுமோ?
  இனியும் அணுவாயுதம் வேண்டிடுமோ?

  எறும்புக்கும் இரங்கிய ஏந்தலே!
  உந்தன் இதயம் துளைத்த
  அந்த குண்டும் அல்லவா
  கதறி அழுது இருக்கும்...
  ஆட்டுக்கு பரிந்துப்பேசிய ஐயரே!
  ஐயகோ உம்மையும் காவுகொடுக்க
  எத்தனைக் கொடிய மனமிருக்கணும்?

  மகாத்மாவே உம்மைத் தாங்கிய
  அந்த உடலிலிருந்து சிதறிய
  ஒவ்வொரு துளி குருதியும்
  ஒவ்வொரு மகாத்மாவாக இப்புவியில்
  அவதரிக்காதோ என்ற நம்பிக்கையிலே
  உமது பிறந்தநாளை இங்கே
  உலக அகிம்சை தினமாக
  கொண்டாடும் எங்களை ஆசீர்வதிப்பீர்!

  இந்த அண்டம் உள்ளவரை
  அண்ணலே உமது நினைவும்
  அவதார நோக்கமான அஹிம்சையும்
  எங்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும்.

  அண்ணலின் நினைவைப் பகிர வாய்ப்பளித்த தங்களுக்கு
  நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here