பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 18, 2012

அடால்ஃப் ஈச்மன்


                       நாஜி அரக்கன் அடால்ஃப் ஈச்மன்

இந்தப் பெயரை எங்கோ கேட்டதாக நினைவிருக்கிறதா? 1960களில் அர்ஜென்டைனா நாட்டில் பெயரை மாற்றிக் கொண்டு, அந்த நாட்டின் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜெர்மானிய நாஜி யுத்த குற்றவாளி இந்த ஈச்மன் என்கிற அடால்ஃப் ஈச்மன். இவனைப் பற்றி இப்போது என்ன? மனிதகுல வரலாற்றில் ஈவு இரக்கமின்றி மக்களை இனத்தின் பெயரால் கொன்று குவித்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்த அரக்கன். யுத்தத்தில் ஜெர்மனி வீழ்ந்த பின் நாட்டைவிட்டு ஓடி தென் அமெரிக்க நாடான அர்ஜென்டைனாவில் புகலிடம் தேடி மறைந்து வாழ்ந்த இவனை பல ஆண்டுகளுக்குப் பிறகு, இவனால் கொல்லப்பட்ட ஒரு யூதரின் மகன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு அமைப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞனால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலில் நடந்த விசாரணையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவன் இந்த ஈச்மன். இவனைப் பற்றியும் இவன் இழைத்த கொடுமைகள் பற்றியும் இங்கு ஓரளவு தெரிந்து கொள்ளலாமே.

ஜெர்மன் நாஜிப் படையில் லெஃப்டினென்ட் கர்னலாக இருந்தவன் இந்த ஈச்மன். 1906 மார்ச் மாதம் 19இல் பிறந்தவன். ஜெர்மன் நாஜிப் படை இழைத்த கொடுமைகளுக்குத் துணை போனவன் -- அல்ல அல்ல, அவற்றை முன்னெடுத்துச் சென்ற மகாபாவி. இவனுடைய திறமை, சாமர்த்தியம், புத்திசாலித்தனம் அனைத்தையும் பார்த்து இவனை யூதர்களைப் பிடித்து, அடிமாடுகளைப் போல அடைத்து வைத்து பின்னர் கொலைக்களத்துக்குக் கொண்டு சென்று ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கும் பணிக்கு இவன் நியமிக்கப் பட்டான். யூதர்களை அடைத்து வைக்கும் இடத்தை 'கெட்டோ' என்பார்கள். கிழக்கு ஐரோப்பா முழுவதும் யூதர்கள் அஞ்சி உயிர் பிழைக்க ஓடினார்கள். விடாமல் துரத்திப் பிடித்து அவர்களை கெட்டோவில் அடைத்துப் பின் அவர்களை பலவிதமான கொடிய வழிமுறைகளால் கொன்று குவிக்கும் திட்டங்களை வகுத்தவன் இந்த அடால்ஃப் ஈச்மன். ஹிட்லரின் முதல் பெயரான அடால்ஃப் என்பது இவனுக்கும் இருந்ததாலோ என்னவோ, இவனும் அவனைப் போலவே அரக்கனாகவே இருந்தான்,. 
இரண்டாம் உலகப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஜெர்மானியத் தலை நகரான பெர்லின் விழுந்தது. வடக்கிலிருந்து ரஷ்யப் படைகளும், மேற்கு, தெற்கு திசைகளிலிருந்து நேச நாட்டுப் படைகளும் பெர்லின் நகருக்குள் நுழைந்த நேரம் பூமிக்கடியில் ஒரு சுரங்க அறையில் ஹிட்லரும் அவனது காதலியும் தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர். அவன் முன் ஏற்பாட்டின்படி அவன் உடல்கள் ரஷ்யப் படையினரிடம் கிடைத்தால் அவமானம் செய்வார்கள் என்று கருதி அவன் சொல்லியிருந்தபடி அவ்விரு உடல்களும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொளுத்தப்பட்டு விட்டன.

ஜெர்மனி வீழ்ந்த பின் பல நாஜி போர்க்கைதிகள் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நியுரம்பர்க் நகரில் நடந்த நீதிவிசாரணையில் தண்டனை விதிக்கப்பட்டனர். அதில் தண்டிக்கப்பட்டவர்கள் விவரம் தெரியவேண்டுமா? அவற்றைப் பின்னர் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இப்போது இந்த ஈச்மனின் கதியை மட்டும் பார்ப்போம்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்த குழப்பமான சூழ் நிலையைப் பயன்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அணுகி இவன் ஒரு அகதியாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஒரு பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டான். அதற்கேற்றவாறு தன்னை புதுமனிதனாக ஆக்கிக் கொண்டு பெயரையும் மாற்றிக் கொண்டான். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டைனா நாட்டுக்கு ஓடினான். ஐரோப்பாவில் எங்கிருந்தாலும் இஸ்ரேலின் யூத ரகசியப் படையான மொஷாதிடம் மாட்டிக் கொள்வோம் என்று கண்காணாத தென் அமெரிக்காவுக்கு ஓடினான். அங்கு போய் பெயர் மாற்றிக் கொண்டு மெர்சிடெஸ் பென்ஸ் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து ஃபோர்மென்னாக உயர்ந்தான். இவனைத் தேடி அலைந்த மொஷாத் அமைப்பின் திறமை மிக்க ஏஜெண்டுகள் இவன் போனஸ் ஐரிஸ் நகரில் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டனர். அவனை அங்கிருந்து திரைப்படங்களில் காணப்படும் திடுக்கிடும் விதத்தில் 1960இல் பிடித்து, இஸ்ரேல் விமானத்தின் மூலம் கடத்தி வந்து இஸ்ரேலில் சிவில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி 1962இல் தூக்கிலிட்டுக் கொன்றதோடு இந்த அரக்கனின் வரலாறு முடிந்தது. மற்ற நாஜி கைதிகள் அனைவரும் நியுரம்பர்க் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள்; இவன் மட்டுமே இஸ்ரேல் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டவன்.

அடால்ஃப் ஈச்மன் ஜெர்மனிக்காரன். இவன் தந்தை ஒரு தொழில் அதிபர். 1906இல் பிறந்தான். இவன் தாய் 1914இல் இறந்தார். அதன் பின் இவன் குடும்பம் ஆஸ்திரியா நாட்டுக்குக் குடிபெயர்ந்தது. முதல் உலக யுத்த காலத்தில் இவன் தந்தை அடால்ஃப் கார்ல் ஈச்மன் ஆஸ்திரிய ஹங்கேரி ராணுவத்தில் சேர்ந்து பங்கு பெற்றவர். முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு மீண்டும் இந்தக் குடும்பம் ஜெர்மனிக்குக் குடி பெயர்ந்தது. 
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஈச்மன் ஒரு மெகானிக்காக வேலை செய்தார். பிறகு அதை விட்டுவிட்டு ஒரு கம்பெனியில் பணியாற்றத் தொடங்கினார். அது முதல் சுமார் எட்டு ஆண்டுகள் அங்கு வேலையும் பார்த்துக் கொண்டு ஹிட்லரின் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார்.

அடால்ஃப் ஈச்மன் 1932இல் ராணுவத்தில் சேர்ந்து நாஜிக் கட்சியில் தீவிரமானார். 1933இல் நாஜிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. நாஜிக்களின் ஆட்சி வந்ததும் ஈச்மன் நாஜிப்படையில் ஒரு குழுத் தலைவர் ஆனார். இவருக்கு முதலில் கொடுக்கப்பட்ட பணி யூதர்களை அடைக்கும் ஒரு சிறைச்சாலையில். நாஜிப் படையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார் ஈச்மன். இதற்கிடையே யூதர்கள் குறித்த தகவல்கள் அறிந்த அதிகாரியாகவும் இவர் திகழ்ந்தார். இரண்டாம் உலகப் போர் 1939இல் தொடங்கிய சமயம் இவருக்கு யூதர்களை ஜெர்மனியை விட்டு வெளியேற்றும் பணி கொடுக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில்தான் ஜெர்மானிய யூதர்களை நாடு கடத்தி மடகாஸ்கர் தீவுக்குக் கொண்டு செல்லும் தீட்டப்பட்டது. ஆனால் அது கைவிடப்பட்டது. எனினும் யூதர்களை மொத்தமாக ஒழித்து அழித்து விடும் திட்டமொன்று ரகசியமாகத் தீட்டப்பட்டு அதனை எப்படி செயல்படுத்துவது என்பதை ஈச்மன் உட்பட பல நாஜிக்கள் கொண்டு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

யூத மக்களை ஒன்று திரட்டி எல்லா வயதினரையும் ரயிலில் ஏற்றி முகாம்களில் கொண்டு வந்து சேர்த்து, பிறகு அவர்களை பல வழிமுறைகளைக் கையாண்டு கொன்றொழிப்பது என்பது திட்டம். அந்தப் பொறுப்பு இந்த ஈச்மன் வசம் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட முதல் முகாம் போலந்து நாட்டில் அமைக்கப்பட்டு அதற்கு ஈச்மனை அனுப்பி வைத்தார்கள். அந்த காலகட்டத்தில் இவன் மேற்கத்தியர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முயன்றான். அதன்படி ஆயுதங்களையும், வண்டிகளையும் கொடுத்தால் யூதர்களை அவர்களிடம் தருவதாக அந்த ஒப்பந்தம் கூறியது. ஆனால் அது நிறைவேறவில்லை என்பதால் அவன் சுமார் நாலு லட்சத்துக்கும் அதிகமான ஹங்கேரி நாட்டின் யூதர்களை விஷவாயு செலுத்திக் கொன்று குவித்தான்.
1945இல் நாஜி தளபதி ஹென்ரிஸ் ஹிம்ளர் யூதர்களைக் கொல்வதை நிறுத்த ஆணையிட்டான். யூதர்களைக் கொன்றதற்கான சான்றுகள் எதுவும் எதிரிகளிடம் சிக்காதபடி பார்த்துக் கொள்ளவும் அவன் ஆணை கூறியது. யுத்த குற்றங்களில் தாங்கள் சிக்கிவிடாதபடி ஹிம்ளர் எடுத்த முயற்சிகளை ஈச்மன் விரும்பவில்லை. மாறாக இவன் தன் போக்கில் யூதர்களை வேட்டையாடுவதை ஹங்கேரி நாட்டில் தொடர்ந்து செய்து வந்தான்.

1945 யுத்தத்தின் கடைசி கட்டம். சோவியத் படைகள் ஹங்கேரிக்குள் நுழையத் தொடங்கியது. இவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து ஆஸ்திரியாவுக்குள் வந்து விட்டான். அப்போது ரஷ்யப் படைகளும், அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனிக்குள் புகுந்து நாஜிக்களைத் தோற்கடித்தது. யுத்தம் முடிந்தது. ஈச்மன் அமெரிக்க படையினரால் பிடிக்கப்பட்டான். ஆனால் பிடிபட்டவன் யார், எப்படிப்பட்டவன், அவன் செய்திருக்கும் கொடுமைகள் என்ன என்பதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய பெயரை அவன் மாற்றிச் சொன்னான். ஓட்டோ எக்மன் என்று தன் பெயரைக் குற்ப்பிட்டான். இந்த ஆள் மாறாட்டச் சூழ்ச்சியின் அடிப்படையில் இவன் 1946இல் அமெரிக்கர்களிடமிருந்து தப்பி தலைமறைவானான். அப்படி இருந்து கொண்டே 1946இல் இவன் அர்ஜென்டைனா நாட்டில் நுழைய அனுமதி வாங்கிக் கொண்டான்; என்றாலும் உடனடியாக அவன் அந்த நாட்டுக்குப் போகவில்லை.
1950, உலகப் போர் முடிந்த ஐந்து ஆண்டுகள் முடிந்த வரை அவன் சிக்க வில்லை. அதன் பின் அவன் இனி ஆபத்து இல்லை என்று முடிவு செய்து இத்தாலி நாட்டுக்குச் சென்றான். யுத்தத்தினால் குடிபெயர்ந்த ஒரு அகதி என்று தன்னை அவன் அறிவித்துக் கொண்டான். பெயரையும் ரிக்கார்டோ கிளெமெண்ட் என மாற்றிக் கொண்டான். அச்சு நாடுகள் என வழங்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் யுத்த குற்றவாளிகளைத் தப்பித்துச் செல்ல ஒரு ரகசிய இயக்கம் இருந்தது. அதன் உதவியும் இவனுக்குக் கிடைத்தது. 
இந்த காலகட்டத்தில்தான் யுத்தத்தால் குடிபெயர்ந்த அகதி என்று இவர் செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டான். இது ஜெனிவா நகரத்தில் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அர்ஜென்டைனாவில் குடியேற அனுமதி வாங்கி வைத்திருந்த இவனுக்கு விசாவும் கிடைத்தது வசதியாகப் போய்விட்டது. இவன் ரிக்கார்டோ கிளெமெண்ட் எனும் பெயரில் இந்த வசதிகளைப் பெற்றுக் கொண்டான்.
அடால்ஃப் ஈச்மன் 1950 ஜூலை 14ஆம் தேதி அர்ஜென்டைனா நாட்டுக்குச் செல்லும் ஒரு கப்பலில் இடம் பிடித்தான். அங்கு சென்று போனஸ் ஐரிஸ் நகரத்தில் பல வேலைகளில் சேர்ந்து பணியாற்றினான். இப்படி அடுத்த பத்து ஆண்டுகளைத் தலைமறைவாக இருந்து தப்பித்து விட்டான். தொடர்ந்து தனது குடும்பத்தையும் ரகசியமாக அர்ஜென்டைனாவுக்கு வரவழைத்துக் கொண்டான்.

இந்த சாகசங்கள் எல்லாம் சி.ஐ.ஏ. எனும் அமெரிக்க உளவுத் தாபனத்துக்குத் தெரிந்தும் சில அரசியல் காரணங்களுக்காகவும், அமெரிக்க ஜெர்மானிய சுமுக உறவுகளுக்காகவும் சும்மாயிருந்து விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

1948இல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி இஸ்ரேல் எனும் நாடு யூதர்களுக்காக உருவாக்க அனுமதியளிக்கப்பட்டது. அந்த நாடு புத்துணர்வோடும், ஊக்கத்தோடும் செயல்படத் தொடங்கியது. தன்னலமற்ற பல வீரத் தியாகிகள் அந்த நாட்டை வழி நடத்தத் தொடங்கினர். யூதர்கள் இஸ்ரேலில் குடியேற கப்பல் கப்பலாக வந்தவர்களை பிரிட்டிஷ் சைப்ரஸ் தீவில் பிடித்து வைத்திருந்தனர். அவர்களையெல்லாம் தோணிகள் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்குக் கொண்டு செல்லும் பணியை மோஷே தயான், கோல்டா மேயோ போன்றவர்கள் செய்தார்கள். இந்த பணியில் மொஷாத் எனும் இயக்கம் இஸ்ரேலில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த மொஷாத் எனும் உளவுத் தாபனத்தில் ஈச்மனால் கொலைசெய்யப்பட்ட ஒரு யூதரின் மகனும் இருந்தார். அவர் பெயர் சைமன் விசந்தால் என்பது. இவருக்கு அளிக்கப்பட்ட பணி எப்படியாவது ஈச்மன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பது. 1954இல் இவருக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஆஸ்திரியாவில் இருந்த ஒருவருக்கு போனஸ் ஐரிஸ் நகரிலிருந்து வந்த கடிதம் ஒன்று இவர் கையில் கிடைத்தது. அதுதான் ஒரு பெரிய வேட்டையின் முதல் பிடிமானம். இவர் தன் தலைமையகத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார். அந்த அசிங்கம் பிடித்தவன் போனஸ் ஐரிசில் இருக்கிறான் எனும் தகவல் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் அது.

ஊர் மாறி, நாடு மாறி போன ஈச்மன் தன் பெயரை மாற்றிக் கொண்டானே தவிர தன் குடும்பத்தார் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லை. மிக சாமர்த்தியமான குற்றவாளிகள்கூட சில சமயங்களில் சில சின்னஞ்சிறு விஷயங்களில் கொட்டை விட்டுவிடுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

இதற்கிடையே மற்றொரு விஷயம் நடந்திருப்பதும் தெரிய வந்தது. லோதர் ஹெர்மன் என்று ஒரு வழக்கறிஞர். இவர் ஒரு யூதர். யூதர்களை நாஜிக்கள் வேட்டையாடத் தொடங்கியதும் இவர் அர்ஜென்டைனா நாட்டுக்கு ஓடிவிட்டார். அதற்கு முன்பு இவர் ஒரு யூதர்களை அடைக்கும் கொட்டடியில் இருந்தவர். இவருக்கு சில்வியா என்று ஒரு பருவமடைந்த பெண் இருந்தாள் அர்ஜென்டைனாவில். அவள் ஒரு பையனுடன் நெருங்கிப் பழகி வந்தாள். அந்தப் பையனின் பெயர் ஈச்மன் என்று சொல்லியிருந்தாள். அவன் வாய் சும்மாயிராமல் தன்னுடைய தந்தை நாஜிப் படையில் செய்த வீரதீர சாகசங்களை இந்தப் பெண்ணிடம் அவிழ்த்து விட்டிருந்தான். இவர் மெல்ல இந்தத் தகவல்களை இஸ்ரேலின் ரகசிய அமைப்பான மொஷாதிடம் சொல்லிவிட்டார்.

மொஷாத் ஏஜண்டுகள் முதலில் சில்வியாவை ஈச்மன் வீட்டுக்கு அனுப்பி தன் நண்பனைப் பார்க்க அனுப்பினர். அப்போது வீட்டில் இருந்த ஈச்மன் தன் மகன் வீட்டில் இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார். சற்று நேரம் பெரிய ஈச்மனிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் பையன் வந்துவிட்டான். அவன் ஈச்மனை அப்பா என்று அழைத்ததை அவள் வந்து மொஷாத் ஏஜண்டுகளிடம் சொல்லிவிட்டாள்.

1959இல் மொஷாதுக்கு உறுதியான தகவல் கிடைத்து விட்டது. அடால்ஃப் ஈச்மன் ரிகார்டோ கிளெமேண்ட் எனும் பெயரில் போனஸ் ஐரிஸ் நகரில் இருக்கிறான் என்று. இஸ்ரேல் அரசாங்கம் ஈச்மன் வேட்டைக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. அவனை எப்படியாவது பிடித்து ஜெரூசலம் நகருக்குக் கொண்டு வந்து விட வேண்டும். இங்கு அவன் யுத்த குற்றவாளியாக விசாரிக்கப்பட வேன்டுமென்பது இஸ்ரேலின் விருப்பம்.
அதுமுதல் இஸ்ரேல் ஏஜெண்டுகளும் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தாரும் அர்ஜென்டைனாவில் போனஸ் ஐரிசில் ஈச்மன் குடியிருந்த பகுதி, அவன் வீடு, அவன் நடமாட்டம், எப்போது போகிறான், எப்போது வருகிறான் என்பதையெல்லாம் அவன் வீட்டுக்கு எதிரிலுள்ள ரயில் பாதையின் மறுபக்கத்தில் மறைந்திருந்து கொட்டும் பனியில் கவனித்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்கள். சரியான சமயத்துக்குக் காத்திருந்தார்கள் ஈச்மனைத் தூக்க.

1960 ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, அந்த நாளும் வந்து சேர்ந்தது. வழக்கம் போல் மெர்சிடெஸ் பென்ஸ் கம்பெனியில் போர்மேனாக இருந்த ஈச்மன் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தெரு முனை திரும்பும் போதே காத்திருந்த மொஷாத் ஏஜெண்டுகளுக்கு சிக்னல் கிடைத்து விட்டது. தயாராகக் காத்திருந்தார்கள். ஈச்மன், தான் இருந்த கரிபால்டி தெரு 14ஆம் எண் வீட்டை நோக்கி மெதுவாக நடந்து வருகிறான். எதிரில் ஒரு பெரிய திறந்த வெளி. 

நடந்து வரும் ஈச்மன் எதிரில் ஒரு மனிதன் வந்து ஸ்பானிஷ் மொழியில் ஏதோ வழி கேட்டான். ஈச்மனுக்கு ஏதோ பொரி தட்டிவிட்டது. ஆபத்து நெருங்குவதை உணர்ந்தான். ஓடத் தொடங்கும் நேரத்தில் அவன் கண்களை எதிரில் ஒரு வாகனத்தின் ஒளி விளக்குகள் குருடாக்குவது போல ஒளிர்ந்தது. சில கைகள் அவனை இருகப் பிடித்தன. அருகில் வந்து நின்ற காரின் தரையில் அவனை இழுத்துப் போட்டு இருக்கைகளில் மொஷாத் ஏஜெண்டுகள் உட்கார்ந்து அவனை முண்டவிடாமல் இருக்கி அமுக்கிப் பிடித்தனர். 
கத்தி ஊரைக் கூட்டலாம என அவன் முயற்சிக்கையில் மொஷாத்காரர்கள் சுட்டுவிடுவோம் வாயைத் திறந்தால் என்று துப்பாக்கியை அவன் மீது வைத்து அழுத்தினார்கள். ஈச்மனுக்குப் புரிந்துவிட்டது. தான் இஸ்ரேலியர்களிடம் மாட்டிக் கொண்டோம் என்பது. கார் பறந்தது. வழியில் இருந்த செக் போஸ்ட்டையும் சுலபமாக இவர்கள் தான்டிப் பறந்தார்கள்.

பிடிபட்ட ஈச்மனை மொஷாத் இயக்கத்தார் இருந்த இடத்துக்குக் கொண்டு வந்து 9 நாட்கள் வைத்திருந்தனர். அந்த காலகட்டத்தில் பிடிபட்டவன் ஈச்மந்தான் என்பதற்கான எல்லா ஆதாரங்களையும் மொஷாத் திரட்டி வைத்துக் கொண்டது.
அவனை இஸ்ரேலுக்குக் கொண்டு செல்ல வேன்டுமே என்ன செய்வது? மொஷாத் டாக்டர் ஒருவர் ஈச்மனுக்கு போதை மருந்தை ஊசியில் செலுத்தினார். அவன் அரை மயக்க நிலையில் குடிகாரன் போல இருந்தான். அவனுக்கு விமானப் பணியாளனுக்குரிய உடை அணிவிக்கப்பட்டது. அப்போது அர்ஜென்டைனாவின் ஸ்பெயினிடமிருந்து பெற்ற150ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக இஸ்ரேலில் இருந்து ஒரு விமானம் வந்திருந்தது. அதில் வந்தவர்கள் விழாக்களில் கலந்து கொண்டிருந்தனர். அதில் கொண்டு போய் இருளோடு இருளாக ஏற்றி இஸ்ரேல் விமானம் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. இஸ்ரேல் நாட்டு விமானம் விழாவுக்கு வந்த அதிகாரிகளோடு பறந்து விட்டதாக நினைத்தனர். போனஸ் ஐரிசை விட்டுப் புறப்பட்ட விமானம் வழியில் செனகல் நாட்டில் இறங்கிவிட்டு அங்கிருந்து 1960 மே 21இல் டெல் அவிவ் சென்றடைந்தது.

இஸ்ரேல் நாட்டில் பென் குரியன் ஈச்மன் பிடிபட்ட செய்தியை இஸ்ரேல் பார்லிமெண்டில் அறிவித்தார். 1960 மே 23 இஸ்ரேல் பார்லிமெண்டில் இந்தச் செய்தியை உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தார்கள். 

பின்னர் பல சம்பிரதாய வழிமுறைகளுக்குப் பிற்கு ஈச்மன் விசாரணை ஜெரூசலம் நகரத்தில் 1961 ஏப்ரல் 11இல் தொடங்கியது. ஈச்மன் மீது 15 வகையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள், யூதர்களை படுபாதகமாகக் கொன்ற குற்றம் போன்றவை அவை. மூன்று நீதிபதிகள் கொண்ட கோர்ட் இதனை விசாரித்தது. 

ஈச்மன் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தான். அவனால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவன் மீது பாய்ந்து குதறிவிடுவார்கள் என்ற பயம்தான் காரணம். 'தெ மேன் இன் தெ கிளாஸ் பூத்' என்று ஒரு ஆங்கிலப் படமே வெளிவந்தது.

இந்த வழக்கு 14 வாரங்கள் நடந்தது. 1500 ஆவணங்கள், 100 சாட்சிகள் இந்த வழக்கில் ஈச்மன் எல்லா குற்றச் சாட்டுகளின்படியும் குற்றம் புரிந்தவர் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேற்படி குற்றங்களுக்காக ஈச்மனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஈச்மன் மேல் முறையீடு செய்தான்.

1962 மே 29ஆம் தேதி இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஈச்மனுக்கு மரண தண்டனை உறுதியானது. அவன் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 

உலகமே அருவெறுப்படைந்த ஈவு இரக்கமற்ற கொடுமையான கொலைச் செயல்களைச் செய்த அடால்ஃப் ஈச்மன் 1962 மே 31 அன்று நள்ளிரவுக்குச் சற்று முன்பு ஒரு இஸ்ரேலிய யூத இனத்து ஹேங் மேனால் தூக்கிலடப்பட்டான். உலகத்தின் கொடிய சர்வாதிகாரியின் இரக்கமற்ற ஆணையை நிறைவேற்றிய கொடியவன் வாழ்வு முடிந்தது.


இஸ்ரேலில் மரண தண்டனை கிடையாது. ஈச்மனுடையது மட்டும் ஒரு விதிவிலக்கு.


2 comments:

  1. ''பாவத்தின் சம்பளம் மரணம்''
    கொடுங்கோலர்களின் சாவும் இப்படி தர்மத்தின் பிடியில் எப்படியும் வந்தேறும் என்கிற மெய்ப்பாட்டு வரலாறு இது!
    பதிவு, பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. முற்றிலும் புதிய செய்திகள், பாரதி பயிலகம் வரலாற்று பொக்கிஷங்கள் கொண்ட நூலகம். நன்றிகள் அய்யா.

    ReplyDelete

You can give your comments here