“பாலைவன நரி “ Desert Fox எர்வின் ஜோகன்னஸ் யூகன் ரொமெல்.
இந்த நீளமான பெயரையுடைய ஜெர்மானிய நாஜி ராணுவ தளபதி ரொமெல் என்றுதான் அறியப்படுகிறார். அவரது வட ஆப்பிரிக்க பாலைவனத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போரில் சாகசங்களினால் "பாலைவன நரி" என்று புகழப்பட்டார். அந்த ஜெர்மானிய ராணுவ ஜெனரல் பற்றிய சுவாரசியமான வரலாற்றைச் சிறிது பார்ப்போம்.
இந்த நீளமான பெயரையுடைய ஜெர்மானிய நாஜி ராணுவ தளபதி ரொமெல் என்றுதான் அறியப்படுகிறார். அவரது வட ஆப்பிரிக்க பாலைவனத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போரில் சாகசங்களினால் "பாலைவன நரி" என்று புகழப்பட்டார். அந்த ஜெர்மானிய ராணுவ ஜெனரல் பற்றிய சுவாரசியமான வரலாற்றைச் சிறிது பார்ப்போம்.
முதல் உலகப் போரில் பங்கெடுத்துக் கொண்டு வீரப் பதக்கங்களைப் பெற்றவர் ரொமெல். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய நாஜிப் படையெடுப்பின்போது 1940இல் பிரான்ஸ் மீது நடைபெற்ற போரில் இவரது சாகசங்கள் இவரை ஒரு கதா நாயகனாக அறிமுகப்படுத்தியது. இருந்தாலும் இவருடைய வட ஆப்பிரிக்க பாலைவன நாடுகளில் நடந்த போரின்போது இவரது வீரதீர பராக்கிரமங்கள், இவரது டாங்கிப் படையின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவம் பின்வாங்கி ஓடியது இவற்றால் இவருக்கு "பாலைவன நரி" பட்டம் கிடைத்தது.
உலகத்தில் மிகவும் திறமைவாய்ந்த
போர்த் தளபதியாக இவர் கருதப் படுகிறார். கடைசியாக இவருக்கு அளிக்கப்பட்ட பணி, ஐரோப்பாவில்
பிரான்ஸ் நார்மண்டி கடற்கரையைக் காக்கும் பணிதான். ஆனால் இவரது துரதிருஷ்டம் இவர் கண்களிலும்
மண்ணைத் தூவிவிட்டு பிரிட்டிஷ் மற்றும் நேச நாடுகளின் படைகள் கடல் கொந்தளிப்பு எதிர்ப்பாக
இருந்தபோதும் அதனையும் மீறி நார்மண்டி கடற்கரையில் தரையிறங்கி முன்னேறத் தொடங்கி
விட்டனர். அதுவே அவரது வரலாறு முற்றுப் பெறவும் காரணமாக அமைந்துவிட்டது.
இந்த தலைசிறந்த போர்த் தளபதிக்கு பெருமை சேர்த்த மற்றொரு விஷயம் என்னவென்றால், ஜெர்மானிய நாஜிப் படைகள் எல்லா போர் முகங்களிலும் போர்க் குற்றங்களை குறைவற செய்து வந்த போதும், இவருடைய ஆப்பிரிக்கா கோர் எனும் படைப் பிரிவு போர்க்குற்றங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக இவரிடம் அகப்பட்ட எதிரிகளின் போர்க்கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர். நாஜிப் படையின் தலைமை இவருக்குச் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளையும், யூத வீரர்களையும், மற்ற எதிரி நாட்டு ஜனங்களையும் கொன்று விடும்படி கட்டளையிட்டிருந்தது. ஆனால் அவர் அப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளவில்லை.
வழக்கமாக உலகத்து சர்வாதிகாரிகளுக்கு எதிராக நடக்கும் சதி வேலை ஹிட்லருக்கும் எதிராக நடைபெற்றது. அப்படியொரு சதியில் இந்த ரொமெலின் பெயரும் அடிபட்டது. ரொமெலுக்கு உலக முழுவதும் பாராட்டும், பெருமையும் கிடைத்து வந்தது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஹிட்லர் ரொமெலைத் தீர்த்துக் கட்டிவிடும்படி ரகசியமாக உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இந்த விஷயம் கேள்விப்பட்ட ரொமெல் தான் தற்கொலை செய்து கொண்டுவிடுவதாகவும், அதன்பின் தன் குடும்பத்தினர் பாதுக்காப்பாக வைத்திருக்கப்பட வேன்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? ரொமெல் ஒப்புக்கொண்டபடி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நாஜி ரகசியப் போலீசார் ஜெஸ்டபோவினரால் கொல்லப் பட்டாரா? இதையெல்லாம் இனி பார்ப்போம். அதற்கு முன்பாக அவரது வாழ்க்கை வரலாற்றைச் சிறிது திரும்பிப் பார்க்கலாம்.
ஜெர்மானிய பேரரசில் வுட்டெம்பர்க் எனும் ஊரில் 1891 நவம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் ரொமெல். கிறிஸ்துவ மதத்தில் பிராடெஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். பெயர் எர்வின் ரொமெல் (1860 - 1913). ரொமெலுக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி இருந்தனர்.
ரொமெல் தன் 18ஆம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 1916இல் தன் 25ஆம் வயதில் லூய்சி எனும் 17 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு 1928இல் ஒரு மகன் பிறந்தான், பெயர் மான்ஃபிரெட் ரொமெல்.
முதல் உலக யுத்தம் 1914இல் தொடங்கியது. அதில் ரொமெல் பிரான்சிலும், ருமானியா நாட்டிலும் யுத்தத்தில் பங்கு பெற்றார். இந்தப் போர்களில் இவர் காட்டிய தீரமும், வேகமும், சாமர்த்தியமும் இவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தது.
முதல் யுத்தம் முடிந்த பல ஆண்டுகள் இவர் ராணுவத்தினரை பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தரை வழிப் போரில் இவர் வல்லவராக இருந்ததோடு, அப்படிப்பட்ட பொர் பயிற்சி பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதியிருந்தார். 1930களில் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி வலுப்பெற்று வளர்ந்து வரும் காலத்தில், ஹிட்லர் ரொமெலுடைய புத்தகத்தைப் படிக்க நேரந்ததாம். அதில் மிகவும் மனத்தைப் பறிகொடுத்த ஹிட்லருக்கு ரொமெலைத் தனக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
1938இல் கர்னலாக இருந்த ரொமெல் யுத்த ஆயத்தக் கல்லூரியில் கமாண்டராக உயர்வு பெற்றார். அதிலிருந்து ஹிட்லரின் சொந்த பாதுகாவல் படைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டார். ஜெர்மனி போலந்து நாட்டின் மீது படையெடுத்த போது அந்த படையெடுப்புக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஹிட்லருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. போலந்தைக் கணப் பொழுதில் வீழ்த்தி ஆக்கிரமித்த பிறகு அந்த வெற்றியைக் கொண்டாட ரொமெல் பெர்லின் திரும்பினார். போலந்தில் யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் ரொமெலின் உறவினர் ஒருவரும் இருந்தார்; அவரைப் பற்றி ரொமெல் விசாரித்த போது அவர் கொல்லப்பட்டுவிட்டது தெரிந்தது.
1940இல் பிரான்சின் மீது ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்த வேளையில் அந்த படைக்குத் தலைமை தாங்க ரொமெல் முன்வந்தார். ஹிட்லரும் ரொமெலிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இதற்கு ஜெர்மனி ராணுவத்தில் இருந்த சில உயர் தளபதிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது. இருந்தாலும் ரொமெல் பிரான்சின் மீது தொடுத்த தாக்குதல் மின்னல் வேகத்தில் அமைந்தது. வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. ரொமெலின் திறமை வெளி உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது.
பிரான்சைத் தொடர்ந்து பெல்ஜியத்தின் மீது யுத்தம் படர்ந்தது. ஆனால் அங்கு ஜெர்மானிய படைகள் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. வழி நெடுகிலும் உடைக்கப்பட்ட பாலங்களும், சாலை தடுப்புகளும், மின்னல் வேக முன்னேற்றத்துக்கு இடையூறாக இருந்தன. இந்த காலகட்டத்தில் யுத்த களத்தில் ஜெர்மானிய படைகளும் ரொமெலும் பல தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் டன்கிர்க் நகரத்தை நோக்கி பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கிச் செல்வதற்காக பல்வேறு போர் முனைகளிலிருந்து குவியத் தொடங்கின. ஆபரேஷன் டைனமோ எனப் பெயர் பெற்ற இந்த பிரபலமான போர்முனை நிகழ்வு வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து விட்டது. இந்த டன்கிர்க்கில் பிரிட்டிஷ் படைகள் அடைந்த சேதம், அப்பப்பா, சொல்லி மாளாது. ஜெர்மானிய விமானப்படை குண்டு வீசித் தாக்கி ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்று குவித்தது.
இந்த யுத்தத்தின் விளைவாக ரொமெல் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு ஹிட்லர் அவருக்கு மிக உயரிய விருதுகளைக் கொடுத்து கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியும் மற்ற தளபதிகளுக்கு ரொமெல் மீது மீண்டும் அதிருப்தியையும் பொறாமையையும் ஏற்படுத்தி விட்டது. ஹிட்லருடன் ரொமெலுக்கு இருந்த நெருக்கம் மற்றவர்களது பொறாமைக்குக் காரணமாக இருந்தது.
ரொமெலுடைய படையின் வீரம், வேகம் இவற்றிற்காக அது "பிசாசுப் படை" எனப் பெயர் பெற்றது. ஐரோப்பாவில் நடைபெற்ற யுத்தங்களில் ரொமெல் காட்டிய அசாத்திய வீரத்தின் விளைவாக அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து வட ஆப்பிரிக்காவில் லிபியாவுக்கு 1941இல் அனுப்பப் பட்டார். அங்கு போரிட்டுக் கொண்டிருந்த இத்தாலியப் படைகள் தோல்வி முகத்தில் இருந்ததால் அங்கு போய் அவர்களுக்கு உதவ ரொமெல் உத்தரவிடப்பட்டார். அங்கு இத்தாலி படைகளைத் திணர அடித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் படைகளை ரொமெலின் மின்னல் வேகப் படைகள் ஓடஓட விரட்டியடித்தது.
இந்த யுத்தத்தின் விளைவாகத்தான் ரொமெலுக்கு "பாலைவன நரி" எனும் புகழ் கிடைத்தது. 1941இல் ஆப்பிரிக்க படைப் பிரிவுக்கு ரொமெல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெர்மனியின் படைகள் ரொமெல் தலைமையில் வரும் வேகத்தைக் கண்டு பிரிட்டிஷ் படைத் தலைவர் ஆர்ச்பால்டு வேவல் பிரிட்டிஷ் படைகளை பின்வாங்கும்படி உத்தரவிட்டது ரொமெலுக்கு நல்லதாகப் போய்விட்டது. எகிப்தில் நுழைந்த ஜெர்மானியர்கள் எகிப்து துறைமுகம் நகரமொன்றை பிடிப்பதற்காக பால நாட்கள் போராடவும், ஆஸ்திரேலிய பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து நிற்கவும் நேர்ந்தது. இது ரொமெலின் வெற்றியின் வேகம் குறைய காரணமாக அமைந்தது.
இது முதற்கொண்டு ரொமெல் ஆப்பிரிக்கவின் வட பகுதியில், குறிப்பாக எகிப்திலும், பல போர் முனைகளில் கடுமையாக போரிடவும், பலமான எதிர்ப்புகளைச் சந்திக்கவும் நேரந்தது. அவருடைய வழக்கமான மின்னல்வேக தாக்குதல் இங்கெல்லாம் நேச நாட்டுப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டும், கடுமையாக தாக்கியும் ஜெர்மானியர்களைத் திணர அடிக்கத் தொடங்கினர். போரின் போக்கும் சற்று மாறத் தொடங்கியது. இத்தாலியப் படைகளுக்கு ரொமெலின் மின்னல்வேகத் தாக்குதல்களுக்கு இணையாக தாக்குப் பிடிக்க இயலாமல் போயிற்று. அதனால் அவர்களுக்கும் அதிருப்தி தோன்றலாயிற்று.
பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஜெனரல் மாண்ட்கோமரி தலைமையேற்று பிரிட்டிஷ் படைகளை வழி நடத்தி ஜெர்மானியர்கள் மீது தாக்கத் தொடங்கிய பின் ஜெர்மனிக்குப் பின்னடைவு ஏற்படலாயிற்று. ரொமெலின் பிரம்மாண்டமான டாங்கிப் படை தேய்ந்து கட்டெறும்பாக ஆயிற்று. பிரிட்டிஷ் மாண்ட்கோமரி 500க்கும் மேலான டாங்கிகளுடன் பயங்கரமான தாக்குதலைத் தொடங்கியதும் ஜெர்மனியின் அழிவு தொடங்கியது. பின்வாங்கிய ஜெர்மானிய படைகள் டூனிஷியாவில் அமெரிக்க படைகளை எதிர் கொள்ள நேர்ந்தது. ஜெர்மானியர்களுக்கு வந்த ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் அமெரிக்கப் படைகளால் தடுத்து நிறுத்தப் பட்டது ஜெர்மானியர்களுக்கு ஆபத்தாகப் போயிற்று.
ஜெர்மானிய பிரச்சாரம் கோயபல்ஸ் தலைமையில் என்னதான் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஜெர்மானியர்கள் சந்திக்க நேர்ந்த அழிவுகளை மறைக்க முடியவில்லை. வட ஆப்பிரிக்க ஜெர்மானிய படையெடுப்பு தோல்வியில் முடிந்ததாகவே கருத நேர்ந்தது. ஓஹோவென வானுயரப் பறந்த ரொமெலின் புகழ் வீழ்ச்சியைச் சந்தித்தது.
1944இல் ரொமெல் ஐரோப்பிய கடற்கரை பிரதேசமான பிரெஞ்சு எல்லைக்குள் இருந்த நார்மாண்டி கடற்கரைக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார். நேச நாட்டுப் படைகள் இந்த நார்மாண்டி கடற்கரையில்தான் தரை இறங்கத் திட்டமிட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. ஆகவே பிரெஞ்சு கடற்கரைக்கு ரொமெல் காவலாக நியமனம் பெற்றிருந்தார்.
பிரிட்டிஷ் மற்றும் நேச நாடுகள் நார்மண்டியில்தான் தரை இறங்க திட்டமிட்டிருந்தாலும், ஜெர்மனியைத் திசை திருப்ப வேறு இடங்களின் பெயர்களும் பேசப்பட்டன. ஆகவே அவர்கள் எங்கு வருவார்கள் என்பதில் குழப்பமே நிலவியது. ஜெர்மனி படைகள் அசிரத்தையாக இருந்த குழப்ப சந்தடியில் நேச நாட்டுப் படைகள் இயற்கை சாதகமாக இல்லாத நிலையிலும், கடல் கொந்தளிப்பு இருந்த போதும் திட்டமிட்டபடி நார்மாண்டி கடற்கரையில் வந்து இறங்கினர். "டி.டே" எனப்படும் அந்த பெரு நாளுக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது. ஜெர்மனியின் துரதிருஷ்டமோ என்னவோ ரொமெல் உட்பட பல உயர் ராணுவ தளபதிகள் விடுமுறையில் போயிருந்தனர். நார்மாண்டி கடற்கரையில் நேச நாட்டுப் படைகள் வந்து இறங்குவது சுலமாகப் போயிற்று. இறங்கிய வேகத்தில் படை பிரான்சுக்குள் முன்னேறின. பிரான்சின் டிகால் முன்னிலை வகித்து பிரான்சு படைகளுடன் வேகமாக முன்னேறி வந்தார். ரொமெல் காயம்பட்டு தலையில் அடிபட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஹிட்லருக்கு எதிரான சதி வேலைகள் நெடு நாட்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. ஹிட்லரைக் கொல்ல பலமுறை முயற்சிகள் நடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட குழுவில் ரொமெலுக்கு நெருக்கமான சிலர் இருந்தனர். அவர்கள் ரொமெலையும் ஹிட்லருக்கு எதிராகத் திருப்ப முயற்சிகள் மேற்கொண்டனர். ரொமெலுக்கு ஹிட்லரின் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகள் பிடிக்காமல் இருந்தாலும், அவனைக் கொல்வதற்கு சம்மதிக்க முடியவில்லை. அப்படி ஹிட்லர் கொல்லப்பட்டால் உள் நாட்டுப் போர் வரும்; ஹிட்லர் பெரிய மாவீரனாக ஆகிவிடுவான், ஆகவே அவன் கொல்லப்படுவதைத் தான் ஆதரிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
1944 ஜூலையில் ஹிட்லர் மீது ஒரு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. ரொமெலின் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்தது. கோர்ட் மார்ஷியல் எனும் ராணுவ கோர்ட் இது குறித்து விசாரணை நடத்தியது. ஹிட்லர் மீதான கொலை முயற்சி குறித்து அது விரிவான விசாரணை நடத்தியது. அப்போது நடந்த மோதல் காரணமாக ரொமெல் ராணுவத்திலிருந்து வெளியேற்றப் பட்டு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடிவானது.
இவற்றையெல்லாம் அறிந்த ஹிட்லருக்கு, ரொமெல் தன்னைக் கொல்ல முயன்ற குற்றத்துக்காக துரோகி எனக் கருதி கொல்லப்பட்டால் அது நாட்டு நன்மைக்கு உகந்ததல்ல. ஆகையால் ரகசியமாக ரொமெலை தற்கொலை செய்து கொள்ள ஆணையிட உத்தரவிட்டான்.
ரொமெலின் வீடு 1944 அக்டோபர் 14ஆம் தேதி. இரு நாஜி ஜெனரல்கள் ரொமெலிடம் ஹிட்லரின் விருப்பத்தைத் தெரிவித்து, உத்தரவை ஏற்று ரொமெல் தற்கொலை செய்து கொண்டால் அவனை உயரிய கெளரவங்களைக் கொடுத்து பெருமைப் படுத்துவதாகவும், மறுத்தால் துரோகி எனக் கருதி மரண தண்டனை விதிக்கப்படுமென்றும் தெரிவித்தனர். முதல் வழியைப் பின்பற்றினால் அரசாங்க பெருமைகள், ஓய்வூதியம், ராஜாங்க மரியாதைகளுடன் சவ அடக்கம் அனைத்தும் கிடைக்கும், இல்லாவிட்டால் அனைத்தும் போய்விடும் என்றனர்.
The Grave of Rommel
வேறு வழி இல்லாமல் ரொமெல் முதல் வழியை ஏற்றுக் கொண்டு தனது முடிவை தன் மனைவி மகன் ஆகியொரிடம் சொல்லிவிட்டு ராணுவத்தினருடன் சென்று விட்டார்.
பத்து நிமிஷங்களுக்குப் பிறகு சையனைடு அருந்தி உயிர் நீத்த ரொமெலின் சாவுச் செய்தி அவருடைய மனைவிக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்தவை அனைத்தும் முன்னேற்பாட்டின்படி நடந்த நாடகங்கள். ரொமெல் இறந்தார். அரசாங்கத்தின் மரியாதைகள் கிடைத்தன. மனைவியும் மகனும் பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று விட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரு தணிக்கையாளராக இருந்த அந்த மகன் நடந்த உண்மைகளை எழுதினார். அந்த கட்டுரை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை வெளியிட்ட "சீக்ரட்ஸ் அண்டு ஸ்டோரீஸ் ஆஃப் வார்" எனும் நூலில் வெளியாகியது. ஒரு மாவீரனின் சகாப்தம், அக்கிரமக்காரனுக்கு உதவிய காரணத்தால் சோகத்தில் முடிவடைந்தது. உலக வரலாற்றில் பதிவான சோக வரலாறுகளில் ரொமெலின் வரலாறும் சேர்ந்தே இருக்கும்.
வேறு வழி இல்லாமல் ரொமெல் முதல் வழியை ஏற்றுக் கொண்டு தனது முடிவை தன் மனைவி மகன் ஆகியொரிடம் சொல்லிவிட்டு ராணுவத்தினருடன் சென்று விட்டார்.
பத்து நிமிஷங்களுக்குப் பிறகு சையனைடு அருந்தி உயிர் நீத்த ரொமெலின் சாவுச் செய்தி அவருடைய மனைவிக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்தவை அனைத்தும் முன்னேற்பாட்டின்படி நடந்த நாடகங்கள். ரொமெல் இறந்தார். அரசாங்கத்தின் மரியாதைகள் கிடைத்தன. மனைவியும் மகனும் பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று விட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரு தணிக்கையாளராக இருந்த அந்த மகன் நடந்த உண்மைகளை எழுதினார். அந்த கட்டுரை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை வெளியிட்ட "சீக்ரட்ஸ் அண்டு ஸ்டோரீஸ் ஆஃப் வார்" எனும் நூலில் வெளியாகியது. ஒரு மாவீரனின் சகாப்தம், அக்கிரமக்காரனுக்கு உதவிய காரணத்தால் சோகத்தில் முடிவடைந்தது. உலக வரலாற்றில் பதிவான சோக வரலாறுகளில் ரொமெலின் வரலாறும் சேர்ந்தே இருக்கும்.
2 comments:
ஆஹா அற்புதமானப் பதிவு....
ராவணனுக்கு ஒரு கும்ப கர்ணனைப் போல்!
துரியோதனனுக்கு ஒரு கர்ணனைப் போல்!
இந்த ஹிட்லருக்கு ஒரு ரோமெல் போலும்...
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
உலகில் அக்கிரமக்காரர்கள் கோலோச்சம் செய்தாலும் அவர்களின் முடிவுகளில் அவர்களை ஆட்சி செய்தது துர் மரனங்கள் தான். அதைத்தான் இவனின் வரலாறும் சொல்கிறது.
ஹிட்லர் எனும் ஆலமரத்தின் விழுதுகளும் குட்டி ஹிட்லர்களாகவே வாழ்ந்துள்ளார்கள். தாயைப்போல சேலை எனும் நம் ஊர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
Post a Comment