பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 16, 2012

திருமணப் பாடல்கள்


திருமணப் பாடல்கள்

நமது திருமணங்களின்போது, நாதஸ்வரத்திலும் சரி, கூடியிருக்கும் பெண்களும் சரி பல திருமணப் பாடல்களைப் பாடுவது வழக்கம். ஊஞ்சல், திருமாங்கலியதாரணம் முடிந்த பின் கெளரி/சீதா கல்யாண வைபோகமே, லாலி, நலுங்கு போன்ற சமயங்களில் பாடப்படும் அந்தப் பாடல்களை இப்போதெல்லாம் அதிகம் கேட்க முடிவதில்லை. காரணம் பாடுவதற்குப் பெண்களுக்குப் பழக்கம் இல்லை. இந்தப் பாடல்களைப் பாடி கொண்டாடுவதால் மட்டுமே திருமண நிகழ்ச்சிகள் களை கட்டும். அதிலும் மாப்பிள்ளை பெண்ணுக்கு நடக்கும் நலுங்கு முழுக்க முழுக்க நண்பர்கள் உறவினர்கள் கூடியிருந்து விளையாட்டாக நடத்தும் நிகழ்ச்சி. ஆகவே இந்தப் பாடல்கள் பலருக்கும் பயன்படட்டும் என்று இங்கே தரப்படுகிறது. இந்தப் பாடல்களுடன் இனி திருமணங்கள் சிறப்பாக நடக்கட்டும்.




ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே 
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே 
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே 

ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே 
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே 
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம் 
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம் 
நாம் செய்த பூஜா பலமும் 
இன்று பலித்ததம்மா - ஆனந்தம் 





கெளரி கல்யாண வைபோகமே 
விருத்தம் 
-----------
 
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து 
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து 
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து 

பல்லவி 
--------
 
கெளரி கல்யாண வைபோகமே 
லக்ஷ்மி கல்யாண வைபோகமே (2) 

சரணம் 
--------
 
வசுதேவ தவ பாலா 
அசுர குல காலா 
சசிவதன ரூபிணி 
சத்யபாம லோலா - கெளரி கல்யாண 

கொத்தோட வாழை மரம் 
கொண்டு வந்து நிறுத்தி 
கோப்புடைய பந்தலுக்கு 
மேல் கட்டு கட்டி - கெளரி கல்யாண 




மாலை சார்த்தினாள் 

மாலை சார்த்தினாள் கோதை 
மாலை மாற்றினாள் 
மாலடைந்து மதிலரங்கன் 
மாலை அவர்தன் மார்பிலே 

மையலாய் தையலாள் 
மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள் 

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை 
ஆசை கூறி பூசுரர்கள் 
பேசி மிக்க வாழ்த்திட 
அன்புடன் இன்பமாய் 
ஆண்டாள் கரத்தினால் 

மாலை சார்த்தினாள் கோதை 
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள் 




கன்னூஞ்சல் 

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
மனமகிழ்ந்தாள் 
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் 
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 

பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து 
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து 
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ... 

உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி 
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி 
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ... 

அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட 
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட 

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல் 


ரத்ன ஊஞ்சல் 

ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள் 
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட 
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன 

மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய் 
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன 

ஆடிர் ஊஞ்சல் 
விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி 
விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி 
அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே 
அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல் 
ஆடிர் ஊஞ்சல் 

இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட 
சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட 
தும்புரு நாரதரும் வீணை மீட்ட 
ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல் 
ஆடிர் ஊஞ்சல் 


லாலி 
தந்தி முகனுக்கிளைய கந்தனுக்கும் லாலி 
சதுர் மறை மூலனுக்கும் மேயனுக்கும் லாலி 

ஆடிபூர துதித்த ஆண்டாள் நம் கோதை 
அணியரங்கருடன் ஊஞ்சல் ஆடினாள் இப்போதே 
லாலி... 

பாலாலே கால் அலம்பி பட்டாலே துடைத்து 
மணி தேங்காய் கையில் கொடுத்து 
மஞ்சள் நீர் சுழற்று 
லாலி... 



நலங்கிட வாரும் ராஜா 

நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே 
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு 
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட 

பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு 
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட 

எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர் 
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட 


நலங்கிடுகிறாள் மீனலோசனி 

நலங்கிடுகிறாள் மீனலோசனி 
நாதருடன் கூடி 
நலங்கிடுகிறாள் மீனலோசனி 

நாரதரும் வந்து கானங்களை பாட 
நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள் 

சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து 
சுந்தரேசர் கையில் கொடுத்து 
பூபதி பாதத்தில் விழுந்து 
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள் 

சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள் 
சுந்தரேசர் மேலே தெளித்தாள் 
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள் 
வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள் 
: 


போஜனம் செய்ய வாருங்கோ
போஜனம் செய்ய வாருங்கோ ராஜ 
போஜனம் செய்ய வாருங்கோ 

மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில் 
போஜனம் செய்ய வாருங்கோ 

சித்ரமான நவ சித்ரமான் 
கல்யாண மண்டபத்தில் 
வித விதமாகவே வாழைகள் கட்டி 
வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும் 
மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும் 
பச்சை மரகதங்கள் தளகதி செய்களும் 
முத்து முத்தாகவே நுனி வாழைகளும் 
பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும் 
பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே 
முத்து முத்தாகவே முன்னே தெளிக்க - போஜனம் 

மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட 
அன்னம்பார்வதி ஆதிபராசக்தி 
அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா 
த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி 
இந்திரதேவி ரம்பை திலோத்தமை 
கந்தர்வ பத்தினி கின்னர தேவி 
அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே 
சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும் 
பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி 
கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென 
பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து 
பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார் - போஜனம் 

ஸ்ரீராமா ஜெய ஜெய 
ஸ்ரீராமா ஜெய ஜெய 
சீதம்மா மனோகர 
காருண்ய ஜலதே 
கருணாநிதே ஜெய ஜெய 

தில்லையில் வனம் தனிலே 
ராமர் வந்த நாளையிலே 
ராமரோட சேனையெல்லாம் 
ராமரை கொண்டாட 

சங்கு சக்ரம் தரித்து கொண்டு 
தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு 
கோதண்டம் தனைப் பிடித்து ராமர் 
கோலாகலமாய் இருந்தார் 

ஜனகரோட மனையில் வந்து 
சீதையுடைய வில்லை முறித்து 
ஜானகியை மாலையிட்டார் 
ஜனகர் அரண்மனைதனிலே 

ஸ்ரீராமா ஜெய ஜெய 
சீதம்மா மனோகர 
காருண்ய ஜலதே 
கருணாநிதே ஜெய ஜெய 




மன்மதனுக்கு மாலையிட்டாயே 

மன்மதனுக்கு மாலையிட்டாயே 
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே 
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே 
ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு 

மன்மதனுக்கு மாலையிட்டு 
மாலைதனை கைபிடித்து 
கனகநோன்பு நோற்றதுபோல் 
கிடைத்தது பாக்யமடி - மன்மதனுக்கு 

செந்தாழை ஓடையிலே 
மந்தாரை பூத்ததுபோல் 
இந்திரனோ சந்திரனோ 
சுந்தரனோ இவர்தானடி - மன்மதனுக்கு 

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

மங்கள்கரமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

thanusu said...

இனையத்தொடர்பு அடிக்கடி விட்டுப்போவதால் தொடர்ந்து பயிலகத்துக்கு வரமுடியவில்லை. இன்றைய பதிவு வித்தியாசமானது. ரசிக்கவும் வைத்தது. மஞ்சளும் மங்களமும் ,சந்தனமும் சேர்ந்து மனத்தது.நன்றிகள் அய்யா.

Unknown said...

நல்ல பாடல்கள். கேட்டு வெகு நாளாயிற்று. பாராட்டுக்கள். நன்றி.