பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 9, 2012


           திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்  
      மகாகவி பாரதியார் நினைவு நாளையொட்டி  
                                 சிறப்பு நிகழ்ச்சி
                                             பாரதி பயிலரங்கம்

திரு மோகன் வரவேற்புரை
திரு வெ.கோபாலன் நிகழ்ச்சி பொறுப்பாளர்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி பாரதி சிறுவர் மன்ற உறுப்பினர்களுக்காக ஒரு நாள் பயிலரங்கம் திருவையாறு மேட்டுத் தெரு சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் 9-9-2012 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்துக்கு தில்லைத்தானம் திரு அ.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார்.    
                                                                                                             
காலை முதல் அமர்வு 10 மணிக்கு தில்லைத்தானம் மாணவிகளின் பாரதி பாடலோடு தொடங்கியது. பாரதி இயக்க அறங்காவலர்கள் திரு நா.பிரேமசாயி, திரு பி.இராஜராஜன், திருவையாறு ஸ்ரீநிவாச ராவ் மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் லயன் திரு கே.சீனிவாசன், பாரதி இயக்க அறங்காவலர் இரா.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனர் திரு வெ.கோபாலன், திருவையாறு பாரதி இயக்கம் நல்ல இந்திய குடிமகனை உருவாக்குவதற்காக பாரதி இயக்கத்தில் சிறுவர்களுக்கென்று சிறுவர் மன்றத்தையும், இளைஞர்களுக்கென்று காந்தி பாரதி இளைஞர் மன்றத்தையும், இலக்கிய ஆர்வலர்களுக்காக இலக்கியத் தடத்தையும், பெண்களுக்காக செல்லம்மாள் பாரதி மகளிர் மன்றத்தையும், பாரதி இலக்கியங்களைப் பரப்புவதற்காக பாரதி இலக்கியப் பயிலகத்தையும் உருவாக்கி அதன் மூலம் அளப்பற்கரிய சமூகத் தொண்டினை ஆற்றி வருகிறது என்றார். பாரதி இயக்கத்தில் உறுப்பினராக ஆவதன் மூலம் ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசபக்தி, சமூக அக்கறை, இலக்கிய ஆர்வம் இவற்றோடு சமூகத்தில் நிலவும் தீங்குகளை எதிர்க்கும் உணர்வுகளையும் பெற முடியும் என்பதை பயிலரங்கத்தில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர்.

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய இரண்டாம் அமர்வின்போது காலையில் பேசியவர்களின் கருத்தில் மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர். ஒவ்வொரு மாணவரும் பாரதி பற்றித் தங்களுக்குத் தெரிந்த பாடல், அவர் வாழ்க்கைக் குறிப்புகள் முதலானவற்றை தெரிவித்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தஞ்சை மாணவிகள் செல்வி வீணாஸ்ரீ செல்வி சுவர்ணாஸ்ரீ ஆகியோரின் பாரதி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை இராமமூர்த்தி மிருதங்கமும், திரு நடராஜன் வயலினும் வாசித்தனர். பங்குபெற்ற மாணவ மாணவியருக்கு நினைவுப் பரிசுகளை திருவையாறு அரசர் கல்லூரி, சமூகப் பணித் துறை பேராசிரியர் திருமதி மணிகுமரி அவர்கள் வழங்கி வாழ்த்தினார். மகாகவி பாரதியாரின் பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தொடர்ந்து பாரதி நினைவு நாளான 11-9-2012 அன்று மாலை 6 மணிக்கு சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பாரதி நினைவு தின சொற்பொழிவு நடைபெறும். நிகழ்ச்சிக்கு பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் திரு வெ.கோபாலன் தலைமை வகிக்கிறார். லால்குடி திரு கி.முத்துராமகிருஷ்ணன் நினைவு தின உரையாற்றுகிறார். ஆர்வலர்கள் அனைவரும் பங்கு பெறுமாறு பாரதி இயக்கம் அழைப்பு விடுக்கிறது.
                                              பாரதி இயக்க அறங்காவலர் திரு பி.ராஜராஜன்
                                              தில்லைத்தானம் திரு அ.இராமகிருஷ்ணன்     
                                                                                     பாரதி இசை நிகழ்ச்சி
                                                                        செல்வி வீணா செல்வி சுவர்ணா
                                                                                                   பரிசளிப்பு
                                                                              பங்கேற்ற சிறுவர் சிறுமியர்

1 comment:

  1. பாரதியின் நினைவு நாளையொட்டி நடந்த, நடக்க இருக்கும் விழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சி தருகின்றன...
    மகாகவியின் கனவு வசப்பட தொடர்ந்து உழைக்கும் பாரதி பிரியர்களுக்கு இந்த பாரதி பித்தனின் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!
    வாழ்க வளர்க பாரதியின் புகழ்!

    ReplyDelete

You can give your comments here