பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 29, 2012

காந்திஜிக்கு ராஜாஜியின் நட்பு.காந்திஜியின் மனச்சாட்சி என்று ராஜாஜி அழைக்கப்பட்டார். எப்படி அப்படியொரு நட்பும், நம்பிக்கையும் நிலவியது என்பது பலரும் அதிசயிக்கும் செய்தி. காந்திஜி வாயால் அந்த சூழ்நிலையைப் பார்ப்போம்.

"தென்னாடு எப்பொழுதுமே எனக்குச் சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர் மீதும் தெலுங்கர் மீதும் எனக்கு ஒருவகையான தனி உரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள் என் நம்பிக்கையை என்றும் பொய்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்புக்கு முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்து கொண்டேன். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அதுவே முதல் தடவை என்று சொல்லலாம். அது எப்படியாயினும் முதல் தடவையாக ஒருவரையொருவர் நேரில் அறிந்து கொண்டது அப்போழுதுதான்.

காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் போன்ற நண்பர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும், பொது வாழ்க்கையில் மேலும் தீவிரமான பங்கு வகிக்கலாம் என்ற நோக்கத்தின் பேரிலும், அப்பொழுது கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான் ராஜகோபாலாச்சாரியார் சென்னையில் வக்கீல் தொழிலை நடத்தச் சேலத்திலிருந்து வந்திருந்தார். சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால் அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டு பிடித்தேன். ஏனெனில், நாங்கள் தங்கியது ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காருக்குச் சொந்தமான பங்களா ஆகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கியிருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தைக் கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் ராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். ராஜகோபாலாச்சாரியாரோ, தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு யோசனை சொன்னார். "இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் ஒரு நாள் சொன்னார்.

அவ்வாறே செய்தேன். போராட்டத்தின் திட்டங்களைக் குறித்துத் தினமும் சேர்ந்து விவாதித்தோம். ஆனால், பொதுக்கூட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலைத் திட்டமும் எப்பொழுதும் எனக்குத் தோன்றவில்லை. ரெளலட் மசோதா முடிவில் சட்டமாக்கப்பட்டு விடுமானால், அதை எதிர்த்துச் சாத்வீக சட்ட மறுப்பு செய்வது எப்படி என்பது எனக்கு விளங்கவே இல்லை. சட்டத்தை மறுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தான் அச்சட்டத்தை ஒருவர் மீற முடியும். அதில்லாது போனால், மற்றச் சட்டங்களை நாம் சாதிவிக முறையில் மீற முடியுமா? அப்படிச் செய்வதாயின் அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது? இதையும் இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

விஷயத்தை நன்கு பரிசீலனை செய்து முடிவுக்கு வருவதற்காக ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்கள் அடங்கிய சிறு கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.அதில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரக சரித்திரத்தின் நுட்பமான விவரங்கள் அடங்கிய விரிவான குறிப்பு நூல் ஒன்றை நான் தயாரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அந்த வேலை என் சக்திக்குப் புறம்பானது என்பதை உணர்ந்தேன். அதை அவரிடம் தெரிவித்தும் விட்டேன்.

இந்த ஆலோசனைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், ரெளலட் மசோதா சட்டமாகப் பிரசுரமாகிவிட்டது என்ற செய்தி கிடைத்தது. அதைப் பற்றி யோசித்தவாறே அன்றிரவு தூங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் வழக்கமாக எழுவதற்குக் கொஞ்சம் முன்பாகவே எழுந்து விட்டேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே உள்ள நிலையில் நான் இருக்கும்போது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அது கனவைப் போன்றே இருந்தது. காலையில் அதன் விவரம் முழுவதையும் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூறினேன்.

"நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்த்தாலை நடத்த வேண்டும் என்று தேச மக்களைக் கேட்டுக் கொள்வது என்பதே அது. ஆன்மத் தூய்மை செய்து கொள்ளும் ஒரு முறையே சத்தியாக்கிரகம். நம்முடைய போராட்டமோ, ஒரு புனிதமான போராட்டம். ஆகையால், அதை ஆன்மத் தூய்மை செய்து கொள்வதோடு ஆரம்பிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும். முஸ்லிம்கள் ஒரு நாளுக்கு மேல் பட்டினி விரதம் இருக்க மாட்டார்கள். ஆகவே, பட்டினி விரதம் இருக்கும் நேரம் 21 மணி என்று இருக்க வேண்டும். இந்த நமது கோரிக்கையை எல்லா மாகாணங்களுமே ஏற்றுக் கொண்டு நடத்தும் என்று சொல்லுவதற்கிலை. ஆனால் பம்பாய், சென்னை, பிகார், சிந்து ஆகிய மாகாணங்கள் அனுசரிப்பது நிச்சயம் என்று எண்ணுகிறேன். இந்த இடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரியானபடி அனுஷ்டிக்கப் பட்டாலும் நான் திருப்தியடையக் காரணம் உண்டு என்றே கருதுகிறேன்.

என்னுடைய இந்த யோசனையை ராஜகோபாலாச்சாரியார் உடனே ஏற்றுக் கொண்டார். பிறகு இதை மற்ற நண்பர்களுக்கு அறிவித்தபோது அவர்களும் வரவேற்றார்கள். சுருக்கமான வேண்டுகோள் ஒன்றை நான் தயாரித்தேன். 1919 மார்ச் 30ஆம் தேதி ஹர்த்தால் அனுஷ்டிப்பது என்று முதலில் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், பிறகு ஏப்ரல் 6ஆம் தேதி என்று மாற்றினோம். இவ்விதம் மக்களுக்குச் சொற்ப கால அவகாசத்துடனேயே அறிவித்தோம். நீண்ட காலத்திற்கு முன்னால் அறிவிப்பது சாத்தியமில்லை.

இதெல்லாம் எவ்விதம் நடந்தது என்பதை யார் அறிவார்கள்? இந்தியா முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றோர் மூலை வரையில் பட்டணங்களும் கிராமங்களும் அன்று பூரணமான ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். அது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது.

"சத்திய சோதனையில்" காந்திஜி.

1 comment:

 1. பொதுவாக அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்றொரு நம்பிக்கை நம்மிடம் உண்டு... அதற்கு உண்மையானக் காரணமும் உண்டு.

  மகாத்மா அவர்கள் கூறியது போன்ற உறக்கத்திற்கும் விழிப்புக்குமான ஒரு நிலை அது ஆன்மாவின் விழிப்பு நிலையை இந்த பூத உடல் அறியும் / உணரும் நிலையாகவே இருக்கும். அப்படி ஒரு புனிதமான மனிதனின் அந்த ஆன்ம நிலையில் காணும் காட்சி பலிக்கும் என்பதே சத்தியம்.. அப்படியே இரவு முழுதும் அதைப் பற்றிய சிந்தனையிலே ஒருநிலைப் பட்டுப் போன மனது தன்னிலையை மறந்த போது வெளிப்படும் காட்சி ஆன்மாவில் இருந்து தான் வெளிப்படும் அப்படி தான் மகாத்மாவின் ஆன்மா கூறிய உபாயம் அந்த ஒரு நாள் உபவாசம் ஆகும்.

  இதிலே மகாத்மாவின் கவனம்; கூடவே இருக்கும் இஸ்லாமியர்களின் வழக்கத்தையும் கணக்கில் கொள்ளத் தவறாமல், அதை அனுசரித்து செல்வது என்பதைப் பார்க்கும் போது தான்!... அவர் எத்தனை பெரிய தலைவர் என்பதை நம்மால் உணர முடிகிறது.

  மகாத்மாவின் தமிழரின், தெலுங்கரின் மீது கொண்ட உரிமை பெருமைப் பட வைக்கிறது. அதன் பெருமையெல்லாம் தில்லையாடி வள்ளியம்மையையும், அவரோடு இருந்த இன்னும் பல நன் மக்களையேச் சாரும் என்றால் அது மிகையாகாது.

  இந்தக் கட்டுரை நமது தென்னாட்டுக் காந்தியான மூதரிஞரை மிகவும் அழகாக தெளிவாக காந்தியின் பால் அவர் கொண்ட அன்பு, மரியாதை, நெருக்கும். அவராகவே அவருடம் ஆத்மார்த்தமாக ஒன்றிணைந்து செயல் பட்ட அத்தனையும் அழகுடன் மிளிர்கிறது.

  இந்த மகான்கள் செய்த செயற்கரிய செயல்களைப் போற்றவேண்டாம் குறைந்த பட்சம் அவர்கூறிய நல் அறிவுரைகளையாவது அரசும், மக்களும் பின்பற்றினால் இந்தியா இன்னும் இருபது ஆண்டுகளில் ஒளிரும் என்பது சத்தியம்.

  நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here