பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 14, 2012

இன்னும் மனமில்லையோ?


தமிழ்விரும்பி வடித்த கவிதை
அமிழ்தென வருகின்ற பாங்கை
படியுங்கள், மனம் மகிழுங்கள்
வடியுங்கள் கருத்தினைப் பின்னே
வாழ்த்துங்கள் சிங்கைக் கவிஞரை.


சக்தியே இன்னும் மனமில்லையோ?

ஐம்புலனும் அடங்கிப்போன பொழுதிலே
சித்தமெல்லாம் உன் நினைவில்
நித்தமும் களித்திடவே சக்தியுனை வேண்டி
எத்தனை பிறவி எடுத்தேன் இன்னுமேன் 
சத்திய சோதனையடி சிவ சங்கரியே!
கத்திக் கதறியுன் பாதம் பற்றுகிறேன்
முக்தித்தர மனம் இன்னும் வரவில்லையோ! 

கற்பகமலரை மிஞ்சிய மணமோ? தேவாமிர்மோ?

இருபது இதழ்களில் இளஞ்சிவப்பு நிறத்தினில்
ஒளிவிடும் தளிர்களில் ஊறிடும் தேனினில்
ஒரு துளி பருகிட நீர்  ஊறிடும் நாவினில்!
ஒளியுடை முனிவர் உயிரிடையுறைப் பொழுதினில் 
பெருகிய அறிவினில் பிறந்த நான்மறையே நீ !
களிப்புடன் அவள் கழல் குடிகொண்டாயே! 
உருக்கியச் சூரியப் பொன்னொடு; மீனாய் 
ஒளிரும் சந்திர வெள்ளியை சரிபாதி 
முருக்கியே செதுக்கிய; ஈசனை மயக்கிடும் 
ஒலியெழும் சிலம்பொடு  ஆடிய பொழுதினில்
அருவியாய் பெருகிப் பரவியே நாதமே  
பொலிவுடை கொடியவள் திருப்பாத மலரதன்
நறுமணம் கற்பக மலரையும் விஞ்சுமோ 
களிநடை புரிகையில் சிந்தும் தேன்துளி
களிதரும் ஆனந்தத் தேவா அமிர்தமோ?
ஒளிக்காமல் உண்மையை உரைத்திடுவாயே!


''மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
   
 மடியிலே வைத்த மயிலே!''

சதியினால் தீயோர் தந்திடும் துயரினை
விதியென பொறுப்பதும் முறையோ
பதியினைப் படைத்த தேவியே -நினைக் 
கதியென வரும் பக்தனைக்காத்து நற்
கதியினை தந்திடும் அணங்கே! 

விதியேது மதியேது சதியேது -நினை
கதியென்றே வந்து டைந்த பின்னே
இரவேது பகலேது இன்பம்தான் ஏது துன்பமேது
இடைவிடாது நினைத் தொழும் போது
தடைகள்தான் எனக்கு இனி ஏது அம்மே!

கனவேது நனவேது காணும் யாவும்
நினதென்ற எண்ணம் மட்டும் நீங்கிடாது
எனதுள்ளே கருக்கொண்டு வளர்ந்த போது
உறவேது பிரிவேது உண்மையிதை உணர்ந்தபோது 
பிறகிங்கே பிறப்பேது நினதுபாதம் பற்றியபோது!

''மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
மடியிலே வைத்த மயிலே!''

கவியரசுவின் வரிகளே கரைகளென இருந்து பாயும் எனது கவி!

No comments:

Post a Comment

You can give your comments here