பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 2, 2011

தேவாரத் திருப்பதிகங்கள்


திருச்சிற்றம்பலம்
                                                                                                     
நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா
                                                                                                                           
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி! போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

விநாயகர் துதி

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடை
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

நால்வர் துதி

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி.

                                                                                                             
தேவாரத் திருப்பதிகங்கள்
பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: நட்டபாடை தலம்: திருப்பிரமபுரம்.
ராகம்: கம்பீரநாட்டை தாளம்: ரூபகம்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த,
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மா னிவனன்றே. 1.

முற்றலாமையிள நாகமோடேன முளைக் கொம்பவை பூண்டு
வற்றலோடு கலனாப்பலி தேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல் கேட்டலுடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே. 2.

நீர்பரந்த நிமிர் புன்சடைமேலோர் நிலா வெண்மதி சூடி
ஏர்பரந்த இன வெள்வளை சோர என் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்த வுலகின் முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே. 3.

விண்மகிழ்ந்த மதிலெய்தது மன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்து பலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த வரை மார்பிற்
பெண்மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மா னிவனன்றே. 4.

ஒருமை பெண்மையுடையன் சடையன் விடையூரும் இவனென்ன.
அருமையாக வுரைசெய்ய அமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இதுவென்னப்
பெருமைபெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மா னிவனன்றே. 5.

மறைகலந்த ஒலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்த இனவெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்
கறைகலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்த பிரமாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே. 6.

சடைமுயங்கு புனலன் அனலன் எரிவீசிச் சதிர்வெய்த
உடைமுயங்கும் அரவோடுழி தந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்கு கழிசூழ் குளிர் கானல் அம்பொன்னஞ் சிறகன்னம்
பெடைமுயங்கு பிர்மாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே. 7.

வியரிலங்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயரிலங்கை யரையன் வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கு உலகிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே. 8.

தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே. 9.

புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற நெறிநில்லா
ஒத்தசொல்ல உலகம் பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானை மறுகவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுவென்னப்
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே. 10.

அருநெறியமறை வல்ல முனியகன் பொய்கையலர் மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே. 11.

                                                                                                               
பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: நட்டபாடை தலம்: திருநெய்த்தானம்
ராகம்: கம்பீரநாட்டை தாளம்: ரூபகம்.

1. மையாடிய கண்டன் மலைமகள் பாகமதுடையான்
கையாடிய கேடில் கரியுரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத் தவளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானம் எனீரே.

2. பறையும் பழிபாவம் படுதுயரம் பல தீரும்
பிறையும் புனல் அரவும் படு சடையெம் பெருமானூர்
அறையும் புனல் வரு காவிரி அலைசேர் வடகரைமேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே.

3. பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறு செய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானம் எனீரே.

4. சுடுநீறணி அண்ணல் சுடர் சூலம் மனலேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன் உறை இடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல் நஞ்சமது உண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானம் எனீரே.

5. நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனல் காவிரி பரவிப் பணிந்தேத்தும்
நிகரான் மணலிடு தண்கரை நிகழ்வாய நெய்த்தான
நகரான் அடியேத் தந்நமை நடலை அடையாவே.

6. விடையார் கொடியுடையவ் வணல் வீந்தார் வெளையெலும்பும்
உடையார் நறுமாலை சடை உடையாரவர் மேய
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.

7. நிழலார்வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்
தழலானவன் அனல் அங்கையிலேந்தி அழகாய
கழலானடி நாளும் கழலாதே விடலின்றித்
தொழலாரவர் நாளும் துயரின்றித் தொழுவாரே.

8. அறையார் கடல் இலங்கைக்கிறை யணிசேர் கயிலாயம்
இறையார் முன் எடுத்தான் இருபது தோளிற வூன்றி
நிறையார் புனல் நெய்த்தானன் நல் நிகழ் சேவடி பரவக்
கறையார் கதிர் வாளீந்தவர் கழல் ஏத்துதல் கதியே.

9. கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாய நெய்த்தானம்
காலம்பெற மலர் நீரவை தூவித் தொழுதேத்தும்
ஞாலம் புகழ் அடியாருடல் உறுநோய் நலியாவே.

10. மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம் மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம் பயில் நிமலன்னுறை நெய்த்தான மதேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறு நோய் அடையாவே.

11. தலமல்கிய புனற்காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடலிவை பத்தும் மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர் சிவகதியே.


பாடியவர்: திருஞானசம்பந்தர் 
பண்: செவ்வழி தலம்: திருக்கேதாரம் 
ராகம்: யதுகுலகாம்போதி தாளம்: ஆதி

1. தொண்டரஞ்சு களிறு மடக்கிச் சுரும்பார் மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
வண்டு பாட மயிலால மான்கன்று துள்ள வரிக்
கொண்டை பாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

2. பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டோ டாறும் விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.

3. முந்திவந்து புரோதாய மூழ்கி முனிகள் பலர்
எந்தை பெம்மானென நின்றிறைஞ்சும் மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்த நாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.

4. உள்ளமிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும் மிடமென்பரால்
பிள்ளை துள்ளிக் கிளைபயில்வ கேட்டுப் பிரியாது போய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.

5. ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் இடமென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.

6. நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரை தன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும் மிடமென்பரால்
ஏறிமாவின் கனியும் பலாவின்னிருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையொ டுண்டுகளுங் கேதாரமே.

7. மடந்தை பாகத் தடக்கிம் மறையோதி வானோர் தொழத்
தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூசித்துதிரக் கல்லறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.

8. அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடத்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல் சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.

9. ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர்
தாழ்ந்ததந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால்
வீழந்து செற்று நிழற்கிறங்கும் வேழத்தின் வெண் மருப்பி
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்து திருங் கேதாரமே.

10. கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணா இடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங் கவர் வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

11. வாய்ந்த செந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்த நீர்க்கோட் டிமையோ ருறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே.

                                                                                                             
பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: தக்கேசி தலம்: திருவாரூர்.
ராகம்: காம்போதி சுத்தாங்கம்

1. பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி யொண்ணா
எம்மா நைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற் பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.

2. கட்ட மும்பிணி யுங்களை வானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
விரவி னால் விடுதற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூரானை மறக்கலு மாமே.

3. கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூ ரானை மறக்கலு மாமே.

4. செத்த போதினில் முன்னின்று நம்மைச்
சிலர்கள் கூடிச் சிரிப்பதின் முன்னம்
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
முத்தன் எங்கள் பிரானென்று வானோர்
தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரானெம்பி ரானை
ஆரூ ரானை மறக்கலு மாமே.

5. செறிவுண் டேல்மனத் தால்தெளி வுண்டேல்
தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண் டாழ்செயும் பொன்மலர்க் கொன்றை
பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
ஆரூ ரானை மறக்கலு மாமே.

6. பொள்ளல் இவ்வுட லைப்பொருள் என்று
பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை என்று
நாள்நா ளுமம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ நிப்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.

7. கரியா னைஉரி கொண்டகை யானைக்
கண்ணின் மேலொரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தங்களை வானை
மறையா நைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
ஒளியா னைஉகந் துள்கி நண்ணாதார்க்(கு)
அரியா னைஅடி யேற்கெளி யானை
ஆரூ ரானை மறக்கலு மாமே.

8. வாளா நின்று தொழும்அடி யார்கள்
வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மலர் இட்டுவ ணங்கார்
நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
ஆரூ ரானை மறக்கலு மாமே.

9. விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கி லேன்நெறி காணவு மாட்டேன்
கண்கு ழிந்திரப் பார்க்கையில் ஒன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
சடையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
ஆரூ ரானை மறக்கலு மாமே.

10. ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
கட்டி யைக்கரும் பிந்தெளி தன்னைக்
காதலாற் கடற் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூ ரானை மறக்கலு மாமே.

11. ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
உரைக்க லாம் பொருளாய் உடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
அம்மான் தன் திருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாய் உரை வல்லார்
அமர லோகத் திருப்பவர் தாமே.

                                                                                                                     
பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: தக்கேசி தலம்: திருக்கச்சி ஏகம்பம்.
ராகம்: காம்போதி தாளம்: ஆதி

ஆலந் தான் உகந் தமுதுசெய் தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண் அடி யேன்பெற்ற வாறே. 1.

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான் உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக் கொண்டானை
அற்ற மில்புக ழாள் உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்ற வாறே. 2.

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம நைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள் உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண் அடி யேன்பெற்ற வாறே. 3.

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்ட லம்புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை நந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண் அடி யேன்பெற்ற வாறே. 4.

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாளுமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடி யேன்பெற்ற வாறே. 5.

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுரை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்ற வாறே. 6.

விண்ண வர்தொழு தேத்த நின்றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாம் உகக் கின்ற பிரானை
எண்ணில் தொல்புக ழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்ற வாறே. 7.

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்ற வாறே. 8.

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பிய தக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்ற வாறே. 9.

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவர் கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கல் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்ற வாறே. 10.

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மானென்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண் அடியேன் பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர் பொழில் திருநாவலா ரூரன்
நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்
நன்னெறி உலகெய் துவர் தாமே. 11.

                                                                                                                     
பாடியவர்: திருஞானசம்பந்தர் 
பண்: தக்கராகம் தலம்: திருக்கோலக்கா 
ராகம்: காம்போதி தாளம்: ரூபகம்

1. மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

2. பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே.

3. பூணர் பொறிகொள் அரவம் புன்சடை
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.

4. தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுகொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

5. மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

6. வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

7. நிழலார் சோலை நீல வணிடினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே.

8. எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

9. நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

10. பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாவருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.

11. நலங்கொள் காழி ஞானசம்பந்தன்
குலங்கொள் கோலக் காவுளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

                                                                                                             
பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
பண்: புறநீர்மை தலம்: திருவாரூர்
ராகம்: பெளளி தாளம்: ஆதி

அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்த பராமரியாத் தென்திரு வாரூர் புக்(கு)
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. 1.

நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலர் இட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழும் தென்திரு வாரூர்புக்(கு)
என்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே. 2.

முன்னை முதற்பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும் மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக்(கு)
என்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே. 3.

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்திரு வாரூர்புக்(கு)
எல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே. 4.

கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியைவன் தலைவாய்
அடுபுலி ஆயையனை ஆதியை ஆரூர்புக்(கு)
இடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே. 5.

சூழ்ஒளி நீர்நிலந்தீத் தாள்வளி ஆகாசம்
வானுயர் வெங்கதிரோன் வண்தமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்(கு)
ஏழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே. 6.

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்
செம்பொனை நன்மணியைத் தென்திரு ஆரூர்புக்(கு)
என்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே. 7.

ஆறணி நீள்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்தலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்திரு ஆரூர்புக்(கு)
ஏறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே. 8.

மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக் (கு)
எண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே. 9.

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொல்மலர் கொண்டிட்டன பத்தும் வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே. 10.


பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: புறநீர்மை தலம்: திருக்குடலையாற்றூர்
ராகம்: பெளளி தாளம்: சாபு

1. வடிவுடை மழுஏந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடிஅணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடிஅணை நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

2. வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சொலைக் கூடலை யாற்றூரில்
ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

3. ஊர்தொறும் வெண்டலை கொண்டுண்பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்
ஆர்வன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

4. சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.

5. வேதியர் விண்ணவரும் மண்ணவ ரும்தொநற்
சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடும்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

6. வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முதன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தன் இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

7. மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்
இழைநுழை துகில் அல்குல் ஏந்திழை யாளொடும்
குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்
அழகன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே.

8. மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

9. வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே.

10. கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.


பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: பஞ்சமம் தலம்: திருப்பனந்தாள்
ராகம்: தாளம்: ரூபகம்

1. கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால் விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

2. விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந் தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

3. உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

4. சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல் பொங்கர வும்புனைந்த
தாழ்சடை யான்பனந் தாள் திருத் தாடகை யீச்சரமே.

5. விடம்படு கண்டத்தினான் இருள் வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன் எம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

6. விடையுயர் வெல்கொடியான் அடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துனெருக் கும்மணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

7. மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புரம் மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதி ஆடர வும்மணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

8. சென்றரக்கன் வலியைத் திருமெல்விரலால் அடர்த்து
முற்றும் வெண்ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் நுரி தோலொடு கோவணமும்
தற்றவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

9. வின்மலை நாணரவம் மிகு வெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர் தம்புரம் பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணும் நாரணனும் மறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

10. ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்
நீதர் உடைக்குமொழி யவை கொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ் புள்ளிரி யப்பொழில் வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

11. தண்வயல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையான் அவன் றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர் தமிவினை பற்றறுமே.

                                                             
பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: அந்தாளிக்குறிஞ்சி தலம்: திருநல்லூர் பெருமணம்
ராகம்: சாமா தாளம்: ஆதி

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேயநம் பானே. 1.

தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவை நல்லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத்தான் பெண்ணொர் பாகங் கொண்டானே. 2.

அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்
றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டு செய்வாரே. 3.

வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் திரிவிரி கோவணம்
நல்லியலார் தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கை யெம் புண்ணியனார்க்கே. 4.

ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
நீறுகந் தீர்நிரை யார்விரி தேன் கொன்றை
நாறுகந் தீர் திருநல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே. 5.

சிட்டப் பட்டார்க் கெளியான் செங்கண் வேட்டுவப்
பட்டங் கட்டுஞ் சென்னியான் பதியாவது
நட்டக் கொட்டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்திராலெம் பிரானிரே. 6.

மேகத்த கண்டன் எண் தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே. 7.

தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு வீரே. 8.

ஏலுந் தண்டாமரை யானும் இயல்புடை
மாலுந் தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந் தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந் தங் கோயில் புரிசடை யார்க்கே. 9.

ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன் தாள்தொழ வீடெளிதாமே. 10.

நறும் பொழிற் காழியுள் ஞானசம்பந்தன்
பெறும் பத நல்லூர்ப் பெருமணத்தானை
உறும் பொருளாற் சொன்ன வொண்தமிழ் வல்லார்க்
கறும் பழி பாவம் அவலம் இலரே. 11.

                                                                                                                                               
பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: காந்தாரம் தலம்: திருஆலவாய் 
ராகம்: நவ்ரோஜ் தாளம்: ரூபகம்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமைபங்கன் திருஆலவாயான் திருநீறே. 1.

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. 2.

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே. 3.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. 4.

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே. 5.

அருத்தம தாவது நீறு வவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. 6.

எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்லது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே. 7.

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவாயான் திருநீறே. 8.

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடிநீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மாலவாயான் திருநீறே. 9.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங்கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்தவர் பணிந் தேத்தும் ஆலவாயான் திருநீறே. 10.

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்ன நுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 11.

                                                                                                                                             
பாடியவர்: திருநாவுக்கரசு சுவாமிகள் 
பண்: காந்தாரம் தலம்: திருவையாறு 
ராகம்: நவ்ரோஜ் தாளம்: ரூபகம்
கயிலைக் காட்சி கண்டு பாடியது


1. மாதர்ப் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதன் மடப்பிடியோடுன்ம் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

2. போழிளம் கண்ணி யினானைப் பூந்துகி லாளோடும் பாடி
வாழியம் போற்றியென்று ஏத்தி வட்டமிட்டு ஆடவருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயாறடை கின்றபோது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

3. எரிப்பிறைக் கண்ணியினானை ஏந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்களிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித் தொழுகும் வெள்ளருவி ஐயாறடைகின்ற போது
வரிக்குயில் பேடையோடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

4. பிறையிளங் கண்ணியினாளைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயிலாலும் ஐயாறடைகின்ற போது
சிறையிளம் பேடையோடாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

5. ஏடு மதிக்கண்ணியானை ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயாறடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

6. தண்மதிக் கண்ணி யினானைத் தையல் நல்லளோடும் பாடி
உண்மெலி சிந்தையனாகி உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறைகின்ற ஐயாறடைகின்ற போது
வண்ணப் பகன்றிலோடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

7. கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயாறடைகின்ற போது
இடி குரல் அன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

8. விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயாறடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

9. முற்பிறைக் கண்ணியினானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிற்றுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்று நின்றாரோடு ஐயாறடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

10. திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பரந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

11. வளர்மதிக் கண்ணியி நானை வார்குழலாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோர் அன்போடு ஐயாறடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.


பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: பியந்தைக் காந்தாரம் தலம்: திருநெல்வாயில்
திருவரத்துறை

ராகம்: நவ்ரோஜ் தாளம்: சாபு

1. எந்தையீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்தமாமல ருந்திக் கடும்புனல் நிவா மல்கு கரைமேல்
அந்தண்சோலை நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

2. ஈரவார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தஎம் பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமலருந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

3. பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வதன்றால்
மணி கலந்து பொன்னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

4. துன்ன ஆடை யொன்றுடுத்துத் தூய வெண்ணீற்றினராகி
உன்னி நைபவர்க்கல்லால் ஒன்றுங்கை கூடுவறால்
பொன்னும் மாமணி யுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்ன மாரு நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

5. வெருகுரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலனென்றுள்கி
உருகி நைபவர்க்கல்லால் ஒன்றுங்கை கூடுவதன்றால்
முருகுரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்திழிநிவாவந்
தருகுரிஞ்சு நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

6. உரவு நீர்ச்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந்தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவதன்றால்
குரவம் நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாரு நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

7. நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கோல மாமலருந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலை நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

8. செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங் கனிசுமந் துந்திக்குளிர் புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலை நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

9. துணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரியானை
வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவதன்றால்
மணங்க மழ்ந்து பொன்னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலை நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

10. சாக்கி யப்படுவாருஞ் சமண் படுவார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச் செல்வதன்றால்
பூக்க மழ்ந்து பொன் னுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலை நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே.

11. கறையி நார்பொழில் சூழந்த காழியுள் ஞானசம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை யடிகள் தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லைப் பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.

பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: பியந்தைக் காந்தாரம் கோளறு திருப்பதிகம்
திஸ்ர திரிபுடை

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 1.

என்பொடு கொம்பொடாமை யிவைமார்பிலங்க எருதேறியேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றோடேழு பதினெட்டோ டாறும் உடனாயநாள்கள வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 2.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்துவுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 3.

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனொடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 4.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிக்கொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 5.

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்லநல்ல அடியா ரவர்க்கு மிகவே. 6.

செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக விடையேறு செல்வ நடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் ரவர்க்கு மிகவே. 7.

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடு உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரயன்ற நோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்லநல்ல அடியா ரவர்க்கு மிகவே. 8.

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்லநல்ல அடியா ரவர்க்கு மிகவே. 9.

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியா ரவர்க்கு மிகவே. 10.

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளு நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. 11.
                                                                                                                                 

பாடியவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
பண்: கொல்லி தலம்: திருஅதிகை வீரட்டானம்.
ராகம்: நவ்ரோஜ் தாளம்: ஆதி

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேனடி யேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 1.

நெஞ்சமுமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சமிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கருந்துமிடீர்
அஞ்சேலுமென் நீர் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 2.

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேறுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்(டு)
அணிந்தீரடி கேளதி கைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே. 3.

முன்னம்அடி யேன் அறியாமையினால் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்,
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடனாவதுதான்
அன்னநடை யார் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 4.

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொள்ளென்று சொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தைஇது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனலார் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 5.

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்நாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 6.

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலிலாமையினால்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்,
பயந்தேஎன் வயிற்றி நகம்படியே பறித்துப் புரட்டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டனத்துறை அம்மானே. 7.

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனமொன்று மிலாமையினால்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்,
கலித்தேஎன் வயிறினகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன,
அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 8.

பொன்போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன்சடையீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவலைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
என்போலிகளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 9.

போர்த்தாயங் கொரானையின் ஈருரிதோல் புறங்காடரங்கா நடமாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தாலென் வேதனை யான் விலக்கியிடாய்,
ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. 10.

                                                         
பாடியவர்: திருஞானசம்பந்தர் 
பண்: கொல்லி தலம்: திருப்பிரம்மபுரம் 
ராகம்: நவ்ரோஜ் தாளம்: ஆதி

1. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

2. போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.

3. தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

4. அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.

5. அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

6. மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.

7. குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.

8. அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள் செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.

9. நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

10. தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆருறு சொற்களைந் தடியிணை யடைந் துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.

11. கருந்தடந் தேன் மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன் செந்தமிழ்
விரும்புவா ரவர்கள் போய் விண்ணுல காள்வரே.

                                                                                                                   
பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருத்தொண்டத்தொகை
பண்: கொல்லிக்கெளவாணம் தலம்: திருவாரூர்
ராகம்: நவ்ரோஜ் தாளம்: ஜம்ப

1. தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

2. இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள் வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

3. மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

4. திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

5. வம்பற வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

6. வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்எறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வெற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

7. பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கு மடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

8. கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

9. கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கு மடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

10. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தர்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

11. மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டுவப்பர்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே.

                                                                               
பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: பழம்பஞ்சுரம் தலம்: திருவாரூர்.
ராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி

ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும்
துரிசுகளுக் குடனாகி
மாழை ஒண்கண் பரவையைத் தந்
தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.


பாடியவர்: திருஞானசம்பந்தர் 
பண்: மேகராகக்குறிஞ்சி தலம்: திருப்பராய்த்துறை 
ராகம்: நீலாம்பரி தாளம்: திரிபுடை

1. நீறுசேர்வதொர் மேனியர் நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.

2. கந்தமாமலர்க் கொன்றை கமழ்சடை
வந்த பூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.

3. வேதர்வேத மெல்லாம் முறையால்விரித்
தோதநின்ற வொருவனார்
பாதிபெண்ணுரு ஆவர் பராய்த்துறை
ஆதியாய அடிகளே.

4. தோலுந்தம் அரையாடை சுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும் நெய்பயின்றாடு பராய்த்துறை
ஆலநீழல் அடிகளே.

5. விரவிநீறு மெய்பூசுவர் மேனிமேல்
இரவில் நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம் பராய்த்துறை
அரவமார்ந்த அடிகளே.

6. மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே.

7. விடையும் ஏறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.

8. தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும் பராய்த்துறை
அரக்கன்றன்ன அடிகளே.

9. நாற்றமாமல ரானொடு மாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார் வினையான பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.

10. திருவிலிச் சில தேரமண் ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலால் எயில் எய்து பராய்த்துறை
மருவினான் றனை வாழ்த்துமே.

11. செல்வ மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர் மேற் சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன் செந்தமிழ்
செல்வ மாமிவை செப்பவே.

பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: யாழ்மூரி தலம்: திருத்தருமபுரம்
ராகம்: நீலாம்பரி தாளம்: ரூபகம்                                                           

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலமகள் துணையென மகிழ்வர்
பூத இனப்படைநின் றிசைபாடவும் ஆடுவர்
அவர் படர் சடந் நெடு முடியதொர் புனலா
வேதமொ டேழிசைபா டுவராழ்கடல் வெண்டிரை
யிரந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சில்றை வண்டறை
யெழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதே. 1.

பொங்குந டைப்புகலில் விடை யாமவர் ஊர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புபூணநூல் புரள
மங்குலி டைத் தவழும் மதி சூடுவர் ஆடுவர்
வளங் கிளர் புனல் அர வம்வைகிய சடையர்
சங்குக டல்திரையால் உதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் திதிலம் எல்லிருள் ஒல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழில் தரும்பு ரம்பதியே. 2.

விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ
டுவர் விரி சுரி யொளி கொள்தோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளிருங் கதிர் மெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின் றவர் தம் முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையப் பிணந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மெளவல்ம ருங்கலர்
கருங் கழிந் நெருங் குநல் தருமபு ரம்பதியே. 3.

வாருறு மென் முலைநன் நுதல் ஏழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழைபொழில் மழந் நுழை தருமபு ரம்பதியே. 4.

நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடல் தடர்த் தபெற்றியா ரறிவார்
ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் நிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மகள் ஊர்வது போர்விடை
கடி படு செடி பொழில் தருமபு ரம்பதியே. 5.

கூழையங் கோதைகுலா யவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் எள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃகறை யுறந்நறவ்வி ரியுந்நல்
தாழையும் ஞாழலுந்நீ டிய கானலி நள்ளலி
சைபுள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே. 6.

தேமரு வார்குழல் அன் நநடைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடையில் துதை வெண்மதி துன்றுகொன்
றைதொல் புனல் சிரங் கரந் திரித்ததோ லுடையர்
காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங்
கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே
தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறில் வயல் தருமபு ரம்பதியே. 7.

தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்புயம் அணிவர்
கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையார்
கொலைம் மலி படை யொர்சூ லமேந்திய குழகர்
பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடையெம் அடி கட்கிடம் வந்தடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே. 8.

வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்
கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை
குனி சிலை தனிம் மலை யதேந்திய குழகர்
ஆர்மலி யாழிகொள்செல் வனும் அல்லிகொள் தாமரைம்
மிசை யவன் அடிம்முடி யளவுதாம் அறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. 9.

புத்தர்கள் தத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர்
பத்தர்க ளத்தவமெய்ப் பயனாகவு கந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகையொண் மலைமாதுமை பொன்னணி
புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திரளுந் தியமால்கட லோதம்வந்
தடர்ந் திடுந் தடம் பொழில் தருமபு ரம்பதியே. 10.

பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ
பொரூஉ புனல் திரூஉ அமர் புகல்லியென் றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம்பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடல் தருமபுரம் பதியைப்
பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை
யவன் பிணைதுணை கழல் கள்பேணுத லுரியார்
இன்னெடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும்
உறு வர்கள் இடர் பிணி துயரணைவ் விலரே. 11.

                                                                                                                         
பாடியவர்: திருநாவுக்கரசர்
பண்: பழந்தக்கராகம் தலம்: திருப்பழனம்
ராகம்: ஆரபி தாளம்: திரிபுடை

1. சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன் என் புதுநலமுண் டிகழ்வானோ.

2. கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாந் தடம்மூழ்கி மற்றவனென் தளிர் வண்ணம்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.

3. மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைம்மா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.

4. புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.

5. மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபெறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனைஎன்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ.

6. பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேரும்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.

7. துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோவாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற் கடிஅரணம் பொடிசெய்த
இணையார மார்பன் என் எழில்நலமுண் டிகழ்வானோ.

8. கூவைவாய் மணிவான்றிக் கொழித்தோடுங் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

9. புள்ளிமான் பொறிஅரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாம்
கள்ளியேன் நான் இவற்கென் கனவளையுங் கடவேனோ.

10. வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.


பாடியவர்: திருஞானசம்பந்தர் 
பண்: பழந்தக்கராகம் தலம்: திருத்தோணிபுரம்
ராகம்: சுத்தசாவேரி தாளம்: திரிபுட

சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்,
துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம்,
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. (10ஆம் பாட்டு)


பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: குறிஞ்சி தலம்: திருவீழிமிழலை
ராகம்: அரிகாம்போதி தாளம்: த்ரிபுட

1. வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

2. இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

3. செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

4. நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

5. காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.

6. பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

7. மங்கை பங்கினீர், துங்கர் மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

8. அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

9. அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

10. பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.

11. காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.


பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: நட்டராகம் தலம்: திருமழபாடி
ராகம்: பந்துவராளி தாளம்: ரூபகம்

1. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

2. கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசிஉன்தன்
தாளே வந்தடைந்தேன் தலைவாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

3. எம்மான் எம்மனையென் தனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மாயப் பிறவி பிறந்தே இறந்தெய்த் தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

4. பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

5. கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இந்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

6. நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்தனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்க
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

7. சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே
மைந்தார் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

8. வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாம்
செய்ய மலர்கள்இட மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.

9. நெறியே நின்மலனே நெடுமால் அயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே கொடியேரிடையாள் தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

10. ஏரார் முப்புறமும் எரியச்சிலை தொட்டனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.


பாடியவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
பண்: சாதாரி தலம்: பொதுத் தேவாரம் 
ராகம்: பந்துவராளி தாளம்: ரூபகம்

தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய். 1.

கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான் றன்னைக் கண்காள் காண்மின்களோ. 2.

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல்
மேனிப்பிரான் திறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ 3.

மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை,
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய். 4.

வாயே வாழ்த்து கண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய். 5.

நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய். 6.

கைகாள் கூப்பித் தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர் 7.

ஆக்கையாற் பயனென் - அரன் கோயில் வலம்வந்து,
பூக்கையால் அட்டிப் போற்றி யென்னத இவ் ஆக்கையாற் பயனென். 8.

கால்களாற் பயனென் - கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயனென் 9.

உற்றாராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றார் ஆருளரோ 10.

இறுமாந் திருப்பன் கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்திதன் சேவைக்கீழ்ச் சென்றங் கிறுமாந்திருப்பன் கொலோ 11.

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித்தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன் 12.


பாடியவர்: திருஞானசம்பந்தர்.
பண்: வியாழக்குறிஞ்சி தலம்: திருச்செங்கோடு
ராகம்: யதுகுலகாம்போதி தாளம்: ஆதி

(இது திருநீலகண்டத்தைச் சுட்டித் திருச்செங்கோட்டில் அடியார்களுக்கு நேர்ந்த நளிர்சுரம் நீங்கப் பாடியருளியதாகும். இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று)


அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே,
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்,
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம். 1.

காவினை யிட்டுங் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினை யால்யில் மூன்றெரித் தீரென்றிரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம். 2.

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம். 3.

விண்ணுல காள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே,
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெரா திருநீலகண்டம். 4.

மற்றிணை யில்லாமலை திரண்டன்ன திண்டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளாதொழிவனுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடியே யடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டெப்பெறா திருநீலகண்டம். 5.

மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்,
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம். 6.7.

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவில் அரக்கனைச் சீரிலடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம். 8.

நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப் பெறா திருநீலகண்டம். 9.

சாக்கியப் பட்டுஞ் சமணுருவாகி யுடையொழிந்தும்
பாக்கியமின்றி யிருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். 10.

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. 11.


பாடியவர்: திருநாவுக்கரசர் 
பண்: இந்தளம் தலம்: திருப்பழனம்
ராகம்: மாயாமாளவகெளள தாளம்: ஆதி

1. ஒன்று கொலாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்று கொலா முயரும் மதிசூடுவர்
ஒன்று கொலாமிடு வெண்டலை கையது
ஒன்று கொலாமவர் ஊர்வது தானே.

2. இரண்டு கொலாமிமையோர் தொழுபாதம்
இரண்டு கொலாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டு கொலா முருவஞ்சிறு மான்மழு
இரண்டு கொலாமவர் எய்தின தாமே.

3. மூன்று கொலாமவர் கண்ணுத லாவன
மூன்று கொலாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாங்கணை கையது வில்நாண்
மூன்று கொலாம்புர மெய்தனர் தாமே.

4. நாலு கொலாமவர் தம்முக மாவன
நாலு கொலாஞ்சனனம் முதற் றோற்றமும்
நாலு கொலாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாமறை பாடின தாமே.

5. அஞ்சு கொலாமவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாமவர் வெல்புலனாவன
அஞ்சு கொலாமவர் காயப்பட்டான் கணை
அஞ்சு கொலாமவர் ஆடின தாமே.

6. ஆறு கொலாமவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாமவர் தம் மகனார் முகம்
ஆறு கொலாமவர் தார்மிசை விண்டின்கால்
ஆறு கொலாஞ்சுவை யாக்கின தாமே.

7. ஏழு கொலாமவர் ஊழி படைத்தன
ஏழு கொலாமவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாமவர் ஆளு முலகங்கள்
ஏழு கொலாம் இசை யாக்கின தாமே.

8. எட்டுக் கொலாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக் கொலாமவர் சூடு மினமலர்
எட்டுக் கொலாமவர் தோளிணை யாவன
எட்டுக் கொலாந்திசை யாக்கின தாமே.

9. ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.

10. பத்துக் கொலாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக் கொலாமெயி றுன்நெரிந் துக்கன
பத்துக் கொலாமவர் காயப்பட் டாந்தலை
பத்துக் கொலாமடியார் செய்கை தானே.


பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: இந்தளம் தலம்: திருவெண்ணெய்நல்லூர்
ராகம்: மாயாமாளவகெளளை தாளம்: ரூபகம்

1. பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக் காளாயினிஅல்லேன் எனல் ஆமே.

2. நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத் துன்னைப்
பேயாய்த் திரிந் தெய்த்தேன் பெறலாகா வருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
ஆயா உனக் காளாயினி அல்லேன் எனல் ஆமே.

3. மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னைப்
பொன்னே மணிதானே வயிரம்மே பொருதுந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அன்னே உனக் காளாய் இனிஅல்லேன் எனல் ஆமே.

4. முடியேன் இனிப் பிறவென்பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள் நீ
செடியார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அடிகேளுனக் காளாயினிஅல்லேன் எனல் ஆமே.

5. பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் மது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அரு ளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
ஆதீ உனக் காளாய் இனி அல்லேன் எனல் ஆமே.

6. தண்ணார் மதி சூடீ தழல் போலும் திருமேனீ
எண்ணார்புரம் மூன்றும் எரி உண்ணநகை செய்தாய்
மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அண்ணா உனக் காளாயினி அல்லேன் எனல் ஆமே.

7. ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகானாய்
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய்
தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய் உனக் காளாய் இனி அல்லேன் எனல் ஆமே.

8. ஏற்றார் புரம் மூன்றும் எரி உண்ணச் சிலை தொட்டாய்
தேற்றா தன சொல்லித் திரிவேனோ செக்கர் வானீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
ஆற்றா யுனக் காளாயினி அல்லேன் எனல் ஆமே.

9. மழுவாள் வலன் ஏந்தீ மறை ஓதீ மங்கை பங்கா
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன் தொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அழகா உனக் காளாயினி அல்லேன் எனல் ஆமே.

10. காரூர் புனல் எய்திக் கரைகல்லித் திரைக் கையால்
பாரூர் புகழ் எய்தித் திகழ் பன் மாமணி உந்திச்
சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூ ரருட்டுறையுள்
ஆரூரன் எம்பெரு மாற்காள் அல்லேன் எனல் ஆமே.


பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: காந்தாரபஞ்சமம் தலம்: திருவாவடுதுறை 
ராகம்: கேதாரகெளளை தாளம்: ஆதி

இடரினுந் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 1.

வாழினுஞ் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 2.

நனவினும் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 3.

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றா தென்நாக்
கைமல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 4.

கையது வீழினுங் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 5.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவு கொண்டரைக் கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 6.

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றதென்நா
ஒப்புடை யொருவனை யுருவழிய
அப்படி யழலெழ விழித்தவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 7.

பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழல் அலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 8.

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே 9.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள் செய்து பயின்றவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 10.

அலைபுனல் ஆவடுதுறை யமர்ந்த
இலைநுனை வேற்படை யெம் இறையை
நலம்மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் நேறுவர் நிலமிசை நிலையிலரே. 11.


பாடியவர்: திருநாவுக்கரசு சுவாமிகள் 
பண்: காந்தார பஞ்சமம் நமச்சிவாய திருப்பதிகம்
ராகம்: கேதாரகெளளை தாளம்: ஆதி

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே. 1.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே. 2.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சிவாயவே. 3.

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே. 4.

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே. 5.

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே. 6.

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே நோடிச் சென்றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. 7.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே. 8.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசரணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சிவாயவே. 9.

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப்பத்(து)
ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. 10.

பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: காந்தார பஞ்சமம். தலம்: திருவையாறு
ராகம்: கேதாரகெளளை தாளம்: ஆதி

1. பரவும் பரிசொன் றறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன் நான்
கரவில் அருவி கமுகுண்ணத்தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

2. எங்கே போவேனாயிடினும்அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை ஒன்றும் இன்றியேதலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேற் கரந்தானேகலைமான் மறியுங் கனல் மழுவும்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

3. மருவிப் பிரிய மாட்டேன் நான்வழி நின்றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற்பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஒப்பிக் கிளிகடிவார்குழல்மேல் மாலை கொண்டோட்டந்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

4. பழகா நின்று பணிசெய்வார்பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழாது மக்காட் பட்டோர்க்குவேக படமொன் றரைச்சார்த்தி
குழகா வாழைக் குலைத் தெங்குகொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

5. பிழைத்த பிழைஒன் றறியேன்நான்பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாடமலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்கும்கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

6. கார்க்கொள் கொன்றை சடைமேலொன்றுடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமுன் றெரிசெய்தாய்முன்னீ பின்னீ முதல்வன் நீ
வார்க்கொள் அருவி பலவாரிமணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

7. மலைக்கண் மடவான் ஒருபாலாய்ப்பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயிலெய்தசெங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் அருவி பலவாரிமணியும் முத்தும் பொன்னும் கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

8. போழும் மதியும் புனக்கொன்றைப்புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீஉன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கேவைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

9. கதிர்க்கொள் பசியே ஒத்தேநான்கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழியவெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

10. கூசி அடியார் இருந்தாலும்குணம் ஒன்றில்லீர் குறிப்பிலீர்
தேச வேந்தன் திருமாலும்மலர்மேல் அயனுங் காண்கிலாத்
தேசம் எங்குந் தெளித்தாடத்தெண்ணீர் அருவி கொணர்ந்தேங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.

11. கூடி அடியார் இருந்தாலும்குணம் ஒன்றில்லீர் குறிப்பிலீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன்திருவாரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ.


பாடியவர்: திருஞானசம்பந்தர்
பண்: கெளசிகம் தலம்: திருவானைக்கா
ராகம்: பைரவி தாளம்: ரூபகம்

வானைக்காவில் வெண்மதி மல்கு புல்குவார் சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம் இல்லையே. 1.

சேறுபட்ட தண்வயற் சென்று சென்று சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே. 2.

தாரமாய மாதராள் தானொர் பாக மாயினான்
ஈரமாய புன்சடை யேற்ற திங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே. 3.

விண்ணின ண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ண வெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
அண்ணல் கண்ணொர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும் இல்லையே. 4.

வெய்ய பாவங் கைவிட வேண்டு வீர்கள் ஆண்டசீர்
மைகொள் கண்டன் வெய்ய தீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று சென்னியெம்
ஐயன் மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே. 5.

நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும் பெண்ணுமாகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணுங் கண்ணு மூன்றுடைக் கறைகொள் மிடறன் அல்லனே. 6.

கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும் விண்ணுங் கைதொழப் பாயுங் கங்கை செஞ்சடை
ஆரநீரொ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே. 7.

பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே. 8.

ஊனொடுண்டல் நன்றென வூனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்
றானொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே. 9.

கையிலுண்ணுங் கையருங் கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார்
தையல் பாகமாயினான் தழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே. 10.

ஊழியூழி வையகத் துயிர்கள் தோற்றும் வானொடும்
ஆழியானுங் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச் சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே. 11.


பாடியவர்: திருஞானசம்பந்தர் 
பண்: சீகாமரம் தலம்: திருமயிலாப்பூர் 
ராகம்: நாதநாமக்ரியா தாளம்: திரிபுட

மட்டிட்ட புன்னை யங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 1.

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 3.

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் தொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 4.

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையோர் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 5.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிகளடி பரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 6.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 7.

தண்ணா அரக்கந்தோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள் தம் அட்டமி நாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 8.

நற்றா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 9.

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 10.

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம்பந்தத் தவரோடும் வாழ்வாரே. 11.


பாடியவர்: சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பண்: செந்துருத்தி தலம்: திருவாரூர்
ராகம்: மத்தியமாவதி தாளம்: ஆதி

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே. 1.

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை ஆக்கினீர்
ஏற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. 2.

அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்தகாலி யவைபோல
என்றும் முட்டப் பாடும் அடியார் தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே. 3.

துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறை ஆள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே எனவேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதீரே. 4.

செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று) உமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது
வந்ததெம் பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே. 5.

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே. 6.

ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமாறுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே. 7.

கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம்
பழிதான் ஆவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே. 8.

பேயோ டேனும் பிறிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 9.

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லட்டா நம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதீரே. 10.

காரூர் கண்டத் தெண்டோள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லட்டானத்தே அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங்கொண்டீர் வாழ்ந்து போதீரே. 11.


பாடியவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
திருக்குறுந்தொகை.
ராகம்: நாதநாமக்கிரியா

பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்ட இப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணிபுரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே.

பாடியவர்: திருநாவுக்கரசு சுவாமிகள் 
திருவையாறு - திருத்தாண்டகம்.
பண்: தக்கேசி தலம்: திருவையாறு.
ராகம்: ஹரிகாம்போதி

ஓசை யொலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 1.

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ 2.

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே, மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 3.

வானுற்ற மாமலைக ளானாய் நீயே வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே ஒளி மதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மடவாள் பங்கன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 4.

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 5.

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே கற்றவர்க்கோர் கற்கமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6.

எல்லா வுலகமு மானாய் நீயே யேகம்பம் மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 7.

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர்க்கோலங் கொண்டெயிலெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 8.

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே திருவையாறகலாத செம்பொற் சோதீ. 9.

விண்டார் பரமூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே காலங்கா ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூமலர்ச் சேவடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 10.

ஆரு மறியா இடத்தாய் நீயே ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே ஒண்தாமரையானும் மாலுங் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 11.

பாடியவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
திருத்தாண்டகம். பண்: தக்கேசி. ராகம்: அரிகாம்போதி.
தலம்: மதுரை

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக்
கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றாந்தன்னைச் சுடர்த்திங்கட்
சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத் தலையாய
தேவாதி தேவர்க்கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே
சிந்திக்கப் பெற்றேன் நானே.



பாடியவர்: திருநாவுக்கரசர்
திருநேரிசை தலம்: திருவாலவாய்

வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென்(று)
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செ யாயே. 1.

நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள்செ யாயே. 2.

ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமர்ந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமர்ந் தால வாயில் அப்பனே அருள்செ யாயே. 3.

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. 4.

வெண்டலை கையில் ஏந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. 5.

எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்(கு)
அஞ்சலென் றால வாயில் அப்பனே அருள்செ யாயே. 6.

வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேன்உன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. 7.

நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. 8.

நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நிந்தாள் கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. 9.

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் தாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. 10.


பாடியவர்: திருநாவுக்கரசர்
திருவிருத்தம்

சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும் ஐயாறன் அடித்தலமே.

திருவாசகம்
கோயில் திருப்பதிகம்

தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச்
சங்கரா ஆர் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.

திருப்புகழ்

அதலசேட னாராட வகிலமேரு மீதாட
வபினகாளி தானாட வவளோடன்

றதிரவீசி வாதாடும் விடையிலேறு வாராட
வருகுபூத வேதாள மவையாட

மதுரவாணி தானாட மலரில்வேத னாராட
மருவுவானு ளோராட மதியாட

வனசமாமி யாராட நெடியமாம னாராட
மயிலுமாடி நீயாடி வரவேணும்

கதைவிடாத தோள்வீம னெதிர்கொள்வாளி யால்நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாகக்

கதறுகாலி போய்மீள விசயனேறு தேர்மீது
கனகவேதி கோடூதி யலைமோது

முததிமீதி லேசாயு முலகமூடு சீர்பாத
வுவணமூர்தி மாமாயன் மருகோனே

யுதயதாம மார்பான ப்ரபுடதேவ மாராஜ
நுளமுமாட வாழ்தேவர் பெருமாளே

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலக மெல்லாம்.

-- கச்சியப்ப சிவாச்சாரியார்.