பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 5, 2011

என்.சி.வசந்தகோகிலம்

என்.சி.வசந்தகோகிலம்

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் ஒரு இனிய குரலுக்குச் சொந்தக்கார பாடகி ஒருவர் இருந்தார். அவர்தான் என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி. நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்தகோகிலம் என்பது இவரது முழுப்பெயர். இன்னிசை பாடி புகழ் பெற்ற காரணத்தால் அவருக்கு இந்தப் பெயரை இட்டார்களோ என்னவோ தெரியவில்லை பிறந்தபோது இவருக்கு இட்ட பெயர் காமாக்ஷி. பிறந்த ஊர் இப்போதைய கேரள மாநிலத்தில் கொச்சி சமஸ்தானத்துக்குட்பட்ட இரிஞ்சாலக்குடா எனும் ஊர். அவர் இந்த பூமியில் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறைவு. இளம் வயதில், தனது 32ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்துவிட்ட இந்தப் பாடகி முழு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் புகழின் உச்சிக்கே சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

இவர் பிறந்தது 1919ஆம் ஆண்டில். காலமானது 1951 நவம்பர் 8ஆம் தேதி. கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ் பெற்றது மட்டுமல்ல, திரைப்படங்களிலும் அந்த நாளில் பாடி நடித்தும் புகழ் பெற்றார். கர்நாடக சங்கீதத்தில் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய சுத்தானந்த பாரதியாரின் பாடல்களையும் இவர் பாடி பிரபலப் படுத்தியிருக்கிறார்.

கேரளத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலிருந்த நாகைப்பட்டினத்துக்குக் குடிபெயர்ந்தார். இவர்கள் குடும்பம் நாகை வந்த பிறகு காமாக்ஷியை சங்கீதம் கற்றுக்கொள்ள கோபால ஐயர் என்பவரிடம் அனுப்பி வைத்தனர். இந்த கோபால ஐயர் ஹரிகதை வித்வான்களுக்குப் பக்க வாத்தியம் வாசித்து வந்தவர். 1936இல், இவரது 17ஆவது வயதில் இவர் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அதற்குள் இவர் கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால், சென்னை சென்றவுடன் பல இடங்களில் கச்சேரி செய்ய அழைக்கப்பட்டார். இவருடைய இனிய குரலும், அழகிய தோற்றமும், இவர் பாடும் கச்சேரிகளுக்கு மக்கள் வெள்ளம் போல் வரத் தொடங்கினர். இவர் கச்சேரி எங்கு நடந்தாலும் சென்னையில் பல இசை ரசிகர்கள் அங்கு கூடத் தொடங்கினர். சென்னையிலிருந்த பிரபலமான சபாக்களிலெல்லாம் இவரது இசைக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1938இல் சென்னை மியூசிக் அகாதமியின் ஆண்டு விழாவில் இவர் வாய்ப்பாட்டுக்காக முதல் பரிசினைப் பெற்றார். அந்த விழாவுக்குத் தலைமை தாங்கியவர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்.

வசந்தகோகிலத்துக்குத் தேனினும் இனிய குரல். நல்ல சுருதியோடு கூடிய பாடும் திறமை. பாட்டிலுள்ள நவரசங்களும் குரலில் வரும்படி பாடும் திறன். சரியான உச்சரிப்பு. எந்த ஸ்தாயியிலும் சிரமமின்றி பாடும் அசாதாரண குரல் வளம், இவை அனைத்தும் வசந்தகோகிலத்தை புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லத் தொடங்கியது.

பொதுவாக தெலுங்கு மொழியிலும், சம்ஸ்கிருத மொழியிலும் அமைந்த பாடல்களையே பிரபலமான வித்வான்கள் பாடிவந்த நிலையில் வசந்தகோகிலம் தமிழில் அமைந்த பல அருமையான கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தத் தொடங்கினார். இவருடைய கச்சேரி என்றால் அதிக அளவிலான தமிழ்ப் பாடல்களைக் கேட்க முடியும் என்றே பல ரசிகர்கள் வந்து கூடுவார்கள். சென்னை தமிழிசைச் சங்கம் நடத்தும் இசை விழாவில் இவருக்குத் தவறாமல் வாய்ப்பு கொடுத்து வந்தார்கள். தமிழிசை இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்த அந்த நாட்களில் தமிழில் சாகித்தியங்களை அதிகம் பாடும் இவருக்கு அதிக வரவேற்பு இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைஞர்களை அழைக்கும் பல சபாக்களில் இவர் சென்று பாடியிருக்கிறார்.

திருவையாற்றிலும் வேறு இடங்களிலும் நடைபெற்ற சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா இசை நிகழ்ச்சிகளிலும் இவர் தொடர்ந்து பல ஆண்டுகள் கலந்து கொண்டிருக்கிறார். திருவையாற்றுக்கு விடாமல் தொடர்ந்து 1942 முதல் 1951 வரை வந்து பங்கு பெற்றிருக்கிறார். அவருடைய காலத்தில் சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஒரு சில வித்வான்களில் வசந்தகோகிலமும் ஒருவர். இவருடைய இனிய குரலால் ஈர்க்கப்பட்டு இசைத்தட்டு கம்பெனிகள் இவரது பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்தார்கள். கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல், தனிப்பாடல்கள் கொண்ட இசைத்தட்டுக்களும் வெளியாகின. இவருடைய இன்னிசைக்காக இவருக்கு "மதுரகீதவாணி" எனும் விருதினை வழங்கி கெளரவித்தார்கள். இந்த விருதை இவருக்கு வழங்கியவர் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்வான் டைகர் வரதாச்சாரியார் ஆவார்.
இவர் பாடி வெளியான பாடல்கள் அனேகம். இன்றும்கூட அந்தப் பாடல் பெயரைச் சொன்னால் கேட்கத் துடிக்கும் இசைப் பிரியர்கள் ஏராளம். அவர் பாடி புகழ் பெற்ற சில பாடல்கள்:--

"ஏன் பள்ளி கொண்டீரையா?",
"தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா?",
"நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி?",
"மகாலக்ஷ்மி ஜகன்மாதா",
"ஆனந்த நடனம் ஆடினார்",
"ஆசை கொண்டேன் வண்டே",
"தித்திக்கும் செந்தமிழால்",
"அந்த நாள் இனி வருமோ?",
"வருவானோ வனக்குயிலே?",
"ஆடு ராட்டே",
"சரஸதள நயனா",
"இந்த வரம் தருவாய்",
"நீ தயராதா",

இப்படிப் பல பாடல்கள் பிரபலமானவை. சினிமா பாடல்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. சினிமாவில் இவர் பாடி வெளியானவை அத்தனையும் புகழ்பெற்று விட்டன. அந்தப் பாடல்களை அந்தக் காலத்தில் முணுமுணுக்காதவர்களே இருக்கமுடியாது. தமிழ்நாட்டு சினிமாத் துறையில் இவரும் இவரது பாடல்களும் புகழ் பெற்று விளங்கியது. இவரது புகழ் பெற்ற சினிமா பாடல்கள் சில:-

"எப்போ வருவாரோ, எந்தன் கலி தீர",
"இன்பம் இன்பம் ஜகமெங்கும்",
மகாகவி பாரதியின் "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்",
"குழலோசை கேட்குதம்மா",
"கலைவாணி அருள் புரிவாய்",
"ஆனந்தம் அளவில்லா மிக ஆனந்தம்",
"இதுவென்ன வேதனை?",
"கதிரவன் உதயம் கண்டு கமலங்கள் முகம் மலரும்",
"கண்ணா வா மணிவண்ணா வா",
"எனது மனம் துள்ளி விளையாடுதே",
"எனது உயிர் நாதன் இருதயம் நொந்து என்னைப் பிரிந்தான்",
"சுந்தரானந்த வைகுந்த முகுந்தா",
"புவி மேது தவ ஞானியே உயர் புகழ் மேவும் பெரியோர் தன்பால்",
"பொய்தவழும் மாயப்புவி வாழ்வு",
"பொறுமைக் கடலாகிய பூமாதேவி"

இப்படி பல பாடல்களைச் சொல்லலாம்.

இசை உலகம் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்தார் என்பதைக் கண்டோமல்லவா. 1940இல் "சந்திரகுப்த சாணக்கியா" எனும் படத்தில் இவர் இளவரசி சாயா தேவியாக நடித்தார். தொடர்ந்து அதே ஆண்டில் "வேணுகானம்", 1942இல் "கங்காவதார்", 1944இல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்", 1946இல் ஹொன்னப்ப பாகவதர் நடித்த "வால்மீகி", "குண்டலகேசி" ஆகிய படங்களில் நடித்தார். 1950இல் இவருடைய கடைசி படமான "கிருஷ்ண விஜயம்" வெளியாகியது.

இவர் காலமாகி இப்போது அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டபடியால் இவருடைய பாடல்கள் அதிகம் கிடைப்பதில்லை. எங்கோ ஒரு சில பாடல்கள் கிடைத்தாலும் அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவருடைய சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருக்கவில்லை. இவரை மணந்து கொண்டவர் இவரது இசை வாழ்க்கையை அவ்வளவாக வரவேற்கவில்லை. இந்த இணை பிரிந்தது. பிறகு இவர் திரைப்படத் துறையைச் சேர்ந்த C.K.சதாசிவம் என்பவரை மணந்து கொண்டு வாழ்ந்தார். இவரது இளம் வயதில், தமிழ்நாட்டு இசை உலகின் துரதிர்ஷ்டம் இவருக்குக் காசநோய் பற்றிக் கொண்டது. 1951இல் இவரது முப்பத்திரெண்டாவது வயதில் சென்னை கோபாலபுரத்தில் இருந்த இவரது இல்லத்தில் இவர் காலமானார். இந்த இளம் குயிலின் தேன் குரல் இசையுலகத்தில் என்றும் நிறைந்திருக்கும். வாழ்க வசந்த கோகிலம் புகழ்!

No comments:

Post a Comment

You can give your comments here