கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றவுடன், என்னடா இது! ஒரு திரைப்பட நகைச்சுவை நடிகரைப் பற்றியதல்லவா இந்தக் கட்டுரை என்று இளைஞர் சமுதாயத்தைச் சார்ந்த யாராவது சிலர் கேட்டுவிடலாம். ஆகையால் எடுத்த எடுப்பிலேயே, ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெளிவு படுத்த விரும்புகிறேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண சினிமா நடிகர் மட்டும் அல்ல! அவருடைய பன்முகப் பெருமைகள் அதிகம். அவரையும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போல ஒரு சிரிக்க வைக்கும் நடிகராக எண்ணிவிடாதீர்கள். அவரும் சிரிக்க வைத்தவர்தான்; அதோடு மக்களைச் சிந்திக்க வைத்தவர். 'உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைய' ஓடோடிச் சென்று உதவி புரிந்த வள்ளல். துன்பத்திலும் தன் இயல்பான நகைச்சுவையை இழக்காத மன உறுதி படைத்தவர். முந்தைய தலைமுறைக் கலைஞர்தான் என்றாலும் இவரைப் பற்றி ஓரளவாவது இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று உலகம் மிகச் சுருங்கி இருக்கிறது. அன்று, தான் இருக்கும் ஊர்தான் ஒருவனுக்கு எல்லாம். சென்னைக்குச் சென்று வரவேண்டுமானால் கூட அது அன்று பலருக்குக் கைகூடும் காரியமாக இருந்ததில்லை. நாகர்கோயிலுக்கு அருகில் ஒழுகினசேரி எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்து, இளம் வயதில் வறுமையில் கஷ்டப்பட்டு, நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இயற்கையாக இறைவன் அவருக்கு அளித்திருந்த அளவற்ற திறமையினால் முன்னுக்கு வந்து, வாழ்க்கைப் பாதையில் பல மேடு பள்ளங்களைத் தாண்டி, இன்ப துன்பங்களைத் தாங்கி முதுமை அடையாமலே காலமாகிப் போன ஒரு மாணிக்கம் அவர். அவரைப் பற்றி சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.
முதல் பாராவில் சொன்னபடி நாகர்கோயில் அருகிலுள்ள ஒழுகினசேரி அவருடைய ஊர். தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். இவர்களுடைய மூத்த மகன் தான் தமிழகத்தில் புகழின் உச்சியில் இருந்த என்.எஸ்.கே. எனும் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் படித்தது என்னவோ நான்காம் வகுப்புதான். தமிழும் மலையாளமும் இவருக்கு நன்கு தெரியும். தந்தைக்கு பெயருக்கு ஒரு வேலை இருந்தது. தாயார் ஒரு குடும்பத் தலைவிதான். மேல் வருமானத்துக்காக இவர் ஒரு சோற்றுக்கடை வைத்து நடத்தி வந்தார். மிக ஏழ்மையான குடும்பம். கிருஷ்ணன் நாடகக் கொட்டகைக்குச் சென்று அங்கு சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் சினிமா கொட்டகைகள் கிடையாது. எல்லா ஊர்களிலும் நாடகம் போட் ஒரு கொட்டகை இருக்கும்.
1924இல் கிருஷ்ணனின் தந்தை தன் மகனை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். அந்தக் காலத்தில் பல ஊர்களில் பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் நடித்து வந்தனர். அவர்களுக்குப் பகலில் ஒரு வாத்தியார் பாடம் எடுத்து கதை, வசனங்கள் என்று சொல்லிக் கொடுப்பார்கள். பாடத் தெரிந்த பையன்களுக்கு கிராக்கி அதிகம். அப்படியொரு நாடகக் கம்பெனியில் கிருஷ்ணன் சேர்ந்தார். அங்கு பின்னாளில் பிரபல நகைச்சுவை நடிகராம இருந்த டி.எஸ்.துரைராஜ் என்பவரும் இருந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
பிரபல நாடக, சினிமா நடிகரும், தேசியவாதியுமான டி.கே.சண்முகம் அவர்கள் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார். டி.கே.எஸ். அண்டு பிரதர்ஸ் என்று இவர்கள் பிரபலமானார்கள். அவருடைய நாடகக் குழுவின் என்.எஸ்.கிருஷ்ணன் சேர்ந்தார். அங்கு என்.எஸ்.கே. சகலகலா வல்லவனாக விளங்கினார். எந்த நடிகராவது இல்லையென்றால், அவருடைய பாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.
பல ஊர்களிலும் நாடகங்கள் நடித்து வந்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி இவர் நடித்த முதல் தமிழ்ப்படம் 'சதி லீலாவதி' எனும் படம். எம்.ஜி.ஆர். அவர்களும் அந்தப் படித்தில்தான் முதன்முதலாக நடித்துப் புகழ்பெற்று, சினிமாத் துறையின் உச்சிக்குச் சென்றார். திரைப்படங்களில் நடித்தாலும் என்.எஸ்.கே. அவர்களுக்கு நாடகம்தான் முக்கியம். இவர் ஒரு முறை புனே நகருக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது உடன்வந்த ஒரு நடிகையின் நட்பு கிடைத்தது. அவர்தான் டி.ஏ.மதுரம். இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். புனேயில் இருந்த நாளிலேயே இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பாகவே என்.எஸ்.கே. 1931இல் நாகம்மை எனும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். டி.ஏ.மதுரம் இரண்டாம் மனைவி. அதன்பின் மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாகவும் திருமணம் செய்து கொண்டார்.
நாகம்மைக்கு கோலப்பன் எனும் மகனும் டி.ஏ.மதுரத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. வேம்புவுக்கு ஆறு குழந்தைகள், நான்கு மகன்கள், இரண்டு பெண்கள். மதுரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு இவ்விருவரும் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கத் தொடங்கினர். இவர்களுக்கு நல்ல புகழ் கிடைத்து வந்தது. ஓடாத படங்களில் கூட கிருஷ்ணன் மதுரை ஜோடியின் நகைச்சுவைக் காட்சிகளை ஓட்டி வெற்றி பெற்ற படங்களும் உண்டு.
இவருடைய நகைச்சுவைக் குழுவில் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டார்கள். புளிமூட்டை ராமசாமி, சி.எஸ்.பாண்டியன், (குலதெய்வம்) ராஜகோபால், கவிஞர் சுப்பு ஆறுமுகம் போன்றோர் இவருடன் இருந்தவர்கள். இவருடைய மூளையில் உதயமாகி திரையில் உலாவந்து பிரபலமான சில நிகழ்ச்சிகள் உண்டு. அவை "கிந்தனார் காலக்ஷேபம்", "ஐம்பது அறுபது" நாடகம் போன்றவற்றைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள், நாடகங்கள் இவற்றில் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்கள் இருக்கும். ஆகையால் இவரை உரிமை கொண்டாடி பல அரசியல் கட்சிகளும் முயன்றாலும், இவர் திராவிட இயக்கத்தின் பால் இருப்பதைப் போன்ற ஒரு நிலைமையை உருவாக்கி யிருந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களிடம் இவருக்கு இருந்த நெருக்கமும் அந்த நிலைமையை உறுதி செய்வதாக இருந்தது.
"நல்லதம்பி", "பணம்", "மணமகள்" போன்ற இவருடைய படங்கள் அன்றைய நாளில் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தின. இந்தச் சூழ்நிலையில் தான் சென்னையில் 1944இல் "இந்துநேசன்" பத்திரிகை ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இவரும் அன்றைய காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் கோவை திருப்பட முதலாளி, இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைதாகினர். சென்னையில் வழக்கு நடந்து முடிந்து என்.எஸ்.கே., பாகவதர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழ் நாடே அழுதது. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்தனர். முடிவில் 1946இல் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைக்குப் பின் என்.எஸ்.கிருஷ்ணன் சோர்ந்துவிடவில்லை. புதிய நட்புகள், ஆதரவாளர்கள், திரைப்படத் துறையில் புதிய சிந்தனை, புதிய வளர்ச்சி இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு என்.எஸ்.கே. தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டார். சமூகப் படங்களை எடுத்து வெளியிட்டார். நன்றாக சம்பாதித்தார், நன்றாகவும் தான தர்மங்களைச் செய்து, பிறருக்கு உதவிகள் செய்து அவற்றை நல்ல முறையில் செலவிடவும் செய்தார். தன் கையில் இருப்பதை அப்படியே தானம் செய்துவிடும் நல்ல பண்பு அவரிடம் இருந்தது. அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம்.
அவருக்கு வயிற்றில் ஒரு கட்டி வந்து தொல்லை கொடுத்தது. சென்னை பொது மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்து கொண்டும் பலன் இல்லாமல் 1957 ஆகஸ்ட் 30ஆம் நாள் என்.எஸ்.கிருஷ்ணன் இப்பூவுலக வாழ்வை நீத்து புகழுடம்பு எய்தினார். காலங்கள் மாறினாலும், திரைப்படத் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வாழ்விலும் தொழிலிலும் இவர் ஓர் உன்னதமான மனிதனாக வாழ்ந்ததினால் என்றும் இவர் புகழுடம்பு பெற்று வாழ்ந்து வருகிறார். வாழ்க கலைவாணர் என்.எஸ்.கே. புகழ்!







No comments:
Post a Comment