பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 9, 2011

டி.கே.எஸ் சகோதரர்கள்

டி.கே.எஸ் சகோதரர்கள்

தமிழ் நாட்டில் நாடக உலகில் சிறந்து விளங்கிய குழுக்கள் ஏராளம். முந்தைய தலைமுறையில் நாட்டில் அதிக அளவில் நாடகக் குழுக்கள் இருந்தன. சினிமாவின் தாக்கம் சிறிது சிறிதாக நாடகக் கலை கிட்டத்தட்ட அழிந்துவிட்டதென்றே சொல்லலாம். அப்படிப்பட்ட தலை சிறந்த நாடகக் குழுக்களில் டி.கே.எஸ்.சகோதரர்களின் குழு மிகச் சிறப்பான நாடகக் குழு.

இந்தக் குழுவில் சேர்ந்து நடித்து பிரபலமான கலைஞர்கள் ஏராளம். இன்றைய தலை சிறந்த கலைஞராக விளங்கும் கமலஹாசன் இந்தக்குழுவில் உருவானவர்தான் என்பது ஆச்சரியமான செய்தியாகக் கூட இருக்கலாம். டி.கே.எஸ் சகோதரர்கள் என்பது டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகிய சகோதரர்களைக் குறிக்கும்.

இவர்கள் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த டி.எஸ்.கண்ணுச்சாமி பிள்ளை என்பவரின் பிள்ளைகள். இந்தச் சகோதரர்களில் சங்கரன், முத்துசாமி, சண்முகம் ஆகியோர் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் நாடக உலகுக்கு வழிகாட்டியாக ஆசானாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த நாடகக் குழுவில் சேர்ந்தார்கள். சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த நாடகக் கம்பெனியின் பெயரைச் சொல்லவே நீண்ட நேரம் பிடிக்கும், அவ்வளவு பெரிய நீளமான பெயர். "தத்துவ மீனலோசனி வித்யா பால சபா" என்பது அந்தப் பெயர்.

இம்மூவரும் இந்த நாடகக் கம்பெனியில்தான் முதன் முதலாகச் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். இந்தச் சிறுவர்களின் திறமை சுவாமிகளின் நாடகக் கம்பெனிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. திறமை மிக்க இந்த பிள்ளைகள் கிடைத்ததும் ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளுடைய அதிர்ஷ்டம் என்றுகூட சொல்லலாம். பல கதைகள் நாடகங்களாகப் போடப்பட்டன. சங்கரதாஸ் சுவாமிகளே பல நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றவும் செய்தார். அப்படியொரு நாடகத்தில் இந்த மூன்று சகோதரர்களும் ஒரே காட்சியில் மேடையில் தோன்றி நடித்த போது பொது மக்களின் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றனர்.

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியிலிருந்து விலகி பின்னர் எம்.கே.ராதா எனும் பிரபலமான நடிகரின் தந்தையாரான கந்தசாமி முதலியார் நடத்தி வந்த நாடகக் கம்பெனியிலும், கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவர் நடத்திய கம்பெனியிலும் நடிக்கத் தொடங்கினர். இப்படி அந்தக் காலத்தில் நாடகக் கம்பெனிகளை நடத்தி வந்த பெரியோர்களெல்லாம் நன்கு படித்த புலவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்து வந்திருக்கின்றனர்.

இப்படி பல நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்த நல்ல பெயர் வாங்கிய சகோதரர்கள் பிறகு 1925இல் தங்களுக்கென்று ஒரு தனி நாடகக் குழுவை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் பெயர் மதுரை பால சண்முகானந்த சபா என்பது. இது போன்ற நாடகக் குழுவில் சேரும் சிறுவர்களுக்கு அதுவே கலைகளை போதிக்கும் பள்ளிக்கூடமாகப் பயன்பட்டிருக்கிறது. நாடகக் குழுவில் சேர்ந்ததும் இவர்களுக்கு நன்கு பேசப் பயிற்சி தரப்படும். மேடையில் கூச்சமின்றி, பேசவும் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். பாடத் தெரிந்தவர்களுக்கு பாட்டுச் சொல்லித் தரப்பட்டு பாட்டுப் பாடவும் வாய்ப்புகள் தரப்படும். வாய்ப்பாட்டு தவிர இசைக் கருவிகளையும் வாசிக்கத் தகுந்த பயிற்சி தரப்படும். இந்தக் குழுக்கள் தங்களிடம் சேர்ந்த சிறுவர்களை வைத்து ஒரு முழு நேர நாடக நடிகப் பள்ளியாகவே நடத்தி வந்தார்கள்.

இந்தக் குழுக்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அங்கு நாடகம் நடத்துவதற்கு கொட்டகை வாடகைக்கு எடுப்பது முதல், நடிகர்கள் தங்குவதற்கு வீடு, அங்கு சமைப்பது, உணவு உண்ண ஏற்பாடு செய்வது, அந்த வீட்டிலேயே நாடக ஒத்திகை பார்ப்பது, பாட்டுக்கள் பாடிப் பழகுவது போன்ற வேலைகளையும் முழு நேரமாகச் செய்து வருவார்கள். இவர்களுக்கு வாத்தியார் என்பவர் ஒருவர் உண்டு. இவர் மிகக் கடுமையாக வேலை வாங்கி சுமாரான நடிகனைக்கூட சிறந்த நடிகனாக ஆக்கும் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். நமக்குத் தெரிந்து 'யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை' என்பவரைப் பற்றி சொல்லுவார்கள். சிவாஜி கணேசன் போன்றவர்கள் நடித்து வந்த காலத்தில் நாடக வாத்தியாராக இருந்தவர் இவர்.

ஒரு ஊருக்குப் போனால் ஒரு நாடகத்தை ஒரு சில நாட்கள் நடத்துவார்கள். அதற்கு வசூல் குறையத் தொடங்கியதும் புதிய நாடகம் அர்ங்கேறும். இப்படி பல நாடகங்களை ஒரே ஊரில் நடத்தி விட்டு அந்த ஊரைவிட்டுப் போக சில மாதங்கள் கூட ஆகுமாம். இப்படி இந்த டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகம் ஊர் ஊராகச் சென்று நடக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் நாடகங்கள் புராண, இதிகாச, சரித்திர நாடகங்களாகத்தான் இருக்கும். முதன் முதலில் டி.கே.எஸ். சகோதரர்கள் ஒரு சமூக நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள். அதன் பெயர் "குமாஸ்தாவின் பெண்". இது 1937இல் நடந்தது. இதனை எழுதியது சகோதரர்களில் ஒருவரான முத்துசாமி. இந்தக் கதை பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. இந்த நாடகத்தின் வெற்றியின் அடிப்படையில் டி.கே.எஸ்.சகோதரர்கள் பின்னர் பல சமூக நாடகங்களை அரங்கேற்றத் தொடங்கினார்கள்.

தொழிலாளர்களின் கஷ்டங்கள், உழைப்பின் பெருமை, நேர்மையும் வாய்மையும் தரும் உயர்வு இவையெல்லாம் இவர்களின் நாடகங்களில் சொல்லப்பட்ட மையக் கருத்துக்கள். இவர்கள் நாடக மேடையில் தொங்கும் திரைச்சீலையில் எழுதப்பட்ட வாசகம் "உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்" என்பது. இது பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகள் தங்கள் சங்கத்தின் கோஷமாகப் பயன்படுத்தினர். இவர்கள் மேடையேற்றி வெற்றிபெற்ற பல நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை பல. அவை 'ரத்தபாசம்', 'மனிதன்', 'அந்தமான் கைதி', 'உயிரோவியம்', 'கள்வனின் காதலி', 'ஒளவையார்', 'ராஜராஜசோழன்' இவைகளெல்லாம் பெரும்பாலும் தமிழ் நாட்டின் பெரிய நகரங்களிலெல்லாம் நடைபெற்றன. அது தவிர சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் பொருட்காட்சி போன்ற இடங்களிலெல்லாம்

இவர்களது நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. பெரிய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையெல்லாம் இவர்கள் நாடகமாகத் தயாரித்து வந்தனர். சில நாடகங்கள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன. ரத்தபாசம், அந்தமான் கைதி, கள்வனின் காதலி, ஒளவையார், ராஜராஜசோழன் போன்றவை அப்படி வந்த கதைகள்தான். இதில் ராஜராஜசோழன் கதை 'காதல்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அரு.ராமநாதன் எழுதியது. ரத்தபாசம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. அதில் கிஷோர் குமார் தமிழில் டி.கே.சண்முகம் நடித்த பாத்திரத்தில் நடித்தார். இவர்கள் ஒவ்வொருவரையும் அண்ணாச்சி என்றுதான் மக்கள் அன்போடு குறிப்பிடுவார்கள். நல்ல தோற்றம், கெளரவமான வாழ்க்கை, நேர்மை, நேரம் தவறாமை, தமிழ்ப்பற்றி இவைகளெல்லாம் இந்த சகோதரர்களின் குணங்கள்.

இதில் ஒளவையாராக டி.கே.சண்முகம் பெண் வேடமிட்டு நடிப்பதைப் பார்த்தவர்கள் இவர் ஒரு ஆண் என்பதை நம்பவே மாட்டார்கள். ராஜராஜ சோழனில், அந்த சோழ மன்னனை அவன் நாட்களில் பார்க்காதவர்கள் அதில் மன்னனாக நடித்த பகவதியின் கம்பீரத்தைப் பார்த்து அந்த சோழ மன்னனைப் பார்த்த உணர்வினை அடைவார்கள். அமரர் கல்கியின் கதை கள்வனின் காதலி. எம்.ஜி.ஆர். நடித்து வெளியான படம் அந்தமான் கைதி. நாடகக் கலையின் வளர்ச்சிக்கும் புதுமைகளைப் புகுத்தும் ஆர்வத்துக்கும், புதிய நடிகர்களை உருவாக்குவதற்கும் இந்த நாடகக் குழு பெரிதும் பாடுபட்டிருக்கிறது. 1942இல் இவர்கள் நாடகக் கலைக்கென்று அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களை அழைத்து ஒரு மாநாட்டை நடத்தினார்கள்.

டி.கே.சண்முகம் தமிழ், தமிழிலக்கியங்கள் இவற்றின் மீதிருந்த பற்றினால் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தில் சேர்ந்து அதன் பொருளாளராகவும் இருந்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் டி.கே.எஸ். மேடையில் தோன்றும் போது, பளிச்சென்று அவர் அணிந்திருக்கும் கதர் உடையும் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் அங்கவஸ்திரமும், படிய வாரிய தலையும், நெற்றியில் திருநீறும் குங்குமமும் ஒரு தெய்வீகக் களையும் மேதா விலாசத்தைக் காட்டுவதாகவும் இருக்கும். மக்கள் அவரை ஒரு சாதாரண நடிகராகப் பார்க்கவில்லை. தலை சிறந்த இலக்கிய வாதியாக, அரசியல் தலைவராக, பின்பற்ற வேண்டிய நற்குணங்களைக் கொண்ட ஒரு வழிகாட்டியாகத்தான் கருதி போற்றி வந்தார்கள். தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்த்த சிலரில் டி.கே.சண்முகமும் ஒருவர் என்றால் மிகையல்ல.

பின்னாளில் 1950க்குப் பிறகு இவர்கள் நாடகக் குழுவின் பெயர் டி.கே.எஸ்.நாடக சபா என்று மாற்றப்பட்டது. இந்த நாட்களில் தங்கள் குழுவைச் சேர்ந்த நடிகர்களை ஒன்றாக வைத்து நடிக்க வைக்கும் முறையிலிருந்து சற்று மாறி வெளியிலிருந்த பல திறமைசாலிகளைத் தங்கள் நாடகங்களில் நடிக்க வாய்ப்புகளை வழங்கி, தரமான நாடகங்களைக் கொடுத்து வந்தார்கள்.

பின்னாளில் திரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கிய பலர் இவருடைய நாடகக் குழுவில் நடித்து வாழ்விலும், தொழிலிலும் உயர்ந்தவர்கள். சிலரது பெயர்களைச் சொன்னால் உங்களுக்கு விளங்கும். என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, டி.என்.சிவதாணு, ஏ.பி.நாகராஜன், டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வாழ்க்கை என்ற ஏவிஎம் படத்தில் நடித்துப் புகழ்பெற்ற எம்.எஸ்.திரெளபதி, எம்.என்.ராஜம், இப்போதைய தலைசிறந்த நடிகர் கமலஹாசன் போன்றோர் இவர்கள்.

ஆண்களே மேடைகளில் பெண் வேடமிட்டு நடிக்கும் பழக்கத்தை மாற்றி பெண் நடிகைகளை மேடையேற்றிய பெருமையும் டி.கே.எஸ்.நாடகக் குழுவினருக்குத்தான் உண்டு. தமிழ்நாடு மட்டுமல்லாமல், வட இந்தியாவின் பெரு நகரங்களிலும், இலங்கை மலேசியா போன்ற இடங்களிலும் இவர்கள் நாடகங்கள் நடைபெற்றன. சுதந்திர இந்தியாவில் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்ற நாடகங்களை நடத்திய இந்தக் குழு பின்னர் கலைக்கப்பட்டது. நாடகக் கலை உள்ள மட்டும் இந்தக் குழுவினரின் பெயர் நிலைத்திருக்கும். 

No comments:

Post a Comment

You can give your comments here