பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, June 8, 2011

டி.ஆர்.மகாலிங்கம்

டி.ஆர்.மகாலிங்கம்                    

பழைய நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பாவைப் போல பாடக்கூடியவரும், நாற்பது ஐம்பது களில் திரைப்படத் துறையில் நடிகராவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம் பற்றி தெரிந்து கொள்வோமா? பாடவும் நடிக்கவும் தெரிந்த சிலரில் டி.ஆர்.மகாலிங்கம் முக்கியமானவர். மிக அருமையான குரல் வளம், நல்ல பிருகாவுடன் பாடக்கூடிய திறமை, அழகு இவ்வளவும் ஒருங்கே அமைந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம். ஏவிஎம் நிறுவனம் எடுத்த வேதாள உலகம், ஸ்ரீ வள்ளி முதலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பாடல்களும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, ராஜராஜசோழன் போன்ற படங்களிலும் இவருடைய இசை இன்று வரை ஜீவனோடு பாடப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். செந்தமிழ் தேன்மொழியாள் போன்ற இறவா புகழுடைய பாடல்கள் இவருடையவை.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த மகாலிங்கம் இளம் வயதிலேயே நடிப்பிலும், பாட்டிலும் ஆர்வமுடையவராக இருந்தார். அந்தக் கால வழக்கப்படி சிறுவர்களை வைத்து நாடகம் நடத்தும் கம்பெனிகளிலும், தனியாக நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஸ்பெஷல் நாடகங்கள் போன்றவற்றிலும் இவர் கலந்துகொண்டு நடித்து வந்தார். இவருடைய பாட்டுக்காகவே இவரை நாடகங்களில் பாடச் சொல்லிக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம்.

அப்படி இவர் நாடகங்களில் நடித்த நாட்களிலேயே பிரபல பாடகர் எஸ்.சி.கிருஷ்ணன் இவருடைய தோழராக இருந்திருக்கிறார். கிருஷ்ணனுக்கு தனிச்சிறப்பு மிக்க கட்டைக் குரல். அந்தக் குரலோடு இவர் திரைப்படங்களில் பாடிய பாடல்கள் குறிப்பாக நகைச்சுவை நடிகர்களான கே.ஏ.தங்கவேலு போன்றவர்களுக்குப் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பப் பெற்றன. அந்தக் காலத்தில் இப்போது போன்ற ஒலி அமைப்புகள் கிடையாது என்பதால் பாடுபவர்கள் கூட்டத்தின் கடைசியில் உட்கார்ந்திருப்பவருக்குக் கூட கேட்கும்படி உரத்த குரலில் பாடவேண்டும். அதனால்தான் இந்தப் பாடகர்கள் உச்ச ஸ்தாயியில் மிக சுலபமாகப் போய் பாடுவதை நாம் கவனிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் 'காதோடுதான் நான் பாடுவேன்' என்பது போல மெல்லிய குரலில் பாடினாலும், ஒலிவாங்கி அதனை மிக துல்லியமாக பதிவு செய்து விடுகிறது. அப்போது நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒலி அமைப்புகள் எதுவும் இல்லாமல் கூட்டத்தின் சந்தடிகளையும் மீறி, திருவிழா என்றால் அங்கு நடக்கும் மேள தாள சத்தங்களையும் தாண்டி பாடினால்தான் மக்கள் காதுகளுக்கும் போகும், பாராட்டுக்களும் கிடைக்கும். இப்படிப் பாடுவதனால் இவர்களுடைய உடல் சக்தி குறையவும், அதனால் கிட்டப்பா போன்ற பெரிய நாடக நடிகர்/பாடகர்கள் இளமையில் மாண்டு போவதும் சகஜமாக இருந்து வந்தது.

இளம் வயதிலேயே மிக அருமையாகப் பாடிவந்த டி.ஆர்.மகாலிங்கம் கிட்டப்பா போல பாடுகிறார் என்று பெயர் வாங்கிவிட்டார். இந்த நாட்டின் நாடகக் கலைக்கும் இசைத்துறைக்கும் பெருத்த நஷ்டம் கிட்டப்பாவின் இறப்பு. அவர் தனது 28ஆம் வயதில் காலமாகிவிட்டார். அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய டி.ஆர்.மகாலிங்கம் வந்து விட்டார்.

இவருடைய 14ஆம் வயதில் 1937இல் ஸ்ரீ கிருஷ்ணன் பற்றிய ஓர் திரைப்படத்தில் "நந்தகுமார்' என்ற பெயரில் உருவான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை உருவாக்கியவர் காரைக்குடி ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்கள். அப்போது அவர் காரைக்குடியில் சினிமா ஸ்டுடியோ வைத்து படங்களை எடுத்து வந்தார். ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் இளம் வயது லீலைகளை எடுத்துக் கூறும் ஓர் அற்புதமான நூல். அதில் கிருஷ்ணன் சிறு பிள்ளை காலத்தில் நடந்தவற்றை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காது. அப்படி அந்தக் கதை சிறுவயது கிருஷ்ணன் பற்றியது என்பதால் சிறுவனான டி.ஆர்.மகாலிங்கத்தை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் செட்டியார் அவர்கள். மேலும் சிறுவன் மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவன். அந்தப் படம் ஒன்றும் வெற்றிப் படமாக அமையவில்லை. இருந்தாலும் அதில் வந்த பாடல்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றன.

அடுத்து செட்டியார் எடுத்த படம் ஸ்ரீ வள்ளி. அந்தப் படத்தில் மகாலிங்கம்தான் கதாநாயகன். ஸ்ரீ வள்ளி நாடகங்களில் விளம்பரம் செய்யும்போது முருகன் தானாகவும், கிழவனாகவும், வேட்டுவனாகவும் வரும் காட்சிகள் இருப்பதால் அந்தந்த நடிகரின் பெயருக்கு முன்னால் இன்னார் வேலன், வேடன், விருத்தனாக நடிக்கும் என்று எழுதுவார்கள். ஏ.வி.எம். ஸ்ரீ வள்ளி படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், அப்படி வேலன், வேடன், விருத்தனாக வந்து பாடி நடித்தார். அந்தப் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இன்றைய புகழ்பெற்ற நடிகை லக்ஷ்மியின் தாயார்.

அந்தப் படத்தில் மகாலிங்கத்துக்கு நல்ல பெயர் வந்தது. அது முதல் அவருக்கு ஏறு முகம்தான். பல படங்கள் வந்தன. அவற்றில் நடித்தார். செல்வம் சேர்ந்தது. வழக்கம் போல சொந்தத்தில் படம் எடுத்தார். மோகனசுந்தரம் என்ற படத்தில் நடித்த எஸ்.வரலக்ஷ்மியுடன் இவர் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். . அதில் ஓரளவுக்கு இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. சில காலம் சினிமாத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்த இவரை மறுபடி சினிமாவுக்குக் கண்ணதாசன் கொண்டு வந்தார். பின்னர் ஏ.பி.நாகராஜன் வாய்ப்புக்கள் கொடுத்தார். அவருடைய திருவிளையாடல், ராஜராஜசோழன், அகத்தியர் போன்ற படங்களில் இவருக்கு பாட வாய்ப்புகள் கிடைத்தன. டி.ஆர்.மகாலிங்கம் நடித்து வெளியான படங்களின் பட்டியலும் பெரியதுதான். அவை:-

நந்தகுமார்,                                            
ஸ்ரீ வள்ளி,
நந்தனார்,
மனோன்மணி,
வேதாள உலகம்,
சின்னதுரை,
தெருப்பாடகன்,
திருநீலகண்டர்,
விளையாட்டு பொம்மை,
மோகனசுந்தரம்,
மச்சரேகை,
நாம் இருவர்,
பவளக்கொடி,
ஆதித்தன் கனவு,
ஞானசெளந்தரி,
ரத்தினபுரி இளவரசி,
லைலா மஜ்னு,
வேலைக்காரன்,
தயாளன்,
ஆட வந்த தெய்வம்,
இதய கீதம்,
அபலை அஞ்சுகம்,
மணிமேகலை,
அமுதவல்லி,
திருவிளையாடல்,
ராஜராஜசோழன்,
அகத்தியர்,
திருமலை தெய்வம்,
கவலை இல்லாத மனிதன்,
பண்ணையார் மகள்,
மாலையிட்ட மங்கை
போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிய படங்கள்.

மகாலிங்கம் புகழும் செல்வமும் ஓங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். திரைப்பட உலகின் தவிர்க்கமுடியாத ஒரு தீங்கு சிலருக்கு வீழ்ச்சியும் ஏற்படத்தான் செய்யும். அப்படி நல்ல நிலையிலிருந்த டி.ஆர்.மகாலிங்கம், காலமானபோது அப்படியொன்றும் செல்வத்தின் சிறப்போடு இறக்கவில்லை. என்றாலும் மக்களால் மறக்கமுடியாத மனிதராக, இனிமையான பாடல்களுக்குச் சொந்தக் காரராக மக்களின் அன்புக்கு உகந்தவராக இருந்து மறைந்தார். வாழ்க அவர் புகழ்!

No comments:

Post a Comment

You can give your comments here